சனி, 22 ஆகஸ்ட், 2009

நேர்காணல்
இந்தியச் சூழலை உள்வாங்காமல் நக்சலைட்கள் செயல்படுகிறார்கள்: தியாகுநேர்காணல்: மினர்வா & நந்தன்
முதல் பகுதியின் தொடர்ச்சி...அழித்தொழிப்புக்காக ஓரிடத்திற்குச் செல்லும்போது முன்பின் தெரியாதவர்களை எப்படி அணி திரட்டினீர்கள்? அவர்கள் எந்த அரசியல் கொள்கையும் இல்லாதவர்களாகத் தானே இருந்திருப்பார்கள்? அது ஒரு கடினமான வேலை தான். எந்த அறிமுகமும் இல்லாமல் ஒரு கிராமத்திற்குச் சென்று தங்கிவிட முடியாது. ஊரில் ஏற்கனவே அறிமுகமான ஒருவர் எங்களை வேறு ஒரு பெயரில் அறிமுகப்படுத்தித் தான் ஊருக்குள் தங்க வைப்பார். பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் தான் எங்களை அவர்களது ஊருக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவார்கள். அங்கு சென்று ஏதாவது வேலை செய்வது போல் தங்கிக் கொள்வோம். கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருப்பவர்களுடன் பழகி, அதில் சிலரைத் தேர்ந்தெடுத்து, அழித்தொழிப்புக்குத் தயார்படுத்துவோம்.நீங்கள் அழித்தொழிப்புக்குத் தேர்வு செய்யும் இடங்களில் ஏற்கனவே இருக்கும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு இயக்கங்களின் தோழர்களோடு உங்களது உறவு எப்படி இருந்தது?எங்கள் பார்வை இதில் மோசமானதாக இருந்தது. அவர்களை விரோதிகளாக கருதிக்கொண்டு தான் நாங்கள் அந்த ஊருக்குள் நுழைவோம். தஞ்சைப்பகுதியில் பொதுவுடைமை இயக்க நிர்வாகிகளாக இருப்பவர்கள் அனைவருமே நேர்மையான, கட்சிக்காக நன்கு உழைக்கக்கூடிய தோழர்கள். ஆனால் எங்களது பார்வையில் அவர்கள் அனைவருமே விரோதிகள். எனவே அவர்களுக்குத் தெரியாமல் அவர்களை ஒதுக்கிவிட்டுத்தான் வேலை செய்ய வேண்டியிருந்தது. அந்தக் கட்சிகளே நுழையாத புதிய கிராமங்கள் தான் எங்களது முதல் தேர்வாக இருந்தது.உங்களது முதல் அழித்தொழிப்பு பற்றிக் கூற முடியுமா?அழித்தொழிப்பு என்பது ஒரு கொள்கை வடிவம். அதுதான் சரியானது என்பது சாரு மஜூம்தாரின் கருத்து. அந்த வகையில் நான் முதலில் வேலை செய்த கிராமம் திருவாரூர் அருகில் உள்ள பெரும்பண்ணையூர். அங்கிருந்து கொண்டு, முதல் அழித்தொழிப்புக்கு நாங்கள் தேர்வு செய்தது குடவாசல் அருகிலுள்ள பெருமங்கலம் ஊரைச் சேர்ந்த, முனுசாமிசோளகர் என்கிற நிலச்சுவான்தார். அவர்தான் அந்த ஊர் மணியக்காரர். சுற்றியுள்ள எல்லா கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவர்மீது விரோதம் இருந்தது.அந்த ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞன் நாகப்பனின் சகோதரியை சோளகரின் மகன் பாலியல் பலாத்காரம் செய்ய, அதைத் தட்டிக் கேட்கப் போன நாகப்பனை சோளகரின் மகன் கத்தியால் குத்தி விட்டான். இதுதொடர்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் காவல்நிலையத்தில் புகார் செய்யப் போகும்போது, அங்கு அதிகாரியின் நாற்காலியில் சோளகர் உட்கார்ந்திருந்தார். வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று கூறி தாழ்த்தப்பட்ட மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதேபோல் பல நிகழ்வுகள் அவர்களுக்குள் முரண்பாடு வருவதற்குக் காரணமாக இருந்தது.இந்த நேரத்தில் தான் நாங்கள் சோளகரை அழித்தொழிப்பு செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். தோழர் ஏ.எம்.கே.தான் இதற்கு வழிகாட்டியாக இருந்தார். அவர் தலைமையில் அந்த ஊரில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்தப் பகுதி மக்கள் சோளகர் மீது கோபமாக இருந்தபோதும் திட்டமிட்டு அவர்மீது தாக்குதல் நடத்த அவர்கள் தயாராக இல்லை. கூட்டத்தின் முடிவில் ஏ.எம்.கே. எங்களிடம், ‘இந்த ஊரில் யாரும் உங்களுடன் வராவிட்டாலும் பரவாயில்லை, வேறு ஊரிலுள்ள யாரையாவது சேர்த்துக் கொண்டாவது சோளகரை அழித்து விடுங்கள்’ என்று கூறிவிட்டு சென்று விட்டார்.ஏற்கனவே நான் குடவாசல் அருகிலுள்ள தண்டியூர் என்ற கிராமத்தில் வேலை செய்து அங்குள்ள இளைஞர்களை அழித்தொழிப்புக்குத் தயார் செய்து வைத்திருந்தேன். நான், தோழர் மாணிக்கத்தின் மகன் பாலு, இன்னும் இரண்டு இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அழித்தொழிப்புக்குத் தயாரானோம். உண்மையில் நானும், பாலுவும்தான் தாக்குதலில் ஈடுபட்டோம். சோளகர் திருப்பித் தாக்கியதும் மற்ற இருவரும் பயந்து ஓடிவிட்டார்கள். பல இடங்களில் மிக ஆழமான கத்துக்குத்துக்கள் விழுந்தும் சோளகர் பிழைத்து விட்டார். அதுதான் எங்களது முதல் அழித்தொழிப்பு நிகழ்ச்சி.ஆனால் இதில் எங்கள் மீது வழக்குப் பதிவு எதுவும் இல்லாமல் தப்பித்து விட்டோம். சோளகரிடம் மருத்துவமனையில் வாக்குமூலம் கேட்கும்போது தனக்குப் பகையாக அந்த ஊரில் உள்ள அனைவரது பெயரையும் அவர் குறிப்பிட்டார். காவல்துறையினரும் அவர்களைக் கைது செய்தனர். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் கொடி, துண்டறிக்கை எல்லாவற்றையும் விட்டு வந்திருந்தும் யாரும் எங்கள் மீது சந்தேகப்படவில்லை. இது எங்களுக்கு ரொம்பவும் வருத்தமாக இருந்தது.தமிழகச் சூழலில் அழித்தொழிப்பு என்பது எந்தளவுக்கு செயல்பாட்டுக்கு உகந்ததாக இருந்தது?அழித்தொழிப்பு என்கிற ஒரே ஒரு போராட்ட வடிவம் தான் சரி என்கிற சாரு மஜூம்தாரின் அணுகுமுறையே மிக செயற்கையானதாகும். இதை என்னுடைய சிறை வாழ்க்கையின்போதுதான் உணர முடிந்தது. தமிழகத்திற்கு வரும்போது, எங்களைப் பார்த்ததும் சாரு கேட்கும் முதல் கேள்வியே, ‘அனிலேஷனுக்குத் தயாராக எத்தனை பேர் இருக்கிறார்கள்’ என்பது தான். ‘அடுத்து யாரைக் கொலை செய்யப்போகிறீர்கள், எத்தனை நாட்கள் தேவைப்படும், சரி உடனடியாக தயாராகி விடுங்கள். தமிழ்நாட்டில் இருந்து கிளம்பும் முன் எனக்கு நல்ல செய்தி கிடைக்க வேண்டும்’ என்று கூறிவிட்டுப் போய்விடுவார். இதுதான் அவரது உரையாடல் பாணி.அந்தப் பகுதியின் நிலைமை என்ன, அந்தப் பகுதி மக்களின் உடனடித் தேவை என்ன, இப்படி ஒரு போராட்டம் எடுபடுமா என்பது பற்றியெல்லாம் அவருக்குக் கவலையே கிடையாது. அவரது வழியில் தான் அழித்தொழிப்புக்கு நாங்கள் ஆட்களைத் தயார் செய்ய வேண்டியிருந்தது. அது பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்தது. கல்லூரியில் இருந்து நான் வரும்போது என்னைப் போல் வந்த தோழர்கள் பலரும் நடைமுறைச் சிக்கல்களை தாக்குப்பிடித்து நிற்க முடியாமல் வெளியேறி விட்டார்கள். ‘அழித்தொழிப்பின் விளைவாக புரட்சி வரும், சமூகம் மாற்றம் பெறும்’ என்ற போதனையைக் கேட்டு ஒரு வேகத்தில் கிளம்பி வந்தவர்கள், அது நடக்காமல் போனதால் ஏற்பட்ட விரக்தியில் சோர்ந்து போனார்கள்; வேறு வேலைகளுக்குப் போய்விட்டார்கள்.பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் இயக்கத்தில் ஆர்வம் கொண்டு எங்களுக்கு நிறைய உதவிகள் செய்து வந்தார். எத்தனை தோழர்கள் வந்தாலும் அவர்களைக் கல்லூரி விடுதியில் தங்கவைப்பது, அவரது ஊருக்கு வரும் தோழர்களைத் தங்க வைப்பது என பல உதவிகள் செய்வார். அவரை இயக்கத் தலைமை ‘படிப்பை விட்டு விட்டு முழுநேர வேலைக்கு வா’ என்றழைத்தது. அவரும் வந்தவுடனே ‘அழித்தொழிப்பு செய்து விடலாம்’ என்ற நம்பிக்கையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தார். மிக ஏழ்மையான குடும்பம் அவருடையது, பால் வியாபாரம் செய்து தான் அவரது தந்தை அவரைப் படிக்க வைத்தார்.அந்தத் தோழரை ஏதாவது கிராமத்திற்கு அனுப்பினால் போன நான்காவது நாள் திரும்பி விடுவார். அவரால் அங்கு ஆட்களைத் திரட்ட முடியவில்லை. அழித்தொழிப்புக்குப் போகும் தோழர்களுக்கு கருத்துக்கள், வழிமுறைகள் சொல்வதைத் தவிர இயக்கம் வேறு எந்த உதவியும் செய்வதில்லை. செலவுக்குப் பணமும் கொடுப்பதில்லை. நாங்களாகவே அங்கு சென்று வேலை செய்து எங்களது தேவைகளை கவனித்துக் கொண்டு, அழித்தொழிப்புக்கு அங்குள்ள ஆட்களை தயார் செய்து வேலையை முடிக்க வேண்டும். இது எல்லோராலும் முடிவதில்லை. நடைமுறைக்கு சாத்தியமில்லாத இந்த நடவடிக்கைகளால் பொறியியல் தோழருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. அதற்கு முன்னால் எங்களிடம், ‘ஒவ்வொருவரையாக அழிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு மாலையில் ஆரம்பித்து மறுநாள் காலைக்குள் ஒரு பகுதி நிலச்சுவான்தார்கள் அனைவரையும் அழித்து விட வேண்டும்’ என்பார். கபிஸ்தலம் மூப்பனாரில் தொடங்கி பூண்டி வாண்டையார் வரை இருபதுக்கும் மேற்பட்ட நிலச்சுவான்தார்கள் பெயரையும் ஒரே இரவில் அவர்கள் அத்தனை பேரையும் அழிப்பதற்கான திட்டத்தையும் சொல்வார் அவர்.மனநலம் பாதிக்கப்பட்ட பின்பு எங்காவது ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு தீக்குச்சியாகக் கிழித்து, ‘பூண்டி வாண்டையார் அவுட், மூப்பனார் அவுட். எல்லோரையும் குளோஸ் பண்ணிட்டேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவரை திரும்பவும் வீட்டிற்கே கொண்டுபோய் விட்டுவிட்டோம். நன்றாகப் படிக்கும் மாணவர் என்பதால் கல்லூரி நிர்வாகமும் அவரை சேர்த்துக் கொண்டது. அவர் படிப்பு முடிந்ததும் அவரது குடும்பம் அவரை வேறு மாநிலத்திற்கு அனுப்பி விட்டது. உண்மை நிலைக்குப் பொருத்தமில்லாத, புறச்சூழலை உள்வாங்காத கொள்கைகளால் இதுபோல் மனநிலை பாதிக்கப்பட்ட தோழர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.இதுபோன்ற நிலையை நீங்கள் இயக்கத் தலைமையிடம் எடுத்துச் சொல்லவில்லையா?இயக்கத் தலைமையெல்லாம் எதுவும் கிடையாது. சீனாவில் எப்படி மாசேதுங் தலைமையை யாரும் கேள்வி கேட்காமல் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முழக்கம் எழுப்பப்பட்டதோ, அதேபோல் சாரு மஜூம்தாரின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒருகட்டத்தில் முழக்கம் கூட எழுப்பப்பட்டது. சாரு மஜூம்தார் ஒரு சர்வாதிகாரியாகத் தான் செயல்பட்டார். மிகச் சாதாரண காரணங்களுக்காக இயக்கத்தில் பலரை அவர் வெளியேற்றினார். தொழிற்சங்கமே கூடாது என்றார். ‘வர்க்க எதிரியின் இரத்தத்தில் கை நனைப்பவனே உண்மையான கம்யூனிஸ்டு’, ‘பத்து அழித்தொழிப்புக்களை மேற்கொண்டவன் இந்த உலகத்தில் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை’ என எந்நேரமும் அழித்தொழிப்பு பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார் அவர்.உங்கள் கைதுக்குக் காரணமான அழித்தொழிப்பு பற்றி கூற முடியுமா?சோளகர் கொலை முயற்சிக்குப் பிறகு, சிலநாட்கள் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டோம். பிறகு இரண்டாவது அழித்தொழிப்புக்குத் திட்டமிட்டோம். அப்போது தோழர் ஏ.எம்.கே.வும் இன்னும் சில தோழர்களும் தஞ்சை, புதுக்கோட்டை பகுதிகளில் அழித்தொழிப்பு வேலைகளில் தீவிரமாக ஈடுபடுபட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இணைந்து கொண்டோம். எனக்கு அப்போது பத்தொன்பது வயது. என்னுடன் வேலை செய்தவர்கள் இருபத்தெட்டு, முப்பது வயதுடையவர்களாக இருந்தார்கள்.அடுத்த அழித்தொழிப்பாக திருவாரூர் முத்து தங்கப்பாவைத் தேர்வு செய்தோம். அவர் யூனியன் சேர்மேனாக இருந்து அந்தத் தேர்தலில் தோற்றுப் போயிருந்தார். ஜாதி ஆதிக்கம் உடையவர். சொந்த சாதி ஆட்களைத் தவிர மற்றவர்களிடம் வெறுப்பை சம்பாதித்திருந்தார். காவல்நிலையத்தில் கூட அவர் சொல்வதைத் தான் கேட்கும் நிலை இருந்தது.அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். அருகில் நெருங்க முடியாத அளவுக்கு சுற்றிலும் ஆட்களுடனே வலம் வந்து கொண்டிருந்தார். தொடர்ந்து கண்காணித்தபோது விடியற்காலையில் குளக்கரைக்கு தனியாக வருவார் என்பதை அறிந்தோம்.தோழர் லெனின் தலைமையில் நாங்கள் அங்கே அவருக்காக காத்திருந்தோம். வெகுநேரம் கழித்து வந்த அவர் எங்களைப் பார்த்ததும், ‘யாருடா, திருட்டுப் பயல்களா?’ என்று கேட்டவாறே எங்களை நெருங்கினார். நாங்கள் மெதுவாக நகர ஆரம்பித்ததும், ஓடப்போகிறோம் என நினைத்த அவர் சுற்றி வயல்களில் வேலை செய்தவர்களை சத்தம்போட்டு அழைத்தார். தூரத்தில் ஆட்கள் ஓடிவர, அவரும் கீழே கிடந்த கற்களை எடுத்து எங்களை நோக்கி வீச ஆரம்பித்தார். உடனடியாக கையில் இருந்த அரிவாளால் தோழர் லெனின் அவரை வெட்ட, மீதமுள்ள நான்கு பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டினோம்.ஓடிவந்த அந்த கிராமத்து ஆட்களில் ஒருவர் எங்களில் ஒருவரைப் பிடித்துவிட, தோழரை மீட்பதற்காக அவரது கழுத்திலும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினோம். அந்த ஊரின் அமைப்பு தெரிந்தவர்கள் தப்பித்து விட, நான் மாட்டிக் கொண்டேன். அந்த ஊர் மக்களுக்கு நான் நக்சலைட் என்றோ, நடந்தது அழித்தொழிப்பு என்றோ சொன்னால் எதுவும் புரியாது, நம்பவும் மாட்டார்கள். அந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் அப்பு செட்டியார் தான் ஆள்வைத்து கொலை செய்து விட்டதாக அவர்கள் நம்பினார்கள்.என்னிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டும் நான் பேசாமல் நின்று கொண்டிருந்தேன். என்னை முத்துதங்கப்பா இறந்து கிடக்கும் இடத்திற்குக் கொண்டு சென்று அவர் தலைமீது என் தலையை வைத்து வெட்ட வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் காவல்துறையினர் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். அங்கு யாதவராஜ் என்ற விசாரணை அதிகாரியிடம், நான் யார் என்பதையும் எங்கள் நோக்கத்தையும் கூறினேன்.கொலை நடந்த இடத்தில் ‘உனக்கு ஏன் மரணதண்டனை’ என்று கொலைக்கான காரணத்தை சுவரில் எழுதியிருந்தோம். கூடவே கொடி, மாவோ சிலை ஆகியவற்றை விட்டு வைத்திருந்தோம். கொலையை முடித்த பிறகு அங்கு நின்று முழக்கங்கள் எழுப்பி விட்டுத்தான் தப்பி ஓடினோம். இதையெல்லாம் அதிகாரியிடம் கூறினேன். அவர் அதையெல்லாம் கைப்பற்றி வந்தார். அவருக்கு இந்தக் கொலைக்கான காரணங்கள் புரிந்து விட்டது. அவர் நக்சலைட் பிரிவு போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். ஏழு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அழித்தொழிப்பில் ஈடுபட்ட இன்னும் இரண்டு தோழர்களை இரண்டு நாட்களில் கைது செய்தார்கள். கீழ்க்கோர்ட்டில் ஆயுள்தண்டனையும், மறுவிசாரணையின்போது நாகை நீதிமன்றத்தில் எனக்கு மரண தண்டனையும் கொடுக்கப்பட்டது.எங்களது அழித்தொழிப்பின் நோக்கம் ‘ஒரு பகுதியில் அழித்தொழிப்பு நடைபெற்றால் அங்கு மக்களிடையே மனமாற்றம் ஏற்படும், நிலச்சுவான்தார்கள் பயந்து ஓடிவிடுவார்கள், அங்கு நிலச்சீர்திருத்தம் நடைபெறும், அந்த இடத்தை புரட்சிக்கான அடித்தளமாக மாற்றிவிடலாம்’ என்பது தான். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. முத்து தங்கப்பா கொலையைப் பொறுத்தவரை அந்தப் பகுதியில் அது கடுமையான சாதிப்பிரச்சனையாகத் தான் பார்க்கப்பட்டது.அவர் கொலை நடந்த அன்று தாழ்த்தப்பட்ட பகுதி மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். எங்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டபோது அவரது சாதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். ஆனாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதில் இந்த சம்பவம் கொஞ்சம் தைரியத்தை ஏற்படுத்தியது என்பது உண்மை. ஆனால் அது மட்டுமே எங்கள் நோக்கமாக இருக்கவில்லை.சிறை வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது? இந்திய நாட்டின் சட்டப்படி அரசியல் கைதி என்ற வகைப்பிரிவே கிடையாது. தாக்குதல் என்றல்ல, அரசியல் காரணங்களுக்காக ஓர் உண்ணாவிரதம் மேற்கொண்டால் கூட அவர்கள் மீது தற்கொலை முயற்சி வழக்கு தான் பதிவு செய்யப்படும். மறியல் செய்தால் ‘அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தார்’ என்று தான் வழக்குப் பதிவு செய்யப்படும்.எங்களை நக்சலைட் விசாரணைக் கைதி என்று சொல்லி தனியாக அடைத்து வைத்து விட்டார்கள். சாதாரண கைதிகளாக இருந்தால் அவர்களுக்கு சில சுதந்திரங்கள் இருக்கும். அரசியல் கைதி என்றால் படிக்க, எழுத, நண்பர்களைச் சந்திக்க என்று சில வசதிகள் இருக்க வேண்டும். அதனால் எங்களை அரசியல் கைதியாக நடத்த வேண்டும் என்று போராடினோம். ‘புத்தகங்கள் படிக்க, வெளியிலிருந்து வரும் புத்தகங்களை வாங்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இருபத்து நான்கு மணிநேரமும் கொட்டடியில் பூட்டியே வைக்கக்கூடாது. நாங்கள் இருந்த சிறையில் கழிப்பறை வெளியே கிடையாது. கொட்டடிக்குள் ஒரு மண்சட்டியை கொடுப்பார்கள். உள்ளேயே துணி துவைத்து, குளித்து உள்ளேயே இருக்க வேண்டும். எனவே வெளியே கழிப்பறை கட்டித்தர வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வைத்துப் போராடினோம். போராட்டம் என்றால் உண்ணாவிரதம் தான். இந்தப் போராட்டங்கள் சிறையில் எங்களுக்கு ஒரு பெரிய மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தது. சென்னை சிறையில் நாங்கள் இருக்கும்போது அங்கே மிசா கைதிகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறை அடக்குமுறைகளை மிசா கைதிகளால் தாங்கவும் முடியவில்லை, எங்கள் அளவுக்கு அதை எதிர்த்துப் போராடவும் முடியவில்லை.மிசா காலத்தில் அரசியல் தலைவர், எம்.பி, எம்.எல்.ஏ. யாருக்கும் ஒரு மரியாதையும் கிடையாது. ஆனால் அதே நேரத்தில் நக்சலைட் என்றால் சிறையில் தனி மரியாதை இருந்தது. அவர்கள் தான் ‘அடித்தால் திருப்பி அடி’ என்ற முழக்கத்தை சிறைக்குள்ளேயே எழுப்பியவர்கள். கொண்ட கொள்கைக்காக கைதாகி, சிறைக்கு வந்திருந்ததால் நக்சலைட் கைதிகள் சிறைக்குள்ளும் தங்களது கொள்கை எதையும் விட்டுக் கொடுக்காமல் இருந்தோம். மிசா கைதிகளிடம் அந்தளவுக்கு கொள்கையும் கிடையாது; அதனால் போராட்டக் குணமும் கிடையாது.சென்னை சிறை மிசா கைதிகளில் ஆற்காடு வீராசாமியும் ஒருவர். அவர் ஏற்கனவே நிறைய அடிகளை வாங்கியிருந்தார். அதேநேரத்தில் அவர் அடிக்குப் பயந்தவர். உபயத்துல்லா என்ற காவல்துறை அதிகாரி மேசையில் உட்கார்ந்திருப்பார். இவர் அவரது காலுக்குக் கீழே சென்று அமர்ந்து தன்னை அடிக்கக்கூடாது என்று கெஞ்சிக் கொண்டிருப்பார். அதற்குப் பதிலாக தனது வீட்டில் சென்று பணம் வாங்கிக்கொள்ளச் சொல்வார்.அதே நேரத்தில் சிட்டிபாபு, முரசொலி மாறன், சி.பி.எம்.கட்சியைச் சேர்ந்த சிவாஜி போன்றோர் சிறை நிர்வாகத்தை எதிர்த்து தைரியமாகப் போராடினார்கள். இவர்களால் தான் சிறையில் பல மாற்றங்கள் வந்தது. ஸ்டாலினை முதலில் கடுமையாக அடித்ததோடு திருச்சி சிறைக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்தி விட்டார்கள்.சிறையில் நக்சலைட்களின் போராட்டம் எப்படி இருந்தது?முதலில் எங்களது கோரிக்கைகளுக்காகப் போராடினோம். அடுத்தகட்டமாக சிறைக்குள் இருப்பவர்களோடு கலந்து அவர்களை இணைத்துக் கொண்டு ஏதாவது போராட்டம் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம்.அப்போது சிபிஎம் கட்சித் தோழர் ஏ.ஜி.கே. எங்களுடன் இருந்தார். அவர் எங்களுக்குப் பெரிய உந்துதலாக இருந்தார். அவர் சிறைக்குள் இருந்து கொண்டே காவலர்கள் இருபத்தைந்து பேரைத் திரட்டி அவர்களது கோரிக்கைகள் நிறைவேற ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். சிறைப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு, விண்ணப்பங்களை அவர்தான் எழுதிக் கொடுப்பார். ‘எங்களை நாகை கிளைச் சிறைக்கு மாற்றும்போது அங்கிருந்து தப்பித்து விடுவது’ என்று நாங்கள் திட்டம் தீட்டியபோது, ஏ.ஜி.கே. தான் உள்ளேயிருந்து அனைத்து உதவிகளையும் செய்தார். ஆனால் திட்டம் தோல்வியில் தான் முடிந்தது.‘சிறைப்படுத்தப்பட்டோர் நல உரிமை சங்கம்’ என்ற சங்கத்தையும் தோழர் ஏ.ஜி.கே.தான் ஏற்படுத்தினார். உரிமைக்குரல் என்ற பத்திரிகை நடத்தினார். நானும் அதில் எழுதினேன். அவரது உந்துதலின் பேரில் எழுத்தறிவு இயக்கம் ஒன்றை ஏற்படுத்தினோம். எழுதப் படிக்கத் தெரியாத தூக்குத்தண்டனை கைதிகளுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுத்தோம். அதே நேரத்தில் அரசியல் ரீதியாக அழித்தொழிப்பு, ஆயுதப் போராட்டம் என்கிற எங்களுடைய பழைய கருத்திலிருந்து விடுபட்டோம். எல்லாப் போராட்ட வடிவங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்கிற தெளிவு கிடைத்தது.நீங்கள் ஒரு கொள்கையை நம்பி வீட்டைவிட்டு வெளியேறுகிறீர்கள். பல இழப்புகளுக்குப் பின் கைதாகி, தூக்குத் தண்டனையும் கிடைக்கிறது. அந்த நேரத்தில் ஏற்றுக் கொண்ட கொள்கை தவறு என்று பட்டபோது எப்படி இருந்தது?புரட்சி மற்றும் அதன் மீதான நம்பிக்கை என்பது புனிதமானது. அந்த நம்பிக்கையை என்றுமே மாற்றிக்கொள்ள முடியாது. அதில் உறுதியாக பிடிப்பு வைத்து விட்டேன். அந்தப் புரட்சிக்கு இதுதான் சரியான அமைப்பு என்பதிலும் அதே அளவு நம்பிக்கை வைத்தாகி விட்டது. இதில் ஏதோ தவறு என்கிறபோது சில வழிமுறைகளில் ஏற்பட்ட தவறு என்றுதான் இயல்பாகவே முதலில் தோன்றும்.சிறையில் இருக்கும்போது வழக்கம்போல் மே நாள் கொண்டாடுவது, ஆகஸ்டு புரட்சி கொண்டாடுவது, அன்று எங்களுக்குள் கூட்டங்கள் நடத்துவது என்று ஏதாவது நடக்கும். அந்த நேரத்தில் அழித்தொழிப்பு மீதான நம்பிக்கை முழுவதுமாகப் போய்விட்டது. முதன்முதலில் ஏ.எம்.கே.வை சந்தித்தபோதே ‘அவர் அழித்தொழிப்பு தனிமனித பயங்கரவாதமாக மாறிவிடுமோ’ என்ற தன்னுடைய அச்சத்தைத் தெரிவித்திருந்தார்.‘அழித்தொழிப்பில் மக்களுக்கு என்ன பங்கு’ என்பதுதான் எங்கள் முன் இருந்த பெரிய கேள்வியாக இருந்தது. மக்களின் பங்கு இல்லாத எந்தப் போராட்டமும் மக்களைத் திரட்ட உதவாது என்பதில் தீர்மானமாக இருந்தோம். “சீனத்தின் பாதை நமது பாதை, சீனத்தின் தலைவர் நமது தலைவர்” என்பது தான் அப்போது நாங்கள் நீதிமன்றத்தில் எழுப்பிய முழக்கம். சீனத்தின் பாதை எது என்பதை ஆராய்ந்தபோது எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.வெகுஜனப் போராட்டம் தான் சரி என்பது சீனத்தின் கொள்கை. ‘நாங்கள் பார்லிமெண்டில் பங்கேற்கவில்லை என்று யாரும் எங்கள் மீது குறைசொல்ல முடியாது. ஏனெனில் இங்கு பார்லிமெண்டே கிடையாது’ என்று மாவோ சொல்கிறார். ‘நாங்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் இங்கு தேர்தலே நடைபெறவில்லை’ என்றும் அவர் சொல்கிறார். தொடர்ந்து சீன வரலாற்றைப் படிக்கும்போது வெகுஜனப் போராட்டத்திற்கு எப்படி அவர்கள் தயாராகிறார்கள், அமைதிப் போராட்டத்திற்கு வாய்ப்பிருந்தால் அதையும் செய்யத் தயாராய் இருக்கிறார்கள் என்பதும் புரிந்தது.அன்று ஜூலை 1 சீனக் கம்யூனிஸ்டு கட்சியின் நிறுவன நாள். அன்று சிறைக்குள் எங்களுக்கிடையே பல்வேறு விதமான விவாதங்கள் எழுந்தது. சீனப்புரட்சிக்கும் இந்தியப் புரட்சிக்குமான வேறுபாட்டை நான் அறிக்கையாக முன்வைத்தேன். அதில் முக்கியமான வேறுபாடாக நான் குறிப்பிட்டது ‘சீனா ஒரே மொழி பேசுகின்ற மக்களைக் கொண்ட நாடு. இந்தியா பலமொழிகளைப் பேசக்கூடிய ஒரு நாடு. அங்கு மொழி, புரட்சிக்கு ஒரு தடையாக இல்லை, இங்கு மொழி புரட்சிக்கு ஒரு தடையாக இருக்கிறது. இதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்’ என்று பேசினேன்.72ம் ஆண்டு என்று நினைக்கிறேன். சாரு மஜூம்தார் கைதாவதற்கு முன்பு பீகாரில் தலைமறைவாக இருந்து கொண்டு ஒரு பேட்டி கொடுத்தார். கேள்வியில், ‘சீனப்பாதைதான் உங்கள் பாதை என்றால் அங்கு நடந்தது போல் ஒரு நீண்ட பயணம் நடக்குமா?’ என்று கேட்கப்படுகிறது. சாரு பதிலில், “நிச்சயம் நடக்கும். ஆந்திராவில் இருந்து வங்கத்தின் முடிவு வரை இந்த நீண்ட பயணம் நடக்கும்” என்று சொல்கிறார். அப்போது ஆந்திராவிலும், வங்கத்திலும் பெரிய அளவில் அழித்தொழிப்பு நடந்து கொண்டு இருந்தது.சிறை நண்பர்கள் இதுகுறித்து என்னிடம் கேட்டனர். ‘சீனாவின் நீண்ட பயணம் கேண்டண் தொடங்கி ஏனான் வரை நடைபெற்றது. அங்கு அனைவரும் சீனமொழி பேசுபவர்கள். இங்கு ஆந்திராவில் தெலுங்கு பேசும் மக்களோடு புறப்படும் நாம் ஆந்திர எல்லையைக் கடந்து மத்தியப்பிரதேசம் அல்லது ஒரிசாவிற்குள் நுழைந்ததுமே வேறு மொழி பேசும் மக்களை எதிர்கொள்ள வேண்டும். எனவே இங்கு நீண்ட பயணம் சாத்தியமில்லை’ என்று சொன்னேன்.அப்போதிருந்த மனநிலைப்படி ‘இந்தியப் புரட்சி என்பது சாத்தியம். ஆனால் அதற்கு மொழி தடையாக இருக்கிறது. அதைக் கடப்பதற்கு இன்னமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்ற கருத்தே இருந்தது. இதேபோல் தொடர்ந்து ஐந்தாறு நாட்களுக்கு எங்களுக்குள் கடுமையான விவாதம் நடைபெற்றது.உங்களுடன் கைதான மற்ற தோழர்கள் இந்த விவாதத்தை எப்படி எதிர்கொண்டார்கள்?அப்போது நக்சலைட் கைதிகள் பலருக்கு ‘இன்னும் சில ஆண்டுகளில் புரட்சி வெற்றிபெற்று விடும்’ என்ற தீர்க்கமான நம்பிக்கை இருந்தது.‘எழுபதுகளை புரட்சிகளின் பத்தாண்டுகளாக்குவோம்’ என்று சாரு மஜூம்தார் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதாவது எண்பதுக்குள் புரட்சி வெற்றி பெற்று விடும் என்பதுதான் அதன் சாரம். அதை நாங்களும் நம்பினோம். 70ம் ஆண்டு இறுதியில் கைதாகி நான் சிறைக்கு வந்தேன். 71ல் புலவர் கலியபெருமாள் கைதாகி சிறைக்கு வந்தார். நீதிமன்றம் செல்வதைப் புறக்கணிப்பது, சிறையில் இருந்து தப்பிக்க முயல்வது போன்ற வேலைகளில் நாங்கள் ஈடுபடுவதை அவர் மிகவும் பாராட்டினார்.அவர் சொல்வார், ‘இதுதான் சரி. ஏன்னா புரட்சி ரொம்ப சீக்கிரமா வந்துட்டிருக்கு. 80 எல்லாம் ஆகாது, 75ம் ஆண்டிற்குள் புரட்சி நடந்து முடிந்து விடும், அதான் சாரு சொல்லிட்டார்ல’ என்று சொல்வார்.புலவரின் மனைவி அவரை சந்திக்க வருவார். அவர் சொல்வார், ‘நீங்க ஒரு நாலுபேர் இங்க, புள்ளைங்க நாலு பேர் வேலூர் ஜெயில்லே. இவ்வளவுபேருதான் சொல்லிட்டிருக்கீங்க. நாட்டுலே ஒரு புரட்சியும் காணோம்’ என்பார். புலவர் ‘அதெல்லாம் உனக்கு விளங்காது’ என்று சொல்லிவிடுவார். அந்தளவுக்கு, புரட்சி மீதான தவறான நம்பிக்கை எங்களிடம் இருந்தது.அந்த நேரத்தில் தான் லெனினின் “புரட்சிகர வாய்ச்சொல்” என்ற புத்தகத்தைப் படித்தேன். அது என்னுள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற வெற்று நம்பிக்கைகளைத் தாக்கி எழுதப்பட்ட புத்தகம் அது. ரஷ்யாவில் ஏற்பட்ட போருக்குப் பின், மக்கள் அமைதியை விரும்பினார்கள். ஆனால் கெரன்ஸ்கி அரசு போரை தொடர்ந்து நடத்தியது. ‘உடனடியாக போரை நிறுத்த வேண்டும்’ என்று லெனின் விரும்பினார். அப்போது ரஷ்யாவின் சில பகுதிகளை ஜெர்மனி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதை போரின் மூலம் மீட்கும் வல்லமை ரஷ்யாவிடம் இல்லை.அந்த நேரத்தில் ஜெர்மனி ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ட்ராட்ஸ்கி தான் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர். அவரிடம் ‘போரின் மூலம் ரஷ்யாவை இழந்தாலும் பரவாயில்லை, தொடர்ந்து போரை நடத்த வேண்டும்’ என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. கட்சிக்குள் மூன்று பிரிவுகள் உருவானது. லெனினின் கருத்து கட்சிக்குள் சிறுபான்மையாகி விட்டது. சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு ஜெர்மனி என்ன மோசமான நிபந்தனை விதித்தாலும் அதை ஏற்றுக்கொண்டு போரை நிறுத்த வேண்டும் என்பதே லெனினின் கருத்தாக இருந்தது.‘நம்முடைய நாட்டின் சில பகுதிகளை ஜெர்மனி தன்னோடு இணைத்துக் கொள்ளப் போகிறது, எனவே தொடர்ந்து போரிடுவோம். தோற்றாலும் பரவாயில்லை, அது புரட்சிக்கு உதவும். மேலும் ஜெர்மனியில் பாட்டாளி வர்க்கப் புரட்சி நடைபெறப் போகிறது. அந்தப் புரட்சி வெற்றி பெற்றால் ஜெர்மனி ரஷ்யாவின் பகுதிகளை தன்னோடு இணைத்துக் கொள்ளாது. அதன்பிறகு நமக்கும் அவர்களுக்கும் பகை இருக்காது. அந்தப் புரட்சி வெற்றி பெறும்வரை நாம் தொடர்ந்து போரிடுவது தான் சரி’ என்பது ட்ராட்ஸ்கியின் கருத்தாக இருந்தது.மூன்றாவது தரப்பு, ‘இப்போது போரும் வேண்டாம், சமாதானப் பேச்சுவார்த்தையும் வேண்டாம், ஜெர்மனி புரட்சி விரைவில் வெற்றி பெறும், அதன்பின் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும்’ என்றது. ஆனால் லெனின் இவை எல்லாவற்றையும் மறுத்தார். ‘போரினால் நிறைய இழந்து விட்டோம். எனவே எவ்வளவு அவமானம் வந்தாலும் அதை தாங்கிக் கொண்டு உடனடியாக போரை நிறுத்த வேண்டும்’ என்றார். அதில் முக்கியமான கருத்தாக, ‘ஜெர்மானியப் புரட்சி எப்போது வெற்றி பெறும்?’ என்ற கேள்வியை எழுப்பினார்.அதற்குப் பதிலாக அவரே, ‘ஜெர்மனியில் மட்டுமல்ல உலகின் எல்லாப் பகுதிகளிலும் புரட்சி நடைபெறப் போகிறது, அது வெற்றிபெறப் போகிறது என்பதை நம்புவது வேறு. இந்த கோடைக்காலத்திற்குள் முடிந்து விடும், இந்த குளிர்காலத்திற்குள் நடந்து விடும் என்ற நம்புவது வேறு. இது வெறும் வாய்ச்சொல்’ என்று சொன்னார். அதன்பிறகு லெனினுக்கு கட்சிக்குள் ஆதரவு பெருகியது. அமைதி தான் சரி என்று பெரும்பாலானோர் ஒத்துக்கொண்டனர்.அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ட்ராட்ஸ்கி சென்றார். பேச்சுவார்த்தைக்கான உடை அணிந்து வரவில்லை என்று கூறி அவர் அங்கே அனுமதிக்கப்படவில்லை. லெனினும், ட்ராட்ஸ்கியும் புரட்சியாளர்கள். மேடை நாகரிகமோ, உடை நாகரிகமோ, சரியான அலங்காரமோ அறியாதவர்கள். அதனால் அங்கிருந்து அவர் லெனினுக்கு தந்தி கொடுத்தார். ‘குறிப்பிட்ட உடையில் தான் வரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள். நான் என்ன செய்வது?’ என்று கேட்டிருந்தார். பதிலுக்கு லெனின், ‘ஒருவேளை கவுனில் வரச்சொன்னால் கவுன் அணிந்து கொண்டு போ. நமக்கு அமைதிதான் முக்கியம்’ என்று பதில் அனுப்பினார். நாட்டின் அமைதிக்காக அவமானகரமான அந்த ஒப்பந்தம் நஷ்ட ஈட்டோடு நிறைவேறியது.‘புரட்சிக்கு நாள் குறிப்பது வெறும் வாய்ச்சொல்’ என்பதைப் படித்தவுடன் இந்தியாவில் புரட்சி 80க்குள் வரப்போகிறது என்ற வார்த்தைகளின் மீதே நம்பிக்கை போய்விட்டது. ருஷ்யப் புரட்சியை மற்ற தோழர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக என்னிடம் ஆங்கிலத்தில் இருந்த புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்தேன். புரட்சி குறித்த லெனினின் கருத்துக்கள் மிகப் புதியதாக இருந்தன. அதைப் படிக்கப் படிக்க நம் நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். பெரிய தவறு நடந்து விட்டது புரிந்தது. ‘சீனத்தின் பாதை நமது பாதை’ என்பதெல்லாம் எவ்வளவு அபத்தம் என்பது புரிந்தது.லெனின் மீண்டும் மீண்டும் ஒரு கருத்தை வலியுறுத்துவார், ‘எது புறநிலை உண்மைகளோ அதிலிருந்து தான் முடிவுகளுக்குச் செல்ல வேண்டும். ஏற்கனவே முடிவு செய்த கருத்தை வைத்துக் கொண்டு பேசக்கூடாது’ என்று. என்னுடன் இருக்கும் தோழர்கள் ஏற்கனவே பல முடிவுகளை வைத்துக் கொண்டு நடக்கும் சம்பவங்களை அதில் பொருத்திப் பார்ப்பவர்களாக இருந்தார்கள். ‘இயக்கத்தின் அடிப்படை கொள்கைகள் மீதே எனக்கு சந்தேகம் இருப்பதாக’ நான் கூறியபோது அவர்களுக்குக் கடுமையான கோபம் உண்டானது. எனவே நான் அவர்களுடன் விவாதிப்பதை நிறுத்தி விட்டு படிக்க ஆரம்பித்தேன்.1973 அக்டோபர் 1 சீனப்புரட்சி நாளன்று ‘கட்சிக்கு மறுப்பு’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினேன். அதில், கட்சியின் அடிப்படையை ஆராய வேண்டும் என்று விவாதித்திருந்தேன். ‘இப்போது எம்.எல். கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை ஆராய்கிறபோது அஸ்திவாரம் இல்லாத கட்டிடமாக அது எழுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த அமைப்பு எவ்வளவு அழகாக, ஈர்ப்புடையதாக, தியாகங்களின் அடிப்படையில் கட்டப்பட்டிருந்தாலும் அது உடைந்து சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது’ என்று எழுதியிருந்தேன். தோழர்கள் கொதித்துப் போனார்கள். அவர்களிடம் மீண்டும் நான் தெளிவாக ‘நீங்கள் கோபப்படுவதில் எந்த அர்த்தமுமில்லை. இது சுக்குநூறாக உடையத்தான் போகிறது. ஒரு அமைப்பாகக் கூட இது நீடிக்காது. ஏனெனில் இதன் அடிப்படையே தவறு’ என்று கூறினேன். இதைக் கேட்டதும் அடுத்த செல்லில் இருந்த தோழர் குருமூர்த்தி கதறி அழுதார். இன்னுமொரு தோழர், சுவரில் இருந்த இரத்தக்கறைகளைப் பார்த்து, ‘போன வருடம் இதே இடத்தில் தானே போராட்டம் நடத்தி, இரத்தம் வருமளவுக்கு போலிசிடம் அடிபட்டு துன்பப்பட்டோம். எதற்காக இத்தனை துயரங்களையும் தாங்கினோமோ அதுவே தவறா?’ என்று திக்கித்திணறி பேசினவர் கலங்கி நின்று விட்டார். அவரால் அந்த உண்மையைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.அவருக்கு நான் அலெக்ஸாண்டரை பற்றிக் கூறினேன். லெனினின் சகோதரர் அலெக்ஸாண்டர் ஜார் மன்னரைக் கொலை செய்ய முயற்சி செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார். இது லெனினை மிகவும் பாதித்தது. இந்த நிகழ்ச்சி லெனினின் வாழ்க்கை வரலாறு நூலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. லெனின் வீட்டிற்கு வருகிறார். பக்கத்து வீட்டில் அவரிடம் ஒரு செய்தித்தாளை காண்பிக்கிறார்கள். அதில் ‘Alexander Hanged’ என்று இருக்கிறது. அடுத்த நொடி லெனின் சொல்வார், ‘இதற்கான விலையை அவர்கள் எனக்கு செலுத்தியே ஆகவேண்டும்’ என்று.அலெக்ஸாண்டர் தான் லெனினுக்கு புரட்சிப் பாதையை காண்பித்தவர். ஆனாலும் அண்ணனின் பாதையை லெனின் நிராகரித்தார். விலை பெறுவதற்காக ஜார் மன்னரையோ, நீதிபதியையோ, அதிகாரிகளையோ தேடிச்சென்று கொலை செய்யவில்லை. மாறாக மன்னராட்சியை ஒழிப்பதற்காக ரஷ்ய மக்களைத் தான் திரட்டினார். எது நடைமுறைக்கு சரியான தத்துவமோ அதை எடுத்துக்கொண்டார்.அதே போல் மாவோவின் மேற்கோளையும் உதாரணமாகக் காட்டினேன். ‘தனிமனிதனா அமைப்பா என்று வரும்போது அமைப்பு தான் முக்கியம். அமைப்பா, அரசியலா என்று வரும்போது அரசியல் தான் சரி. கடந்த காலத்தில் தனிமனிதனா அமைப்பா என்ற கேள்வி வந்தபோது அமைப்பு என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து சிறையில் இருக்கிறோம். இப்போது அமைப்பா, அரசியலா என்ற கேள்வி நம்முன் நிற்கிறது. அமைப்பு என்பதே அரசியலுக்காகத்தான். அரசியல் தவறாகப் போனபிறகு அமைப்பை தூக்கிப் பிடிக்க முடியாது’ என்று சொன்னேன்.‘ஒரு சரியான விஷயத்திற்காக தூக்கில் தொங்கப்போகிறோம் என்ற திருப்தியில் தூக்குக்கயிற்றின் அடியில் நிற்கும்போது தான் செய்தது தவறு என்று தெரிந்தால் எப்படி தாங்கிக் கொள்வது’ என்று கேட்டார் தோழர். உண்மையில் அவருக்கு மட்டுமல்ல அந்தக் கணம் எனக்கும் ஜீரணிக்க முடியாததாகவே இருந்தது. ‘தூக்கில் போனாலும் பரவாயில்லை, இனியுள்ள தலைமுறைக்கு நாம் வந்த பாதை தவறு என்பதை சொல்லிவிட்டுத் தான் சாக வேண்டும்’ என்று கூறினேன்.சிறையில் இருக்கும்போது நீங்கள் செய்த மிக முக்கியமான பணி மூலதனத்தை மொழிபெயர்த்தது. அந்த எண்ணம் எப்படி ஏற்பட்டது?சிறைக்குச் செல்லும் வரை மார்க்ஸ், லெனினின் எழுத்துக்களை அதிகம் படித்தது இல்லை. படித்திருந்தால் சாரு மஜூம்தாரின் எழுத்துக்கள் என்னை ஈர்த்திருக்காது. சிறைக்குள் நான் முதலில் படித்தது லெனினின் புத்தகங்கள். அதுதான் எல்லா புத்தகங்களையும் தேடிப்படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. மார்க்சின் கூலி, உழைப்பு போன்ற சிறுசிறு புத்தகங்களைப் படிக்கும்போது தான் இதற்கெல்லாம் அடிப்படை மார்க்சின் ‘மூலதனம்’ என்பது தெரிந்தது. என்னுடைய மாமா தான் மூலதனம் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தனுப்பினார்.சிறையில் இருந்த தோழர் லெனினும், ஏ.ஜி.கே.வும் நான் மூலதனத்தை மொழிபெயர்க்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அதன்படி 75ல் அந்த வேலையை ஆரம்பித்தேன். 76 நடுவில் மூலதனத்தின் முதல் பகுதியை மொழிபெயர்த்து முடித்து விட்டேன். 77ல் என்னை மதுரை சிறைக்கு மாற்றினார்கள். அங்கிருந்து மொழிபெயர்த்த பகுதிகளை தோழர் பாலசுப்பிரமணியத்துக்கு அனுப்பினேன். அவர் என்.சி.பி.ஹெச்சிடம் ஒப்படைத்தார். அவர்கள் கிருஷ்ணையாவிடம் கொடுத்து கருத்து கேட்டார்கள். அவர் நல்ல மொழிபெயர்ப்பாளர். சோவியத்தில் 12 வருடங்கள் தங்கி இருந்து பல புத்தகங்களை மொழிபெயர்த்தவர். பல மூலதன மொழிபெயர்ப்புகளை நிராகரித்தவர். ஆனால் அவர் என்னுடைய புத்தகத்தை வெளியிடலாம் என கருத்து தெரிவித்தார்.மொழிபெயர்ப்பை மாஸ்கோவிற்கு அனுப்பினார்கள். அவர்கள் மூன்று பகுதிகளையும் சேர்த்து வெளியிடலாம் என கருத்து தெரிவித்தார்கள். 79 கடைசியில் மீதமுள்ள இரண்டு தொகுதிகளையும் மொழிபெயர்த்துத் தருமாறு தோழர் பாலசுப்பிரமணியம் என்னிடம் கேட்டார். அப்போது நான் சென்னை சிறையில் இருந்தேன். 80 ஜனவரி இறுதியில் தொடங்கி ஏப்ரல் 22 ம் தேதி இரண்டாம் பகுதியை மொழிபெயர்த்தேன். தினமும் இவ்வளவு நேரம் என திட்டமிட்டு இந்த வேலையைச் செய்தேன். ஒருநாள் இரவு இரண்டு மணிக்கு ஆரம்பித்து மறுநாள் இரவு இரண்டு மணிவரை கூட எழுதியிருக்கிறேன்.மே 1ம் தேதி மூன்றாம் தொகுதியை ஆரம்பித்து நவம்பர் 7ம் தேதி மொழிபெயர்த்து முடித்தேன். என்னுடைய புத்தகங்களோடு கலந்து அதை வெளியே அனுப்பினேன். அதன்பிறகு அடுத்தடுத்த வருடங்களில் திருச்சி, கடலூர் என பலச் சிறைகளுக்கு மாற்றப்பட்டேன். அந்த நேரத்தில் என்னுடைய மொழிபெயர்ப்பு மாஸ்கோவில் அச்சாகிக் கொண்டிருந்தது. அச்சகத்தில் வேலை செய்பவர்களுக்குத் தமிழ் தெரியாததால் ஒவ்வொரு எழுத்தையும் பெரிதாக வடிவமைத்து வைத்துக்கொண்டு உருவத்தைப் பார்த்து ஒவ்வொரு எழுத்தாக அச்சேற்றிக் கொண்டிருந்தார்களாம்.அந்த நேரத்தில் சோவியத் வீழ்ந்தது. இதில் என்னுடைய மொழிபெயர்ப்பும் காணாமல் போனது. ஆனால் என்.சி.பி.ஹெச்சிடம் அதனுடைய தட்டச்சு வடிவம் இருந்தது. அதை அவர்கள் ஒரு காப்பி ரைட்டரிடம் கொடுக்க அவர் அதை தப்பும் தவறுமாக திருத்தி வைத்திருந்தார். அதை மீண்டும் திருத்தி வடிவமைப்பதற்காக, ‘மூன்று வருடங்கள் தொடர்ந்து மாஸ்கோவில் தங்கியிருக்க மொழிபெயர்ப்பாளரை அனுப்ப முடியுமா’ என்று மாஸ்கோவில் இருந்து கேட்டார்கள். நான் அப்போது சிறையில் இருக்கிறேன். விடுமுறையில் இரண்டு மூன்று நாட்கள் தான் வெளியில் வந்து போக முடியும். இதற்கு முன்னரே என்னுடைய தூக்குத் தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டதைக் குறிப்பிட வேண்டும்.எனவே புத்தக வடிவமைப்பை சென்னையிலே செய்யலாம் என முடிவெடுத்து நான் சென்னை சிறைக்கு மாற்றல் வாங்கி வந்தேன். சிறையில் இருந்து கொண்டே அதன் திருத்த வேலைகளில் ஈடுபட்டேன். 85 நவம்பர் கடைசியில் விடுதலையானேன். மொழிபெயர்ப்புக்குத் தேவைப்பட்டது இரண்டு ஆண்டுகள் தான். ஆனால் அதை திருத்தி அமைப்பதற்கு ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டது. அத்தனை உழைப்பையும் கொடுத்து எல்லா வேலைகளையும் முடித்த பிறகு புத்தகம் வெளிவர வேண்டாம் என என்.சி.பி.ஹெச்சில் முடிவெடுத்து விட்டார்கள்.கலைஞர் ஆட்சிக்கு வந்ததைப் பயன்படுத்திக்கொண்டு நாகநாதன், ஜெமதக்னியின் மூலதன மொழிபெயர்ப்பைக் கொண்டு வர முயற்சி செய்தார். கலைஞரின் முன்னுரையோடு ஐந்து லட்ச ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீட்டோடும் அது வெளிவந்தது. மிக அபத்தமான புத்தகம் அது.அப்போதும் ‘செலவு அதிகமாகும்’ எனக் கூறி என்னுடைய புத்தகத்தை வெளியிட என்.சி.பி.ஹெச் யோசித்தது. ‘முன்வெளியீட்டு திட்ட அறிவிப்பு வெளியிடலாம்’ என்ற யோசனையைக் கூறினேன். அதன்படி பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டார்கள். நல்ல வரவேற்பு இருந்தது. புத்தகமும் வெளிவந்தது. எங்கள் புத்தக அளவிற்கு ஜெமதக்னியின் புத்தகம் விற்கவில்லை.என்னுடைய மொழிபெயர்ப்பிலும் முதல் புத்தகம் மட்டும்தான் சரியாக வந்திருப்பதாகக் கருதுகிறேன். இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் புரிந்து கொள்ள கடினமானவை. மார்க்ஸ் முதல் தொகுதிக்காக இருபத்தைந்து ஆண்டுகள் செலவிட்டார். இரண்டாம் தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளும், மூன்றாம் தொகுதிக்கு 9 ஆண்டுகளும் எடுத்துக்கொண்டார். முதல் தொகுதி ஒரு இலக்கியத் தரத்தோடு இருக்கும். இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் வெறும் ஆய்வுக்குறிப்புகளாக இருக்கும். இன்னமும் யாராவது தமிழில் அதை எளிமையாக மொழிபெயர்க்க முன்வந்தால் அவர்களுக்கு குறிப்புகள் தரத் தயாராக இருக்கிறேன். என்னுடைய வாழ்நாளில் இன்னொரு முறை மூலதனத்தை எளிமையாக மொழிபெயர்ப்பது சாத்தியமா என்று தெரியவில்லை.சிறையில் இருந்து வெளி வந்தபிறகு சிபிஎம் கட்சியில் சேர்ந்தீர்கள். அதற்கு என்ன காரணம்?நான் காங்கிரசில் இருந்தபோதே சி.பி.எம். செயலாளராக இருந்த பாலசுப்பிரமணியம் என்ற தோழருடன் நல்ல பழக்கம் இருந்தது. சிறையில் இருந்தபோது மீண்டும் அவருடன் தொடர்பு ஏற்பட்டது. எமர்ஜென்சி காலகட்டத்தின்போது சி.பி.எம்., “நாடு ஒரு சர்வாதிகார அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்திராகாந்தியின் நடவடிக்கைகள் பாசிசத் தன்மையுடையது” என்ற கருத்தை வெளியிட்டது. இது எங்களை ஈர்த்தது. சி.பி.ஐ. அடக்குமுறைக்கு ஆதரவாக இருந்தது. சி.பி.எம். தான் அதை உறுதியோடு எதிர்த்தது.‘சீனா போன்று ஒரே மொழி பேசக்கூடிய நாடாக இந்தியா இருந்தால், சிறந்த நிர்வாகத்தை கொடுக்கக்கூடிய அரசாக சி.பி.எம்.தான் இருக்க முடியும்’ என்ற நம்பிக்கை வந்தது. அந்த நம்பிக்கை இப்போதும் இருக்கிறது. ஆனால் இந்தியா பலமொழிகளைப் பேசுகின்ற, பல சாதிகளைக் கொண்ட நாடாக இருப்பதால் தான் அது சாத்தியமில்லாமல் இருக்கிறது. சாதி, மொழி இரண்டு பிரச்சனைகளும் இல்லாத இந்தியாவிற்கு அறிவியல் பூர்வமான வேலைத்திட்டம் என்பது சி.பி.எம்முடையது தான். ஆனால் அவை இரண்டும் இந்தியாவில் பிரச்சினைகளாக இருப்பதும், அவை குறித்து சி.பி.எம். கவனம் கொள்ளாமல் இருப்பதும்தான் இன்றளவுக்கும் அந்தக் கட்சிக்கு இருக்கும் பெரிய பலவீனம். நக்சலைட்களும் அப்படித்தான் இருந்தார்கள். சாதியை ஓர் உணர்ச்சி அடிப்படையில் தான் அணுகினோம்.தேசிய இன சுயநிர்ணய உரிமையையும் தோழர்கள் பாலசுப்பிரமணியம், சுந்தரய்யா போன்றவர்கள் ஆதரித்தார்கள். ராமமூர்த்தி, ஈ.எம்.எஸ்.போன்றவர்கள் எதிர்த்தார்கள். இந்த ஒரு நிலைப்பாட்டைத் தவிர மற்ற கொள்கைகளில் எங்களுக்கு சி.பி.எம்.முடன் வேறுபாடு இருக்கவில்லை. எனவே சி.பி.எம்.மில் சேருவது என முடிவெடுத்தோம். 75ல் இதுகுறித்து பாலசுப்பிரமணியத்துக்கு கடிதம் எழுதினோம். அவர் எங்களை சிறையில் வந்து சந்தித்தார். அதிலிருந்து நாங்கள் சி.பி.எம். உறுப்பினர்கள் தான். சிறையிலிருந்து விடுதலையாகி, பின்பு கட்சியிலிருந்து நான் நீக்கப்படும் வரை சி.பி.எம். உறுப்பினராக இருந்தேன்

வியாழன், 30 ஜூலை, 2009

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை - நேர்மையான தீர்வை நோக்கி நகரட்டும் தீவு நாடு கி. வரதராசன்
இலங்கையில் ராணுவத்திற்கும் எல்டிடிஇயினருக்கும் இடையே கடந்த 33 ஆண்டுகளாக நடைபெற்று வந்தமோதல் முடிவுக்கு வந்து விட்டது. இந்த ராணுவ மோதலில் எல்டிடிஇ தரப்பில் உயர்மட்டத் தலைவர்கள் உள்ளிட்டு பெரும் உயிர்ச்சேதத்தை எதிர் கொள்ள நேரிட்டுள்ளது; இலங்கை ராணுவத்திற்கும் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட் டுள்ளது.பல லட்சக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாறி, சொல்லொண்ணா துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.இலங்கையின் கடந்த கால வரலாற்றை உற்று நோக்குபவர் யாருக்கும், இந்த மோதலுக்கான விதைகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பேயே விதைக்கப்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தியா வைப் போலவே இலங்கையும் வெள்ளையர் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், இந்தியாவில் கடைப்பிடித்தது போன்றே அங்கேயும் வெள்ளையர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடித்தனர். மேற்கத்தியக் கல்வி பெறும் வாய்ப்பு பெற்றவுடன், அரசு உத்தியோகங்களுக்கான மோதல்களும் அங்கு சிங்களவர்கள் தமிழர்களிடையே எழுந்ததைக் காண முடியும். அதே போல இன ஆராய்ச்சி என்ற பெயரில் சிங்களவர்களை ஆரியர்கள் முன்னேறியவர்கள் என்றும், தமிழர்களைப் பின்தங்கியவர்கள் திராவிடர்கள் என்றும் பிரித்துக் காட்ட முயன்றதையும்காண முடியும். அங்கு இது மேற்கத்திய வரலாற்று வல்லுநர்களால் சிங்கள மக்களின் பெருமையைப் பேசுவது என்ற பெயரில் அழுத்தமாகச் செய்யப்பட்டது.விடுதலை பெற்ற இலங்கையில் ஆட்சிக்கு வந்தவர்கள், பிரிட்டிஷார் ஏற்படுத்திவிட்டுச் சென்ற ஏற்றத்தாழ்வான பாகுபாட்டைச் சரி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, தங்களுடைய சொந்த வர்க்க நலன்களையும், தங்கள் வாக்கு வங்கியையும் பாதுகாக்க அவை மேற்கொண்ட நடவடிக்கைகள், சிங்களம் மற்றும் தமிழ்மக்கள்மத்தியில் வேற்றுமையை வளர்த்தன. இன்றைய தினம் இலங்கையில், உள்ள மக்கள் தொகையில் 75 சதவிகிதத்தினர் சிங்கள மொழி பேசுபவர்கள். 69 சதவிகிதத்தினர் புத்தமதத்தைப் பின்பற்றுபவர்கள். இந்தப் பின்னணியில் ஆளும் கட்சியினர் தங்கள் மக்களை என்றென்றும் பிரித்து வைத்துக் குளிர் காய்ந்திட, சிங்கள மொழியையும், புத்த மதத்தையும் பயன்படுத்திக் கொண்டனர்.இத்தகைய ஏறுமாறான வளர்ச்சிப் போக்கில்,தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் எண்ணற்றப் போராட்டங்கள் வெடித்தன. 1956, 1958, 1978, 1981 மற்றும் 1983 களில் நடைபெற்ற இத்தகைய போராட்டங்கள் அனைத்தும் அக்காலங்களில் ஆட்சியிலிருந்தவர்களால் கடுமையான முறையில் நசுக்கப்பட்டன. இவற்றில் மிகவும் மோசமான நிகழ்வு, 1983 ஜூலையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகும். இந்த இனப்படுகொலையில் ஈடுபட்டக் கயவர்களில் ஒருவர் கூட இன்று வரை, சட்டத்தின் முன்கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடாகும். இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் இரண்டுமே ஆட்சி மொழிகளாக இருந்தன. அரசாங்கமும் மதச்சார்பற்ற அரசாக இருந்து வந்தது. ஆனால் 1972ஆம் ஆண்டைய அரசியல் சட்டத்திருத்தம் சிங்களத்தை இலங்கையின் ஆட்சிமொழியாகவும், புத்த மதத்தை நாட்டின் பிரதான மதமாகவும் பிரகடனம் செய்தது.ஆட்சியாளர்களின் இத்தகைய வெறித்தனமான நடவடிக்கைகள், தமிழ் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவானது. கம்யூனிச இயக்கங்களிலும் மற்றும் ஈழத்தில் சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக உருவாகியிருந்த இயக்கங்களிலும் இயங்கிவந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள்தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராட முன்வந்தனர். சோசலிசத் தமிழ் ஈழம் அமைப்பதே தங்கள் குறிக்கோள் என்று கூறினர். ஆனால் நாளடைவில் இதில் ஈடுபட்ட இளைஞர்கள் பல்வேறு சிறுசிறு குழுக்களாகச் சிதறுண்டனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, செல்வநாயகம் அவர்களால் அமைக்கப்பட்டது. இது பின்னர் எல்டிடிஇ, பிளாட், இபிஆர்எல்எப், ஈரோஸ், இபிடிபி, டெலோ என்று எண்ணற்றப் பிரிவுகளாக மாறிப் போயின. மேலும் அவை அனைத்தும் ஆயுதப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்தன. இவற்றில் எல்டிடிஇ தவிர மற்ற அனைத்து இயக்கங்களும் ஒரு கட்டத்திற்குப் பிறகு, பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு, தமிழர்கள் வாழும் பகுதிக்குக் கூடுதல் அதிகாரங்களுடன் புதிய அமைப்புச் சட்டம் உருவாக வேண்டும் என்று நிலை எடுத்தன.எல்டிடிஇஐப் பொறுத்தவரை இவர்கள் அனைவரும் துரோகிகள் என்றும், அரசின் ஏஜெண்டுகள் என்றும் குற்றம் சாட்டியது மட்டுமின்றி, இந்த இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களை, ஊழியர்களை ஆயுதத் தாக்குதல்கள் மூலம் கொன்றழிக்க முற்பட்டது. பல்வேறு குழுக்களைச் சேர்ந்த உமா மகேசுவரன், பத்மநாபா, அமிர்தலிங்கம், யோகேசுவரன், சட்டமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து முதலான தலைவர்கள் எல்டிடிஇயினரால் கொல்லப்பட்டவர்களில் ஒருசிலர். சரியாகச் சொல்வதென்றால், சிங்கள இன வெறியர்களால் கொல்லப்பட்டவர்களைவிட, எல்டிடிஇயினரால் கொல்லப்பட்ட தமிழர் தலைவர்களே அதிகம். இவர்களின் சர்வசாதாரணமான கொலை பாதக நடவடிக்கைகள், நம் நாட்டின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை மிகக் கொடுமையான முறையில் படுகொலை செய்யும் எல்லைக்கே சென்றன.இலங்கையை ஆண்ட ஜெயவர்த்தனே அரசாங்கம், சிங்கள வெறியுடன் ஆட்சியை நடத்தியது. தமிழர்களின் உரிமைகளையும் தமிழ் மொழியையும் புறக்கணித்தது. தமிழர் அமைப்புகளை ஆயுதப்போராட்டத்தை நோக்கி நகர்த்தியமைக்கு ஜெயவர்த்தனே அரசின் நடவடிக்கைகளே அடிப்படைக் காரணங்களாகும். அதே சமயத்தில், தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திட, இத்தகைய அர்த்தமற்ற யுத்தத்திற்கு ஒரு சுமூகமான தீர்வு கண்டிட எல்டிடிஇயினரும் தயாராக இல்லை. எல்டிடிஇயினரின் ஒரே குறிக்கோள் தங்கள் தலைமையின் கீழ் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதே. இத்தகைய போக்கானது அங்கு வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கவில்லை. மாறாக, சொல்லொண்ணா துன்பதுயரங்களையே கொண்டு வந்துள்ளது.எல்டிடிஇ தலைவர்பிரபாகரன்,ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனி ஈழத்தைஅமைக்கப் பலமுறை அறிவித்திருக் கிறார். இதற்கான போராட்டம் கடந்த 33 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஆனால், கடைசியாக, இலங்கை அரசாங் கம் எல்டிடிஇயினரின் கட்டுப்பாட்டி லிருந்த அனைத்துப் பகுதிகளையும் கைப் பற்றியிருக்கிறது. இவ்வாறு அங்கு நடைபெற்று வந்த யுத்தம், பல லட்சக்கணக்கான மக்களைக் காவு கொடுத்தபின், பல லட்சக்கணக்கான மக்களைத் தங்கள் சொந்த மண்ணிலேயே வீடற்றவர்களாக, அகதிகளாக, அடையாளமற்றவர்களாக ஆக்கியபின் துயரந்தோய்ந்த ஒரு முடிவுக்கு வந்துள்ளது. என்ன செய்ய வேண்டும்?இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்க ளர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த மோதலுக்கு ஓர் அரசியல் தீர்வு காண என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போதைய பிரதான கேள்வியாகும். இலங்கை வரலாற்றில்,1960ல் ஏற்பட்ட சாஸ்திரிசிரிமாவோ பண்டார நாயகா ஒப்பந்தம், 1987இல் ஏற்பட்ட ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனே ஒப்பந்தம் உள்ளிட்ட எண்ணற்ற முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வொப்பந்தங்கள் அனைத்திலுமே, தமிழர்களின் உரிமைகள் தொடர்பாகவும், தமிழர் வாழும் பகுதிகளில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது தொடர்பாகவும்எண் ணற்ற நல்ல சரத்துகள் இடம்பெற்றன. ஆனால்,அவை பெருமளவுக்கு அமல்படுத்தப்படவில்லை. இலங்கையில் ஆட்சியிலிருந்த இருக்கும், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியல் கட்சிகள் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் எவ்விதத் தீர்வும் காணப்படாமல், இனத் துவேஷம் தொடர்வதே தங்கள் அரசியல் எதிர்காலத் திற்குப் பாதுகாப்பு என்று கருதின. இந்திய அரசாங்கமும் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தேவகுண சேகரா இலங்கைப் பிரச்சனை பற்றி கூறிய கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. இடதுசாரிகளைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சனைக்கு விரைவாக தீர்வுகாணப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது ஒரு தேசியப் பிரச்சனை. ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சி இதற்குத் தீர்வு காண முடியாது என்பதுதான் வரலாறு நமக்கு அளித்துள்ள படிப்பினையாகும். கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கையின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். கூட்டு முயற்சி எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.இவை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்கள் மட்டுமல்ல; இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் சிங்கள மக்களில் ஜனநாயக உள்ளம் கொண்ட அனைவரின் சிந்தனையுமாகும். இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை, குறைபாடுகளை ஆட்சியாளர்கள் செவிமடுக்கத் தவறியதன் விளைவாகவே எல்டிடிஇ உருவானது என்பதை இலங்கை ஆட்சியாளர்கள் மறந்துவிடுவது மாபெரும் முட்டாள்தனமாகும். சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்களுக்கும் அனைத்து உரிமைகளும் நீட்டிப்பதை உத்தரவாப்படுத்த இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட இந்திய அரசு இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.யுத்தத்தில் துயருற்று வேதனைக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு ஐ.நா. ஸ்தாபனம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக உணவு மற்றும் மருந்துப் பொருள்களை அளிக்க இலங்கை அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.சொந்த மண்ணிலேயே வீடற்றவர்களாக மாறியிருக்கும் மக்களுக்கு இப்போது அளித்துள்ள வசதிகள் மிக மிகக் குறைவானவை. இவர்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு அவர்களை விரைவாக அவர்கள் சொந்த ஊரிலேயே வீடுகள் கட்டித் தந்து, புனரமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்.தற்போது வீடுகளை இழந்து, அகதிகள் போல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை நீண்ட காலத்திற்கு அவ்வாறே வைத்திருக்க, அரசு கருதியிருப்பதுபோல் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.மேலும், புதிதாகக் குடியமர்த்தப்படும் சமயத்தில் அங்கே சிங்களவர்களைக் குடியமர்த்திடவும் அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் விரைவாக அவர்களது பழைய இடங்களில் குடியமர்த்தப்படுவதே இத்தகைய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ள நிலைமையை மாற்றித் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற இலங்கை அரசு முயலவேண்டும். தமிழர் பகுதிகளில் உள்ள கெடுபிடி நடவடிக்கைகள் தளர்த்தப்பட வேண்டும். விசாரணையின்றி சிறையிலடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ள நிலையில், அங்கு வாழும் மக்களுக்கு சிறப்புப் பொருளாதாரத் திட்டங்களை அமல்படுத்திட வேண்டும்.இலங்கையின் ஆட்சிமொழியாக சிங் களம் இருந்தது. பின்னர் தமிழும் இலங்கையின் ஆட்சிமொழி என்று சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆயினும் இது இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.நாடு முழுவதும் இரு மொழிகளும் ஆட்சி மொழிகள் என்பது உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் கடைப்பிடிக் கப்பட வேண்டும். அரசாங்க வேலைகளில் போதிய அளவில் தமிழர்கள் அமர்த்தப்பட வேண்டும். இனியும் காலத்தை வீணடிக்காமல் நியாயமான மற்றும் நேர்மையான முறையில் அதிகாரப் பரவலாக்கும் திட்டத்தைஅரசு செயல்படுத்த வேண்டும்.இலங்கையில் இயல்பு வாழ்க்கைத் திரும்பிட சர்வதேச சமூகம், குறிப்பாக இந்தியா, முக்கிய பங்காற்றிட வேண்டும்.

நன்றி : முழக்கம்
ஊடகங்கள் - இழந்துபோன ஜனநாயகம் - பி. சாய்நாத் எஸ்.ஜி.ரமேஷ்பாபு
நமது நாட்டின் ஆன்மாக்கள் வாழுமிடம் என அழைக்கப்படும் இந்திய கிராமங்களின் அவல ரேகைகள் மீது பல ஆண்டுகளாக பயணம் செய்து அம்மக்களின் துயரங்களை பொதுத்தளத்தில் விவாதப் பொருளாக மாற்றி கவனத்தை ஈர்த்துவரும் பத்திரிகையாளர், மகசேசே விருதுபெற்ற சாய்நாத் அவர்கள் சென்னையில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நாளைய பத்திரிகையாளர் முன்பு ஆற்றிய உரையை இந்திய சமூக விஞ்ஞான கழகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. பத்திரிகைகள், தொலைகாட்சிகள், இணையம், வார,மாத இதழ்கள் என ஊடகங்கள் முன்னெப்போதையும் விட அதிகமாகவும், விரைவாகவும் செய்திகளை மக்களிடம் கொண்டு வருகின்றன. நடப்பில் உள்ள செய்தியை மக்களுக்கு கொடுப்பது என்ற ஊடக மரபைத் தாண்டி செய்தியை உற்பத்தி செய்யும் பணியை ஊடகங்கள் செய்து வருகின்றன. தாங்கள் நினைப்பதையே முக்கியத்துவம் நிறைந்த செய்தியாக மக்கள் மனதில் பதியவைக்க முடிகிறது. பிரம்மாண்டமான பன்னாட்டு நிறுவனங்கள் செய்தித்துறையில் எந்த செய்தியை பரபரப்பாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்பவையாக மாறிவருகின்றன. கேளிக்கைகளுக்கு முன்னுரிமைக் கொடுப்பதும், யதார்த்தத்தில் உள்ள மக்கள் பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளுவதும் சாதாரண நிகழ்வாக மாறிவருகிறது.தாங்கள் நினைப்பதுதான் உலகத்தின் முக்கிய செய்தி என்று செயல்படும் போக்கின் விளைவு என்னவென்றால் உலக அழகிப் போட்டிக்கு முதல் பக்கம் ஒதுக்குவதும், நமது நாட்டின் தலைநகரில் குளிரால் ஐந்து பேர் இறந்து போனது உள்பக்கத்தில் மிகச்சிறிய செய்தியாக வருவது என்றாகிவிட்டது. உலக அழகிப் போட்டியில் பங்கெடுத்த அழகிகளின் உணவு, உடை, அலங்காரம், அவர்களது உதட்டுச்சாயம், உள் ஆடைகளின் வண்ணம், முகத்தில் பூசும் கிரீம், பூனை நடையழகு போன்றவற்றை சிலாகித்து எழுதும் நமது ஊடகங்கள் குளிரில் மனிதன் எப்படி இறந்துபோவான் என்ற குறைந்தபடச விசாரணை கூட செய்வதில்லை. குளிரில் மனிதன் இறந்து போக சில காரணங்கள் உள்ளது. அவன் வீடற்றவனாக இருக்க வேண்டும். சாலை ஓரத்தில் வசிக்க வேண்டும். போர்த்திக்கொள்ள குறைந்தபட்ச போர்வை இல்லாமல் இருக்க வேண்டும். கடும் பட்டினியால் வாட வேண்டும் இவைகள் இணையும் போதுதான் மரணம் அவனைத் தழுவும். ஆக செய்தி நமது தேசத்தின் தலைநகரில் வீடற்ற, சாலைஓரத்தில் உடலை மறைக்க துணிகள் ஏதுமற்ற, பட்டினிகிடந்து மனிதர்கள் மரணிக்கின்றார்கள் என்பதுதான். ஆனால் இப்படிபட்ட செய்தியை நீங்கள் எதிர்பார்க்க முடியாது.பத்திரிகையாளர் சாய்நாத் இதுகுறித்து குறிப்பிடுகிறார், “நமது காலத்தின் நிகழ்வுகளை பிரதிபலிப்பதில் எவ்வுளவு பொருத்தமாக செயல்படுகிறோம் என்பதை அடிப்படையாக வைத்துக்கொண்டு பார்த்தால் நாம் எந்த அளவுக்கு தேறுவோம்? நமது நாட்டின் முக்கிய நிகழ்வுகள் என்பது ஷில்பா ஷெட்டியோ, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையோ அல்லது லக்மே இந்தியா பேஷன் வார கொண்டாட்டத்தையோ நான் குறிப்பிடவில்லை. இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூடத் தோன்றலாம். அப்படியென்றால் நமது காலத்தின் மகத்தான நிகழ்வுகள் என்பவை எவை? உதாரணமாக உலகளாவிய உணவு நெருக்கடி இப்போது நிலவுகிறது. நமது நாடு காலணி ஆதிக்கத்தில் இருந்தபோது சந்தித்ததைப் போன்ற நாடு முழுவதும் வேலை தேடி இடம் பெயரும் அவலநிலை பெருமளவிற்கு நிலவுகிறது....இல்லாத வேலையைத் தேடி லட்சக்கணக்கான மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். பசுமைப் புரட்சிக்கு பிறகு மிக மோசமானதொரு விவசாய நெருக்கடியை நாம் சந்தித்து வருகிறோம். பட்டினியும் அதிகரித்து வருகிறது. பத்தே ஆண்டுகளில் 1,66,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது 2002 ஆம் ஆண்டிலிருந்து அரைமணிநேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நமது காலத்தின் இத்தகைய நிகழ்வுகளுடன் நாம் எத்தகைய தொடர்பு வைத்திருக்கிறோம்? இந்த நிகழ்வுகளை நாம் எப்படி பிரதிபலித்திருக்கிறோம்?விவசாய தற்கொலைகள் அதிகம் நடந்த அல்லது நடக்கும் விதர்வபா பகுதிக்கு நமது நாட்டின் பிரதமர் பார்வையிடச் சென்ற போது அங்கு அவருடன் வெளியிலிருந்து சென்ற பத்திரிகையாளர்கள் வெறும் 6 பேர். ஆனால் அதேநேரத்தில் அங்கிருந்து ஒருமணி நேர விமானப் பயண தூரத்தில் உள்ள மும்பையில் நடந்த லக்மே இந்தியா பேஷன் வார நிகழ்ச்சியில், அதாவது பருத்தி ஆடைகள் அணிந்த மாடல்களின் அலங்கார அணிவகுப்பை காண, அதை செய்தியாக்க 512 அங்கிகாரம் பெற்ற செய்தியாளர்கள் வந்திருந்தனர். அதாவது பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயி நாளன்றுக்கு 8 பேர் சாவதைவிட, பருத்தி ஆடை அணித்த அழகிகள் நமது செய்தியாளர்களின் முக்கிய செய்தியாகின்றனர். இதற்கான காரணத்தை பின்வருமாறு சாய்நாத் விளக்குகிறார்.“அதிகமான ஏழை மக்களைக் கொண்ட இந்த நாட்டில் வறுமை பற்றிய செய்திகளைத் திரட்டுவதற்கு யாரும் கிடையாது. உலகத்திலேயே மிக அதிகமான அளவில் வீட்டுவசதி பிரச்சனையை சந்தித்து வரும் நமது நாட்டின் வீட்டு வசதி பற்றி எழுத செய்தியாளர்கள் இங்கில்லை. உண்மை என்னவென்றால் விவசாயத்திற்கான, தொழிலாளர்களுக்கென செய்தியாளர்கள் இல்லை என்றால், நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேரைப் பற்றி நாங்கள் பேசத் தயாராக இல்லை என்று கட்டமைப்பு ரீதியாக நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அவர்களைப் பற்றி உங்களுக்கு கவலையில்லை. நீங்கள் ஒரு வட்டத்திற்குள் அவர்களை அடைத்து வைக்கிறீர்கள். இது ஒரு விதத்தில் கட்டமைப்பிலிருந்து வெளியே நிறுத்தி வைப்பதைப் போலத்தான். இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல. விபத்தும் அல்ல. 70 சதவீதம் மக்களிடம் நாங்கள் பேச விரும்பவில்லை என்று சொல்கிற வகையில் ஓர் அமைப்பை நாம் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்’’லாபவெறியும் அதனால் எழுகிற பரபரப்பு செய்திகளும் உண்மையைப் பேச மறுக்கின்றன. ஊடகத்துறையில் ஏகபோகம் என்பது ஒரு தொழில் . தொலைகாட்சி சேனல்கள் என்பது ஒரு தொழில். செய்தித்தாள்கள் என்பது ஒரு தொழில். ஆனால் இதழியல் என்பது ஒரு தொழில் அல்ல. இதழியல் என்பது ஒரு சேவை. என்று குறிப்பிடும் சாய்நாத் சில கேள்விகளை எழுப்புகிறார்.“வறட்சியின் விளைவாக ஆஸ்திரேலியாவில் 10,000 குடும்பங்கள் விவசாயத்தை கைவிட்டுவிட்டு இடம் பெயர்ந்தன என்ற செய்தியை தொலைகாட்சியில் பார்த்தேன். ஒரு முக்கியமான செய்தி இது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் வறட்சி என்ற பேச்சே இல்லாமல் 80 லட்சம் இந்திய விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டிருக்கிறார்கள். அதாவது 10 வருட காலத்தில் 5 நாட்களுக்கு 10,000 குடும்பங்கள் விவசாயத்தை கைவிட்டிருக்கின்றன. இந்தச் செய்தியை நாம் எங்கே கொடுத்தோம்? சில விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் ஒட்டுமொத்தமாய் என்ன? 1991 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 11 கோடியே 10 லட்சம் விவசாயிகள் இருந்தனர். 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இது 10 கோடியே 30 லட்சமாக குறைந்துள்ளது. இந்த 80 லட்சம் பேர் எங்கே போனார்கள்? அவர்கள் எங்கே இடம் பெயர்ந்து போனார்கள்? இந்த பூமிக் கண்டத்திலேயே மிகப்பெரிய செய்திகளில் ஒன்று இது. இருந்தாலும் அந்த செய்தியை கொடுக்க நாம் தவறியிருக்கிறோம். ஆஸ்திரேலியாவில் 10,000 குடும்பங்கள் ஆனால் இந்தியாவில் 5 நாளுக்கு 10,000 குடும்பங்கள். உண்மையில் இந்தியாவில் இடப் பெயர்வு 2001 க்கு பிறகுதான் துவங்கியது என்பதையும் கவனத்தில் நிறுத்துங்கள். டில்லியில் மட்டுமே ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 2 லட்சம் பெண்கள் வீடுகளில் வேலை செய்து வருகின்றனர். அவர்களது வாழ்க்கை பற்றிய நமது கருத்து என்ன? ஜார்கண்டில் விவசாயத்தை கைவிட்டுவிட்டு அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். இந்தச் செய்தியையாவது நாம் சொன்னோமா? இல்லவே இல்லை!”இப்படியாக பத்திரிகைகளின் தார்மீகம் குறித்து கேள்விகளை எழுப்பிக்கொண்டே செல்கிறார். இன்னும் கூட நிறைய கேள்விகள் மிச்சமிருக்கிறது. நமது தேசத்தின் அடிப்படை மக்கள் பிரச்சனைகளில் மக்களுக்கு ஆதரவாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்காத ஊடகங்கள் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் இடதுசாரிகளின் தோல்வியை இந்த நாட்டின் கொண்டாட்டமாக சித்தரித்தன. ஒழிந்தார்கள் இடதுசாரிகள் இனி இந்தியா ஒளிரும் என்றெல்லாம் எழுதி மகிழ்ந்தனர். ஐந்தாண்டுக்காலம் பல “ஆக்கப்பூர்வமான” பணிகளுக்கு இடதுசாரிகள் தடையாக இருந்ததாக குற்றம் சாட்டினர். ஆனால் இடதுசாரிகள் எண்ணிக்கை குறைந்ததால் ஆளும் காங்கிரஸ் தனது “ஆக்கப்பூர்வமான” பணிகளை துவக்கிவிட்டது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பெருமளவு விற்பனை செய்யவேண்டும் நிதித்துறையில் சீர்திருத்தத்தை கொண்டு வரவேண்டும். இந்திய முதலாளிகளுக்கு கூடுதல் வரிகளையும், வரிகளுக்கான கூடுதல் கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும். உரம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலைக் “கட்டுப்பாட்டை” அகற்ற வேண்டும். ரயில்வே, சுரங்கம், அணுசக்தி போன்ற துறைகளில் அரசின் மேலாண்மை நீக்கப்பட வேண்டும். பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு துறைகளில் 49 சதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும், சில்லரை வணிகத்துறையில் அந்நிய பகாசூர கம்பெனிகள் முதலீட்டை அனுமதிக்க வேண்டும்என்றும் 2009 2010 க்கான ஆய்வறிக்கை கூறுகிறது.ஆக சாதாரண உழைப்பாளி மக்கள் வாழ்க்கை இன்னும் மோசமான நிலைக்கு கீழே செல்ல இருக்கிறது. கோடிக்கணக்கான சில்லரை வர்த்தகர்கள் அதன் தொழிலாளிகள் வீதிக்கு வர இருக்கின்றனர். ஒவ்வொரு பட்ஜெட்டுக்கும் 65 ஆயிரம் கோடியை அரசுக்கு வாரி வழங்கிய காப்பீட்டு துறை சீரழிய இருக்கிறது. இந்த ஆபத்தான பணிகளைத்தான் இடதுசாரிகள் கடத்த ஐந்தாண்டுகளாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இப்போது ஆட்சியாளர்களை நாடாளுமன்றத்திற்குள் தடுக்க பலம் பொருந்தியவர்கள் இல்லை. ஆனால் மக்கள் மன்றத்தில் வழக்கம் போல இடதுசாரிகள் போராடுவார்கள் ஆனாலும் நமது ஊடகங்கள் அவர்களது தியாகத்தையும் போராட்ட குணத்தையும் கொச்சைப்படுத்தியே தீரும். அதற்கு சிறந்த உதாரணம் மேற்குவங்கம் பற்றி தற்போது ஊடகங்கள் பரப்பிவரும் செய்திகள். ஆயுத பலத்துடன் அச்சத்தின் பிடியில் மக்களை மிரட்டி வைத்திருந்த மாவோயிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் செய்த அக்கிரமங்களை, அவர்கள் மக்களை கிராமம் கிராமமாக வெளியேற்றியதை ஒளிபரப்பாத, அச்சிடாத ஊடகங்கள் அவர்கள் இராணுவத்தால் தாக்கப்படுவதை மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்தி அங்கு கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளதை போல சித்தரிக்கின்றனர்.இந்தப் பின்னணியில் ஊடகங்களின் அரசியலை, அவைகளின் சமூகப் பார்வையை அறிந்துக்கொள்ள சாய்நாத்தின் இந்த நூல் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். வாசிக்க.. விவாதிக்க.. இன்னும் பலகேள்விகளை எழுப்ப வாசிப்போம்!

திங்கள், 20 ஏப்ரல், 2009


வரலாற்றுச்சுவடுகள் - 01: வெண்மணி

ஆர். நல்லகண்ணு
காலச்சக்கரத்தை திரும்பிப் பார்க்கிறேன் சரியாக 37 ஆண்டுகள். வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் 37 ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலம். நேற்று நடந்தது போல இருக்கிறது. தஞ்சாவூர் அருகே அன்று நடந்த கொடுமையை இன்று நினைத்தாலும் நெஞ்சில் குருதி வடிகிறது. இந்தியாவில் நடைபெற்ற உக்கிரமான கொடுமைகளை பட்டியலிட்டால் கீழ வெண்மணி கொடுமையும் ஒன்று. அன்று நடந்த கொடுமையை நான் வாசகர்களுக்கு பதிவு செய்கிறேன்.1968 டிசம்பர் 25கிறிஸ்துமஸ் பண்டிகைஏசுநாதர் பிறந்த நாள் விழாஉலகெங்கும் கொண்டாப்படும் திருவிழா. மக்கள் அனைவரும் திருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க தஞ்சை மாவட்ட கீழ்வெண்மணியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொடிய இரவாகவும், விடியாத இரவாகவும் அமைந்தது.ஆம் . அன்றிரவு தஞ்சை மாவட்டம், கீழ வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். கருகிச் சாம்பலாக்கப்பட்டனர். இவ்வாறு உயிரோடு தீக்கொழுத்தப்படும் அளவுக்கு அவர்கள் செய்த பாவம் வேறொன்றுமில்லை.தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு தங்களுக்குக் கிடைக்கும் வழக்கமான கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கேட்டது தான் அவர்கள் உயிரோடு கொளுத்தப்பட காரணம்.விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு கூலி உயர்வு கேட்டனர். தங்களுக்குக் கிடைக்கும் கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் பல மிராசுதாரர்கள் ஒத்துக் கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர். இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட வேண்டுமென்று நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை ஏற்படுத்தினர். அந்த சங்கத்திலிருந்து திட்டமிட்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவது, முக்கிய ஊழியர்களைக் கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இச் சதிகள் சம்பந்தமாக அவ்வப்போது தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்த சூழ்நிலையில் தான் அந்த உச்சக் கட்டக் கொடுமை நடந்தது.25.12.68 மாலை 5 மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத்தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் திரண்டு வந்து கட்டை அவிழ்த்து விட்டு சென்றனர். அதன் பின்பு பெரு மிராசுதாரர் கோபால கிருஷ்ண நாயுடு போன்றோர் ஆள் திரட்டி வெண்மணி கிராமத்துக்கு அடியாட்களுடன் சென்றிருக்கிறார்கள்.அவ்வாறு தாக்குவதற்கு சென்ற போது நடந்த கைகலப்பில் பக்கிரிசாமி என்பவர் இறந்து விட்டார். ஆனாலும் மிராசுதாரர்கள் துப்பாக்கிகள் சகிதம் அடியாட்களுடன் திரண்டு வந்து தாக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டது. துப்பாக்கித் தாக்குதலுக்குத் தாக்கு பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் ஓடி விட்டனர். தப்பித்து ஓட முடியாத தாழ்த்தப்பட்டவர்களின் தெருவில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உயிர் பிழைக்க கயவர்களிடம் மன்றாடியிருக்கிறார்கள். ஆனால் கொடுங்கோல் மிராசுதாரர்கள் மனம் இறங்கவில்லை. அனைவரையும் தெருக்கோடியிலுள்ள சிறு குடிசைக்குள் அடைத்திருக்கிறார்கள். தீ மூட்டி கதவை வெளியில் தாழ்பாளிட்ட அக்கிரமத்தைச் செய்தனர். தீயின் செந்நாக்குகள் அவர்களைப் பொசுக்க தொடங்கியது. அதன்பின்பும் அவர்கள் வெறி அடங்காமல் வெளியில் கதறிக் கொண்டிருந்த மூன்று சிறு குழந்தைகளையும் தூக்கி நெருப்பில் எறிந்த கொடுமையைச் செய்தனர். மேற்கண்ட கொடுமைகள் அனைத்தும் ஏக காலத்தில் நடந்துள்ளன.இரவு எட்டு மணிக்கு சம்பவம் தொடர்பாக கீவளுர் காவல் நிலையத்திற்கு தெரிந்தும் காவல் துறையினர் இரவு 12 மணிக்கு வந்தனர். இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. அதிகார வர்க்கத்தின் கண்களில் பாமர மக்களின் உயிர் துச்சமானதே இந்த தாமதமாகும். மறுநாள் காலை 10 மணிக்கு குடிசைக்குள் நுழைந்து கருகிய 44 சடலங்களை எடுத்துள்ளனர். மேற்கண்ட 44 பேரும் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டது அரை லிட்டர் நெல் கூலி உயர்வு கேட்ட காரணத்திற்காக மிராசுதாரர்கள் அளித்த பரிசாகும்.இத்தனை கொடுமையையும் செய்த அக்கிரமக்காரர்கள் அதன் பின் இதனை விவசாயத் தொழிலாளர்கள் மீதே பழி போட சூழ்ச்சி செய்தனர். இதற்கு உதவிகரமாக சில பத்திரிகைகள் இட்டுக் கட்டி செய்திகள் வெளியிட்டன. “விவசாயத் தொழிலாளர்களே தங்கள் பெண்டு பிள்ளைகளை இச் சிறு அறையில் தள்ளி வெளியில் தாழ்ப்பாளிட்டுக் கொன்றனர் என்று கற்பனைக்கும் எட்டாத பொய்யைக் கூறினர். நிலபிரபுக்கள் மீது ஆத்திரம் ஏற்படாமலிருக்க நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்ட பொய்யைச் செய்தி ஆக்கினர்.ஆனால் போலீஸ் ஐஜியோ கீவளுர் வட்டாரத்தில் வைசன்ஸ் பெற்ற துப்பாக்கிகள் 42 இருப்பதாகவும், 28 ஆம் தேதி முடிய 5 துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன என்ற கூறினார். இறந்தவர்களில் 19 பேர் பெண்கள், அதில் 12 பேர் திருமணமானவர்கள். 7 பேர் மணமாகாத இளம் பெண்கள், ஆண்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள். 22 வயது முதிர்ந்த ஆண்கள் 3. துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றோர் 11 பேர்.மிராசுதாரர்கள் வைத்த தீயில் மாதாம்பாள் என்ற பெண்மணி, தான் சாகும் பொழுதும் தான் வளர்த்த பிள்ளையை தீ தின்றுவிடக் கூடாது என்று அவ்வாறு அணைத்தபடியே தாயும் சேயும் இணைந்தே கரிக்கட்டியாய் கிடந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் விவரிக்க முடியாத மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.அதையொட்டி அப்பொழுது ‘உழவுச் செல்வம்’ பத்திரிகையில் வெளிவந்த கவிதையைத் தங்களுக்குத் தருகிறேன்.“பாவிகள் வைத்த நெருப்புஉடலைக் கருக்கிய போதும்பெற்றெடுத்த தங்கத்தைக் கைவிடவில்லை.பாசத்தால் பற்றிக் கொண்டாய்.வலது கை வெந்து விட்டது.பிள்ளையைத தாங்கியஇடது திருக்கரத்திலும்சதையெல்லாம் தீ தீய்த்துவிட்ட போதிலும் -எலும்புக் கரத்தால்பிள்ளையை ஏந்திக்கொண்டே பிணமாக கருகிவிட்டாயே.உன் பிறப்பு உறுப்பெல்லாம்நெருப்பு தின்று விட்டபோதும் தாயேபெற்றெடுத்த பிள்ளையைஅணைத்துக் கொண்டிருந்ததாய்ப் பாசத்தைதரணியெல்லாம் போற்றிப்புகழப் போகிறது.நீ உழைக்கும்பெண்ணினத்துக்கு பெருமைதேடித் தந்து விட்டாய்.தாய்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறாய்.நமது வர்க்கத்தின் சிறப்புச்சின்னமாய் - அழியாதஓவியமாய் - உயர்ந்துவிட்டாய்.உனது தியாகம் கவிஞர்களின்கருப் பொருளாய் -ஓவியர்களின் திரு உருவாய்விளங்கட்டும்உனது ஆசை நிறைவேற,வர்க்கம் வாழஎன்றென்றும் உழைப்போம்என உறுதி கூறுகிறோம்.(உழவுச் செல்வம் சனவரி 15, 1969)வெண்மணியில் நடைபெற்ற கோரக் கொடுமையை எதிர்த்து தமிழகம் வெகுண்டெழவில்லை. பண்பாடு, நாகரீகம், மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில், வெண்மணியில் வெந்து சாம்பலாக்கப்பட்ட நாற்பத்தி நான்கு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் மீது இரக்கம் கூடக் காட்டவில்லையே ஏன்? என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.அப்பொழுது கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும், வேலூர் பீடித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள் ஜனநாயக உணர்வு கொண்ட பாட்ரியாட், நியுஏஜ் போன்ற டெல்லிப் பத்திரிகைகள் நாட்டுக்கே அவமானம் என்று கவலையோடு கண்டித்து எழுதின.மக்களின் கொந்தளிப்பு வெளிப்படாத நிலையில் நீதி தேவனும் ஓரஞ் சாய்ந்து விட்டான். ஆம். வெண்மணிச் சம்பவத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்ட நிலப்பிரபு - கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றத் தீர்ப்பு“ Upon the consideration of the evidence on record the Judges felt constrained to hold that the prosecution had failed to bring home the guilt of any of them and consequently acquitted them. They said that the intrinsic infirmities in the prosecution evidence prevended them from convincting the persons who were probable innocene. -‘Hindu’“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்.‘இந்து பத்திரிகை’44 ஏழை உயிர்களின் மீது இதர மக்களுக்கு இரக்க குணம் ஏற்படாத நிலையில்- நீதிமன்றங்களிலும் - ஏழை மக்களுக்கு - தாழ்த்தப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காத போது - நிலப்பிரபுக்களும், பிற்போக்காளர்களும், சாதி வெறியர்களும் - சரடு போடப்படாத திமிர்க் காளைகளாக நாட்டில் இன்னமும் திரிந்து வருகிறார்கள்.விடுதலை விடுதலை விடுதலைபறையருக்கும் இங்கு தீயர்புலையருக்கும் விடுதலைபரவரோடு குறவருக்கும்மறவருக்கும் விடுதலை.என்ற பாரதி விடுதலைக் கனவு கண்டார். அக் கனவுகள் இன்னும் நனவாகவில்லை. பாரதியின் கனவை நனவாக்கக் கங்கணம் கட்டியாக வேண்டும்.தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் - இதரப் பகுதியினரை விட சாதி அமைப்பில் கொடிய ஓடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்ள். அவர்களின் உரிமையை நிலை நாட்டுவது ஜனநாயகத்தின் வலுவான அடித்தளமாகும்.கிராமங்களின் அடித்தட்டில் வாழும் விவசாயத் தொழிலாளர்களிடையே - சாதி வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். ஒன்றுபட்ட இயக்கமாக திரட்ட வேண்டும். வலியோர் இழைக்கும் கொடுமைகளை எதிர்த்து, எளியோர்களுக்குப் பாதுகாப்பாகவும் மக்களைத் திரட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.வலியோர் தம் ஆதிக்கமும், வன்முறையும் எந்த வழியில் வந்தாலும் அதனை எதிர்த்து குரல் கொடுக்கவும், மக்களை திரட்டவும் வேண்டும். அது உலகை மேலாண்மை செய்யத் துடிக்கும் அமெரிக்காவை எதிர்த்து என்றாலும் சரி. ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி கொடுமையை எதிர்த்து என்றாலும் சரி. நாம் எதிர்க்க வேண்டும்.வெங்கொடுமைக்கு பலியான வெண்மணித் தியாகிகள்1. சுந்தரம் (45)2. சரோஜா(12)3. மாதாம்பாள்(25)4. தங்கையன் (5)5. பாப்பா (35)6. சந்திரா (12)7. ஆசைத் தம்பி (10)8. வாசுகி (3)9. சின்னப்பிள்ளை (28)10. கருணாநிதி(12)11. வாசுகி (5)12. குஞ்சம்பாள் (35)13. பூமயில் (16)14. கருப்பாயி (35)15. ராஞ்சியம்மாள் (16)16. தாமோதரன் (1)17. ஜெயம் (10)18. கனகம்மாள் (25)19. ராஜேந்திரன் (7)20. சுப்பன் (70)21. குப்பம்மாள் (35)22. பாக்கியம் (35)23. ஜோதி (10)24. ரத்தினம் (35)25. குருசாமி (15)26. நடராசன் (5)27. வீரம்மாள் (25)28. பட்டு (46)29. சண்முகம் (13)30. முருகன் (40)31. ஆச்சியம்மாள் (30)32. நடராஜன் (10)33. ஜெயம் (6)34. செல்வி (3)35. கருப்பாயி (50)36. சேது (26)37. நடராசன் (6)38. அஞ்சலை (45)39. ஆண்டாள் (20)40. சீனிவாசன் (40)41. காவிரி (50)42. வேதவள்ளி (10)43. குணசேகரன் (1)44. ராணி (4) நன்றி : விழிப்புணர்வு

கொள்கை கோட்பாடற்ற கதாகாலட்சேபங்கள்
-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சி களுமே தங்களுடைய தேர்தல் பிரச்சாரத் தின்போது, நாடும் நாட்டு மக்களும் எதிர் நோக்கியுள்ள முக்கியமான பிரச்சனைகள் குறித்து எதுவுமே கூறாது, அற்ப விஷயங்கள் குறித்து கதாகாலட்சேபங்கள் செய்து வரு கின்றன. உலகப் பொருளாதார மந்தத்தின் விளைவாக, நாட்டில் ஏற்பட்டுள்ள பொரு ளாதார நெருக்கடி குறித்தோ, அதனால் பாதிக் கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் அளிப்பது குறித்தோ எதுவும் கூறாமல், இவ் வாறு அற்பவிஷயங்களை முன்வைப்பது தான் தங்களுக்கு நலம் பயக்கும் என்று உண்மையிலேயே அவை கருதுகின்றன. உலகப் பொருளாதார நெருக்கடியால் ஒரு கோடிக்கும் மேலான வேலைகள் பறிபோய் விட்டன. இதன் காரணமாக வேலையிழந்த தொழிலாளர்கள் தற்கொலைகள் செய்து கொள்வதும், தங்கள் குடும்பம் உயிர்வாழ வேண்டுமென்பதற்காகத் தங்களின் உடல் உறுப்புகளை விற்பதும் தொடர்கதையாகி விட்ட நிலையில், இதைப்பற்றியெல்லாம் எதுவும் கூறாது, மக்களின் நேரடி வாழ்க்கை யில் சம்பந்தப்படாத அற்ப விஷயங்களை இக்கட்சிகள் தூக்கிப் பிடித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன.பாஜக தன்னுடைய ‘இந்து வாக்கு வங்கியை’ ஒருமுகப்படுத்த வேண்டும் என் பதற்காக, மதவெறித் தீயை கூர்மைப்படுத்தும் வண்ணம் வெறிப் பேச்சுக்கள் மூலமாக பிரச்சாரத்தைத் துவக்கியுள்ளது. இவ்வாறு பிலிபித்தில் பேசிய வருண் காந்தியையும், ஒரிசா மாநிலத்தில் காந்தமால் தொகுதியில் பேசிய நபரையும் வேட்பாளர்களாக நிற்க வைத்து அவர்களைப் பாதுகாத்திட பாஜக முனைந்துள்ளது. காந்தமால் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கான காலக்கெடு முடிவடைந்த பின்னர், கிறிஸ்தவ சிறு பான்மையினர் தாக்குதலுக்கு இட்டுச் சென்ற அத்தகைய வெறிப் பேச்சைக் கக்கிய அவ் வேட்பாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெள்ளத்தெளிவாகத் தெரிவித்திருப்பதைப் போல மதவெறி நிகழ்ச்சிநிரலை நடைமுறைப் படுத்தும் வண்ணம் இத்தகைய வெறிப் பேச் சுக்களை விசிறிவிடத் தீர்மானித்திருக்கிறது. இப்போது பாஜக-வின் சார்பில் பிரதமராக அறிவிக்கப்பட்டிருப்பவரும், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய பிரதமரும், ஒருவரை ஒருவர் மிகவும் இழிவான முறையில் வசை பாடிக்கொண்டிருக்கின்றனர். அத்வானி, மன்மோகன்சிங்கை மிகவும் பலவீனமான பிரதமர் என்று கூற, மன்மோகன் சிங், அத் வானி மத்திய அமைச்சராக இருந்த சமயத் தில் மேற்கொண்ட மோசமான நடவடிக்கை களை எடுத்துரைத்திருக்கிறார். கந்தகாரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல் பட்டது, பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில், தான் கையறு நிலையிலிருந்ததாக அத்வானி கூறியது, கராச்சி சென்றிருந்தபோது ஜின்னா குறித்து கூறியது உட்பட இதில் அடங்கும். இதுவல்லாமல் காங்கிரஸ் கட்சியின் தலை வரான சோனியாவும், அவரது மகன் ராகுலும் கூட பிரதமருக்கு ஆதரவாக நின்று, அத்வானி மீது வசைமாரி பொழிந்து கொண்டிருக் கின்றனர்.உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக 75 கோடி வாக்காளர்களுடன் திகழும் இந்தியா வில் உள்ள பெரிய கட்சிகளாகச் சொல்லிக் கொள்ளும் இவைகள் நடத்திடும் கதாகாலட் சேபம் எவ்வளவு கேவலமாக இருக்கிறது? உலகப் பொருளாதார மந்தத்தால் விண்ணை யொட்டியுள்ள வேலையில்லாத் திண்டாட்டத் தைப்பற்றிக் கிஞ்சிற்றும் இவர்கள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அனைத்து அத் தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடு மையாக உயர்ந்துள்ள நிலையில், சாமானிய மக்கள் நாள்தோறும் சாப்பாட்டிற்கே வழி யின்றி திண்டாடும் நிலை குறித்து கொஞ்ச மாவது கவலைப்பட்டார்களா? மக்களைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச் சனைகள் குறித்தும் அவற்றிற்கு நிவாரணம் அளிப்பது குறித்தும் விவாதிக்கக்கூடாது என்பதில் காங்கிரசும், பாஜகவும் மிகவும் தெளிவாக இருக்கின்றன. எனவேதான், மக் களின் அடிப்படைப் பிரச்சனைகள் மீது மட் டும் கவனம் செலுத்திடும் வகையில், தங்க ளுக்கு ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண் டாட்டத்திலிருந்து விடிவும், நல்லதோர் வாழ்க்கையும் தரக்கூடிய விதத்தில் அதற் காகப் போராடும் ஓர் அரசியல் மாற்று தேவை என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். இந்தப் பின்னணியில்தான், பிரதமர் மன் மோகன்சிங், கேரளாவில் தேர்தல் பிரச்சாரப் பயணம் செய்கையில், கம்யூனிஸ்ட்டுகள் மீது வசைமாரி பொழிந்திருக்கிறார். கம்யூனிஸ்ட் டுகள் எப்போதுமே வரலாற்றில் தவறான பக் கத்திலேயே இருந்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். நாட்டைப் பற்றியும், நாட்டு மக்களைப் பற்றியும் இடதுசாரிக் கட்சிகள் முன் வைத்துள்ள கேள்விகள் எதற்கும் அவர் பதிலளிக்காமல் இவ்வாறு விலகிச் சென்றிருக்கிறார். 1942 வெள்ளையனே வெளி யேறு இயக்கத்தின்போது கம்யூனிஸ்ட்டுகள் சுதந்திரத்திற்கு எதிராக நின்றார்கள் என்று கடும் பிற்போக்கான கம்யூனிச எதிர்ப்புப் பிரச் சாரத்தை மேற்கொண்டிருக்கிறார். வெள்ளை யனே வெளியேறு இயக்கத்தின்போது கம்யூ னிஸ்ட்டுகளின் ‘பங்கு’ எவ்வாறானதாக இருந்தது என்பது குறித்து 1992 ஆகஸ்ட் 9 அன்று, நாடு தன்னுடைய 50ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடிய தருணத் தில், அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா இந்திய நாடாளுமன்றத் தின் நள்ளிரவு அமர்வின்போது ஆற்றிய உரையைக் கூறினாலே போதுமானது. அப் போது அவர், கான்பூர், ஜாம்ஷெட்பூர், அகம தாபாத் ஆகிய இடங்களில் உள்ள ஆலை களில் நடைபெற்ற வேலைநிறுத்தங்களை அடுத்து, அரசின் செயலாளர், 1942 செப்டம்பர் 5 அன்று லண்டனுக்கு ஓர் அறிக்கை அனுப் பினார். அதில் அவர், ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களில் பலரின் நடவடிக்கை களிலிருந்து இவர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சியாளர்கள் என்பது தெளிவாகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். இதைவிட வேறேதேனும் சான்று வேண் டுமா, என்ன? சுதந்திர இந்தியாவில் தேர்ந் தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரே, இந்திய நாடாளுமன்றத்தில், அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்ட விழாவில் பேசியபோது, ‘கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் “பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சியாளர்களாக” இருந்திருக் கிறார்கள்’ என்று கூறி பதிவாகியிருப்பதை விட வேறென்ன சான்று தேவை?ஆயினும், பிரதமர் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் பாஜகவுடன் இணைந்து கொண்டு, அதே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, ஆர்எஸ்எஸ்சின் பங்கு குறித்து (பாஜக இதன் அரசியல் அங்கம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று) எதுவும் கூறாமல் வாய்மூடி மவுனம் சாதிக்கிறார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, பம்பாய் உள் துறை, குறிப்பிட்டிருந்ததாவது: “ஆர்எஸ்எஸ் அமைப்பானது, 1942 ஆகஸ்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்து வாய்திறந்து எதுவுமே கூறவில்லை. பிரிட் டிஷ் ஆட்சியாளர்களின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அது முழுமையாக செயல்பட்டது.” இது தொடர்பாக நானாஜி தேஷ்முக் கூட ஒரு தடவை, ‘‘ஏன், ஆர்எஸ்எஸ் இயக்கமானது, ஓர் அமைப்பு என்ற முறையில், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை’’ என்று வினா எழுப்பினார்.மக்களின் துன்ப துயரங்களுக்கு நிவா ரணம் அளிப்பது குறித்து எதுவுமே கூறாது, வாக்களிக்கக்கோரும் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் அரசியல் நிலை குறித்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மக்க ளின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து எதுவுமே கூறாது ஒதுங்கியிருக்கும் இவ்விரு கட்சிகளும், எப்படியாவது ஆட்சியைப் பிடிப் பதற்கு, பணபலத்தை முக்கியமான ஒன்றாகக் கருதுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. மக்கள் மத்தியில் இவர்கள் முன்வைத்திருக் கும் கேள்வி, யாருடைய கொள்கை சிறந்த கொள்கை என்பதல்ல. மாறாக, யார் அதிக அளவில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முடியும் என்பதுதான். சமீபத்தில் கர்நாடகா வில் இரு வாகனங்களில் இருந்த சாக்குப் பைகளில் சுமார் 12 கோடி ரூபாய் அளவிற்கு ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 500 ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டது இதிலிருந்து எந்த அளவிற்கு, இந்த அரசியல் கட்சிகள், அரசியல் தரம் தாழ்ந்து சென்று கொண்டிருக் கின்றன என்பதைக் காட்டுகின்றன. இதில், மேலும் கொடுமை என்னவெனில், இந்தப் பணத்திற்கு இதுவரை எவரும் உரிமை கொண்டாடவில்லை என்பதும், இது எங்கே எடுத்துச் செல்லப்பட்டது என்பதை எவரும் கூறாததுமாகும். இத்தகைய சூழ்நிலைமையில், இத்த கைய கேடுகெட்ட அரசியல் கட்சிகளின் வலைகளுக்குள் மக்கள் சிக்கிக்கொள்ளாமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, நாட்டை யும் நாட்டு மக்களையும் வலுப்படுத்தக்கூடிய விதத்தில் மாற்றுக் கொள்கைகளை முன் வைத்திடுவோருக்கு தங்கள் ஆதரவினை அளித்திட வேண்டும். இதுநாள்வரை காங்கி ரசுடனும், பாஜகவுடனும் ஒட்டிக்கொண்டி ருந்த பல கட்சிகள் அவற்றைக் கழற்றிவிட்டு விட்டு- இத்தகைய மாற்று அரசியல் கொள் கையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய மாற்றால்தான் நாட்டையும் நாட்டு மக்களையும் எதிர்நோக்கியுள்ள பிரச்சனை களிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும். எனவேதான், நடைபெறவிருக்கும் தேர்தலில், காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைவதை மக்கள், உத்தரவாதப்படுத்திட வேண்டும். நன்றி : தீக்கதிர்

சனி, 18 ஏப்ரல், 2009

யுத்தம் நிற்கட்டும்

யுத்தம் நிற்கட்டும் மதுரை சொக்கன்
பூவுலகின் தொல் குடிகளில் தமிழ் குடியும் ஒன்று. மொழி என்பது வெறும் வார்த்தைகளும் வரிகளும் அன்று. ஒரு இனத்தின் முகவரி. தமிழ் மொழியின் தொன்மையையும், இலக்கிய வளமையையும் கண்டு உலகம் வியந்து நிற்கிறது. தமிழில் புழங்கப்படும் ஒவ்வொரு வார்த்தையிலும் தொன்மையான வாழ்க்கையின் சாரமும், அனுபவப் பிழிவும் புதைந்து கிடக்கிறது."கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி" என்ற சொற்றொடரில் அறிவியலுக்கு புறம்பான பெருமிதம் தொனித்தாலும், தமிழர்தம் பண்பாடு உலகின் தொல் பண்பாடுகளில் ஒன்று என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.ஆனால் இன்றைக்கு இலங்கையில் தமிழ் மக்கள் படும் துயரமும், பல ஆண்டுகளாக நீடித்து வரும் மோதலால் முடிவின்றி தொடரும் அவலமும் ஒவ்வொரு தமிழனையும் வேதனையின் விளிம்புக்கு தள்ளுகிறது.1980களில் இலங்கையில் துவங்கிய இன மோதல் இன்றளவும் தொடர்கிறது. இலங்கை மக்கள் தொகையில் 74 சதவீதம் சிங்களர்கள், 18 சதவீதம் தமிழர்கள், 7 சதவீதம் முஸ்லிம்கள் மற்றும் இதர பிரிவினர் ஒரு சதவீதம் என்று அந்நாட்டு மக்கள் தொகைக்கணக்கெடுப்பு கூறுகிறது.தமிழர்கள் என்று கூறும்போது அவர்கள் மூன்று வகைப்பட்டவர்கள். காலங்காலமாக அந்த மண்ணிலேயே வாழ்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்தவர்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின்போது இலங்கையில் தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைகள் போல வேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள்.இந்தியப் பிரதமராக இருந்த சாஸ்திரி இலங்கைப் பிரதமராக இருந்த சிரிமாவோ ஆகியோருக்கிடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி இந்தியாவுக்கு ஒரு பகுதியினர் திருப்பி அனுப்பப்பட்டனர். மீதமுள்ளவர்கள் பூரண குடியுரிமையின்றி இன்னமும் இலங்கையில் இருப்பவர்கள். மூன்றாவது வகையினர் தமிழ் பேசும் முஸ்லிம்கள். கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதியிலுள்ள தமிழர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று துல்லியமாக கூற முடியவில்லை என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.அடுத்து எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த பகுதியில் தமிழர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை சென்றுவிடுமோ என்று இதயம் நடுங்குகிறது.எல்டிடிஇ- பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ராஜபக்ஷே அரசு சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் எனப்படும் தீ குண்டுகளை மக்கள் மீது வீசுகிறது. கைகால்களை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் கூட இந்த குண்டு வீச்சில் இருந்து தப்பமுடியவில்லை. அந்த பகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட செஞ்சிலுவை சங்கத்தினரைக் கூட அரசு வெளியேற்றுகிறது. இந்த மாதம் இந்த பகுதிக்கு கூடுதலாக சவப்பைகள் தேவைப்படும் என்று ஐ.நா. தலைமையகத்திற்கு தகவல் அனுப்பியதைக் கூட தவறென்று ராஜபக்ஷே அரசு குற்றம்சாட்டியுள்ளது. சர்வதேச அளவில் இலங்கைக்கு உள்ள நற்பெயரை செஞ்சிலுவை சங்கம் கெடுப்பதாக ராஜபக்ஷே பொருமியுள்ளார். சொந்த நாட்டு மக்களையே கொத்து குண்டுகள் வீசி கொல்லும் ஒரு அரசின் மீது சர்வதேச சமூகம் எத்தகைய மதிப்பு கொண்டிருக்கும் என்று ராஜபக்ஷேவுக்கு தெரியவில்லை.எல்டிடிஇ-க்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில் சொந்த நாட்டு மக்களையே கொல்லும் ராஜபக்ஷே அரசின் அநியாயத்தை அம்பலப்படுத்தி எழுதும் சிங்கள மொழி பத்திரிகையாளர்கள் கூட தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர்.போர் நடக்கும் பகுதிகளிலிருந்து சர்வதேச ஊடகங்களும் கூட வெளியேற்றப்பட்டுள்ளன. அப்பாவி மக்களை கொன்று குவிக்கவில்லை என்றால், ராஜபக்ஷே நிர்வாகத்திற்கு இந்த அளவுக்கு பதட்டமும் பயமும் ஏற்படவேண்டிய அவசியமில்லை.மறுபுறத்தில் அப்பாவி மக்களை மனிதக் கேடயமாக விடுதலைப்புலிகள் பயன்படுத்துகின்றனர் என்று ஐ.நா. பார்வையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்களது பிடியிலிருந்து தப்பிக்க முயல்பவர்களை எல்டிடிஇ அனுமதிப்பதில்லை என்பது, உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பி வந்த சிலரது நேர்காணலிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்த கடைசி நகரமான புதுக்குடியிருப்பையும் கைப்பற்றிவிட்டோம் என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. பெருமளவு தங்களது பிடிமானத்தை இழந்துவிட்ட நிலையில் இலங்கை அரசு போர்நிறுத்தம் அறிவிக்க சர்வதேச சமுகம் வற்புறுத்த வேண்டும் என்று புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் வேண்டுகோள் விடுக்கிறார். மறுபுறத்தில் கடைசி புலியை கொல்லும் வரை போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இடையில் சிக்கி எத்தனை ஆயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்தாலும் எங்களுக்கு கவலையில்லை என்ற கண்ணோட்டத்துடனேயே ராஜபக்ஷே அரசு செயல்பட்டு வருகிறது.1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுதலைபெற்றது. 1956ம் ஆண்டு பண்டார நாயகா தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிங்கள இன தேசியவாதத்தை தூண்டிவிட்டார். அப்போதிருந்தே தாங்கள் ஒதுக்கப்படுவதாக பூர்வகுடியான தமிழர்களிடையே மனக்குறை எழுந்தது. கல்வி மற்றும் விவசாயக் கொள்கைகள் தங்களுக்கு எதிராக இருப்பதாக தமிழர்கள் ஜனநாயக ரீதியில் குரல் எழுப்பினர். தமிழர்கள் பெரும்பகுதியாக இருந்த வளமையான பகுதிகளில் சிங்கள மக்கள் திட்டமிட்டு குடியேற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. துவக்கத்தில் ஜனநாயக ரீதியில் எழுந்த இயக்கங்களை தொடர்ந்து வந்த இலங்கை அரசுகள் புறக்கணித்தே வந்தன.1972ம் ஆண்டு பண்டாரா நாயகா அரசு புதிய அரசியல் சாசனத்தை கொண்டு வந்தது. புத்தமதம்தான் அரசியல் சாசனப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மதம் என்றும் சிங்கள மொழிக்கே முன்னுரிமை என்றும் இந்த புதிய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டிருந்தது.1980களில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தின்போது கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். உலகத்தரத்திலான யாழ்ப்பாணநூலகம் தீவைத்து கொளுத்தப்பட்டது. இது தமிழர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த அறிவுலகத்திற்கும் பேரிழப்பாகும்.ஒரு செடியை எடுத்து வேறு இடத்தில் நடும்போது கூட வேரடி மண்ணையும் கொஞ்சம் சேர்த்து எடுத்து வைப்பது மரபு. ஆனால் இன்றைக்கு இலங்கை தமிழர்கள் உலகத்தின் பல்வேறு நாடுகளில் முகமற்று முகவரியற்று சிதறிக்கிடக்கின்றனர். தங்கள் சொந்த மண்ணுக்கு என்றைக்கு திரும்புவோம் என்ற ஏக்கம் கவிதையாக, கண்ணீராக வடிந்து கொண்டே இருக்கிறது.சொந்த நாட்டில் வாழ வழியின்றி உயிரைகையில் பிடித்துக் கொண்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கையையும் நம்பிக்கையையும் தொலைத்துவிட்டு சொந்த உடலையே சுமையாக நினைத்து இருந்து கொண்டிருக்கின்றனர்.தமிழர்களின் நியாயமான ஜனநாயகப் பூர்வ உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்தான்போராளிக்குழுக்கள் உருவாகின. தனி ஈழம் என்ற குரலும் எழுந்தது. துவக்கத்தில் இபிஆர்எல்எப் பிளாட், இபிடிபி டெலோ, ஈராஸ் உள்ளிட்ட அமைப்புகள் மட்டுமின்றி விடுதலைப்புலிகளும் கூட சோசலிச தமிழ் ஈழம் என்ற முழக்கத்தை எழுப்பின. ஆனால் எல்டிடிஇ சோசலிசம் என்ற லட்சியத்தை கைவிட்டது மட்டுமின்றி அதை கைவிடாத குழுக்களை சேர்ந்த தலைவர்களையும் கூட கொன்று குவித்தனர் என்பதும் உறுத்தும் நிஜமாகும்.விடுதலைப்புலிகளின் செயல்பாட்டில் பாசிச குணமே மேலோங்கியது. எதிர்கருத்து கொண்ட யாரோடும் பேசித் தீர்ப்பது என்பதற்கு பதிலாக தீர்த்துக் கட்டுவது என்பதே அவர்களின் அணுகுமுறையாக இருந்தது. அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை சீர்குலைத்ததில் தொடர்ந்து வந்த இலங்கை அரசுகளுக்கு மட்டுமின்றி எல்டிடிஇ அமைப்புக்கும் பங்கு உண்டு.இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஷோபா சக்தியின் வார்த்தைகளில் கூறுவதானால், "பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் மட்டுமல்ல புலிகளும் நேர்மையாகவும் உண்மையாகவும் இல்லை. அதனால்தான் பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தன. இருவருமே யுத்தத்தின் மூலமாகவே தமது அதிகாரத்தையும் செல்வாக்கையும் நிலைநிறுத்திக் கொள்கின்றனர்" என்று கூறும் அவர், "இத்தனைக்கு பின்னும் கூட யுத்தத்தில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அவலம் குறித்தோ, நிரந்தரமான சமாதான தீர்வை நோக்கி போக வேண்டிய அவசியம் குறித்தோ எந்த கரிசனையும் இல்லாமல் தங்கள் இயக்கத்திற்கு அதிகாரங்களை பெற்றெடுப்பதிலேயே பேச்சுவார்த்தையை பயன்படுத்தி மாற்றுஅரசியல் இயக்கங்களை ஒழித்துக்கட்டுவதில் மட்டுமே புலிகள் குறியாக இருந்தன. போர்நிறுத்த காலங்களில் மட்டும் 400க்கும் மேற்பட்ட மாற்று இயக்கங்களின் முக்கியஸ்தர்களை புலிகள் கொன்றழித்தனர்" என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.தனி ஈழம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்பதே அனுபவம் உணர்த்துகிறது. தனி ஈழக் கோரிக்கைய ஆதரித்த திமுக போன்ற பெரிய கட்சிகள் கூட ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு தங்களது நிலையை மாற்றிக்கொண்டுள்ளன.1980களில் தமிழகத்தில் பெரும் இனவாத கூச்சல் எழுப்பப்பட்ட நிலையிலும் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சனைக்கு தெளிவான தீர்வை முன்வைத்தது. ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள் தமிழர்கள் வாழும் வடக்க, கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். தமிழர்களுக்கும் தமிழுக்கும் சமஉரிமையும் சம வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்பின் முரணின்றி முன்வைத்தது மார்க்சிஸ்ட் கட்சி. மேலும் இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண ராஜீய ரீதியில் இந்தியா தலையிட வேண்டும். ஐ.நா. சபை போன்ற சர்வதேச அமைப்புகளின் கவனத்தை ஈர்த்து இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்ற குரலையும் தொடர்ந்து ஒலித்து வருகிறது.இப்போது முன்வந்துள்ள முக்கியப் பிரச்சனை இருதரப்புமோதலில் சிக்கி அன்றாடம் உயிரிழந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழ் மக்களை பாதுகாக்க ராஜீய ரீதியில் இந்தியாவும் ஐக்கியநாடுகள் சபையும் தலையிட வேண்டும் என்பதுதான்.இலங்கை இனப்பிரச்னையை சுமுகமாக தீர்க்க ராஜபக்ஷே அரசு பின்பற்றும் கொடூரமான அணுகுமுறையோ விடுதலைப்புலிகளின் நம்பகமற்ற அணுகுமுறையோ எந்தவகையிலும் பயன்படாது.கிழக்கு மாகாணத்தின் அரசு ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக ராஜபக்ஷே அரசு கூறுகிறது. ஆனால் ஒரு நகராட்சிக்கு உள்ள அதிகாரம் கூட அந்த மாகாண அரசுக்கு இல்லை என்று முதல்வர் பிள்ளையான் கூறுகிறார். இத்தகைய ஒரு அரசை வடக்கமாகாணத்திலும அமைத்து பிரச்சனையை முடித்துவிட்டதாக ராஜ்பக்ஷே அரசு கருதுமானால் அது முட்டாள்தனமாகவே இருக்கும். தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் உண்மையாக சுயாட்சி அதிகாரம் உள்ள மாகாணங்கள் அமைக்கப்பட வேண்டும்.முடிவின்றி தொடரும் உள்நாட்டுப்போர் தமிழ் மக்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் வளர்ச்சியும் பெருமளவு பின்னுக்கு தள்ளியுள்ளது. இதை பயன்படுத்தி அமெரிக்கா போனற் வல்லரசுகள் இலங்கையை தங்களது சதுரங்க களத்தல் பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் அமெரிக்க தூதரகத்திற்கு சென்று இலங்கை பிரச்னையில் தலையிடுமாறு மனு கொடுக்கின்றன. ஒரு கட்சியின் தலைவரோ அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு எஸ்எம்எஸ் கொடுக்குமாறு தனது கட்சி தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவை சர்வதேச போலீஸ்காரனாக நினைக்கும் அடிமை மனோபாவமே இது. இப்போது தேவை அமெரிக்க தலையீடு அல்ல. ஐநாவின் தலையீடு.இலங்கை தமிழர் பிரச்சனை தமிழகத்திலும் பிரதிபலிப்பை ஏற்படுத்துவது இயல்பு ஆனால் சிலர் இந்திய இறையாண்மைக்கே சவால் விடுவதும், உணர்ச்சிக் கொந்தளிப்பில் தங்களைத் தாங்களே தீயிட்டு கொளுத்திக்கொண்டு மாள்வதை உற்சாகப்படுத்துவதும் பெரும்கேடாகவே முடியும்.தமிழ் மக்களின் குரல் ஒன்றுபட்டு ஒலிக்கவேண்டிய நேரம் இது. எதிர்கால அரசியல் கணக்கை மனதில் வைத்துக் கொண்டு பிரிந்துநின்று பேதம் வளர்ப்பது இலங்கை தமிழர்களுக்கு எந்த வகையிலும் உதவாது.  நன்றி : செம்மலர்

தோழர் என்.வரதராஜன் வாழ்வும் வரலாறும்

தோழர் என்.வரதராஜன் வாழ்வும் வரலாறும் -

எஸ்.ஏ.பி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயலாளர் தோழர் என்.வி. அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் கவிஞர் பாலபாரதியால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளது.வரலாறு என்பது எல்லாக் காலங்களிலும் வெகு மக்களால் உருவாக்கப்படுவதுதான். அந்த வெகு மக்கள்தான் தங்களது தலைவர்களையும் உருவாக்குகிறார்கள். வெகு மக்களிடமிருந்து கற்றுக் கொண்டு அவர்களுக்கே வழிகாட்டி வரலாற்றின் பாதை நெடுகிலும் அவர்களை அழைத்துச் செல்கிறவர்களே தலைவர்கள். வரலாற்றில் தனிநபர் பங்கு இந்த வகையில் மகத்தானதாகிறது. கம்யூனிஸ்ட் கட்சியில் தலைவர்களாக வருவது எளிதான காரியமல்ல. நேர்மை, ஒழுக்கம், வீரம், தியாகம் ஆகிய பண்புகளோடு பல ஆண்டுகள் உழைத்து மக்களுக்குச் சேவை செய்வதன் மூலமே தலைவராக முடியும். எண்ணற்ற போராட்ட களங்களில் தலைமையேற்று சிறைகளையும், சித்ரவதைகளையும் சந்தித்தவர்களே கம்யூனிஸ்ட்டுத் தலைவர்கள்.இத்தகைய ஒரு மகத்தான தலைவரின் - தோழர் என்.வி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிக் கொணர்ந்த கவிஞர் பாலபாரதியை மனமாரப் பாராட்டத் தோன்றுகிறது. ஏனெனில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெரும்பாலும் சுயசரிதை எழுதுவதில்லை. தன்னடக்கம் காரணமாகத் தங்களின் வீர தீரத் தியாக வரலாற்றை எழுதுவதில்லை. இது ஒரு குறையே. எனினும் வர்க்கப் போராட்டங்களின் வரலாற்றோடு கம்யூனிஸ்ட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளும் இணைந்தது தான் என்பது இந்நூலைப் படித்தாலே அறிய முடியும்.இந்நூலை ஒரு எளிய மனிதரின், எளிமையான தலைவரின் வாழ்வும் பணியும் என்று குறிப்பிடலாம். ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் பெரிய விவசாயக் குடும்பத்தில், அதுவும் ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்திலே வளர்ந்து வாலிபராகி மில் தொழிலாளியாகிறார். தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டதால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதன்பின் கொஞ்ச காலம் தையல் தொழிலாளியாய் பணிபுரிந்தார். விடுதலைப் போராட்ட வீராங்கனை தோழர் கே.பி. ஜானகியம்மாவின் பேச்சைக் கேட்டு விடுதலைப் போராட்ட ஈர்ப்பு ஏற்பட்டது.என்.வி., பாரதியின் பெயரால் வாலிபர் சங்கம் துவக்கியதும், ஜனசக்தி வாசிக்கத் துவங்கியதும்தான் அவரை அரசியலாக்கி கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் இணைய வைத்தது. 1959ஆம் ஆண்டு தன்னைக் காதலித்த ஜெகதாம்மாவை குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி கலப்புத் திருமணம் செய்தார். என்.வி. தமது மகன்களுக்கு கல்யாணசுந்தரம், பாரதி என்று பெயரிட்டார். கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கம்யூனிஸ்ட்டுத் தலைவர் எம்.கல்யாணசுந்தரம் ஆகியோரின் நினைவாக மூத்த மகனுக்கும், தனது நேசத்துக்குரிய கவிஞர் பாரதியின் பெயரை இளைய மகனுக்கும் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.நீதிமன்றத்தில் நீதிபதி "வேலை நிறுத்தம் செய்யும்படி மில் தொழிலாளர்களைத் தூண்டினாயா?" என்று கேட்டதற்கு "ஆம். தூண்டினேன். என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்" என்று என்.வி. கம்யூனிஸ்ட்டுகளுக்கே உரிய கம்பீரத்தோடு பேசியுள்ளார். திண்டுக்கல்லில் தோழர்கள் ஏ.பாலசுப்பிரமணியம், வி.மதனகோபால், எஸ்.ஏ.தங்கராஜன் ஆகியோருடன் இணைந்து தோல், சுருட்டு, பூட்டு, துப்புரவு ஆகிய தொழில்களில் பணிபுரிந்த தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் சங்கங்களை அமைத்ததில் என்.வி.பெரும் பங்காற்றினார். பல போராட்டங்களில் பங்கேற்றுக் கட்சித் தலைவராய் உயர்ந்தார். இயக்கத்தின் வளர்ச்சியோடு என்.வி.யின் வளர்ச்சியும் நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.தலைமறைவு வாழ்வில் அவர் பசி பட்டினியாய் போலீசாருக்குத் தப்பி வாழ்வதில் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தார். மார்க்சிய இலக்கியங்கள், சோவியத் இலக்கியங்கள் மற்றும் தமிழில் வந்த முற்போக்கு இலக்கியங்களைப் படித்தார். ஜூலியஸ் பூசிக் போன்ற வீரர்களைப் பற்றியும் படித்தவர். இன்று வரை அவரது பையில் புத்தகம் ஏதாவது இருந்து கொண்டேயிருக்கும். பஸ் பயணங்களிலும், தங்குமிடங்களிலும் அவர் அமைதியாய் புத்தங்களை வாசிப்பதையும், வாசித்ததை உள்வாங்கி கட்சியின் அணிகளுக்குப் பிரயோகிப்பதையும் காணலாம். கடந்த 42 ஆண்டுகளாய் நான் அறிந்தவரை கட்சி முடிவுகளைக் கட்சிப் பேரவைகளில் ரிப்போர்ட் செய்வதில் நிகரற்றவர். அவர் எப்போதும் கட்சி ஸ்தாபனம் குறித்தே அழுத்தம் கொடுத்துப் பேசுவார்.. அவர் எதிரிகளை விமர்சிக்கும் போது கூட ஒரு பண்பட்ட நடைமுறையையே பின்பற்றுவார். சாமானியர்களிடம் உள்ள பழிக்குப் பழி போன்ற உணர்வுகள் கட்சியையும், தனிப்பட்ட தோழர்களையும் சேதப்படுத்தி முடமாக்கி விடும் என்பதைக் கூறித் தடுத்த வரலாறு அவருக்கு நிறைய உண்டு. ஆத்திரமூட்டலும், ஆத்திரமூட்டலுக்கு இரையாவதும் அவருக்குப் பிடிக்காது.கொந்தளிப்பான நிலைமைகளில் கூட கட்சிப் பேரவைகளில் அவர் பேசினால் அடங்கிவிடும். பாரதி முதல் ஜூலியஸ் பூசிக் வரை கூறியவற்றை எடுத்துக் கூறிப்பொருத்தமான முறையில் உணர்வூட்டுவார். கட்சி முடிவுகளை செயல்படுத்துவதில் கவனமாக இல்லை என்றால் முடிவுகள் காகிதத்திலேயே நிற்கும் என்பார். தோழர்கள் செயலுக்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்று கூறுவார். நுகர்வுக் கலாச்சாரம் போன்ற முதலாளித்துவக் கருத்துக்களுக்கு தோழர்கள் இரையாகிவிடக் கூடாது என்று எச்சரிப்பார். இன்று வரை அவர் எளிய வாழ்க்கையை மேற்கொண்டு ஓய்வறியா உழைப்பாளியாய்த் திகழ்ந்து முன்மாதிரியாய் விளங்குகிறார்.1964ல் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி பிளவுபட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் என்.வி. முக்கியமானவர். 1967 தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். அந்தத் தேர்தலில் அவருக்காகக் கட்சியின் சார்பில் செலவிட்ட பணம் ரூ.4500 தான் என்றால் ஆச்சரியமில்லையா? ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சி பெரும் பண முதலைகளை எதிர்த்துக் குறைந்த செலவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.1973ஆம் ஆண்டு திமுக பிளவுபட்டு எம்.ஜி.ஆர். தனிக்கட்சி துவங்கி அதிமுக திண்டுக்கல்லில் நாடாளுமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆர். தோழர் என்.வி.க்கு ஐந்து பவுன் தங்கச் சங்கிலி பரிசளிக்க விரும்பினார். ஆனால் அதை என்.வி. மறுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் பெருமையை நிலைநாட்டினார்.சோசலிச நாடுகளான சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகளுக்கு அவர் கட்சியின் பிரதிநிதியாய் சென்ற சிறந்த அனுபவங்களை நூலில் கூறியுள்ளார்.வாலிபர் சங்கம், தொழிற்சங்கம், பல ஆண்டுகள் விவசாயிகள் சங்கம், கட்சி மையம் என்று அறுபதாண்டுகள் மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்தவர். எங்கு பிரச்சனைகள் எழுந்தாலும் உடனே தலையிடுவதில் தீவிரமாக இருப்பார். மதுரையோடு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 30 ஆண்டுகளாய்ப் பொறுப்பாளராக இருந்தார். நான் மாவட்டச் செயலாளராய் அவரது வழிகாட்டுதலில் செயல்பட்டேன். மூன்று முறை நடந்த சாதிக் கலவரங்களின் போது தெளிவான வழிகாட்டலைக் கொடுத்ததோடு எம்.ஜி.ஆருடன் பேசி நேரடியாய் அவரைக் கலவர பூமிக்கு அனுப்பி வைப்பதில் முக்கியப் பங்காற்றினார். இரு தரப்புத் தோழர்கள் அனுதாபிகளின் பேரவைக் கூட்டங்களை நடத்தி மக்கள் ஒற்றுமைக்கு வழிகாட்டியதை என்னால் மறக்க முடியாது.பெண் சிசுக் கொலை, வரதட்சணைக் கொடுமை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை, தலித்துக்கள் மீதான தீண்டாமை ஒடுக்குமுறைகளை எதிர்த்து கட்சியும் வெகுஜன அமைப்புகளும் தொடர்ந்த போராட்டங்கள் நடத்த அவர் ஊக்கப்படுத்தி வருகிறார். அண்மை ஆண்டுகளாய் அருந்ததியர் இட ஒதுக்கீடு, அவர்களை மலம் அள்ளச் செய்யும் கொடுமைகளை எதிர்த்து முன்னணியில் நின்று போராடி வருவதும் குறிப்பிடத்தக்க அவரது நடவடிக்கையாகும். உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை இடிக்க தமிழக முதல்வரின் உதவியைப் பெறுவதிலும், அதற்குக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ்காரத்தை அழைத்து வருவதிலும் தீவிர கவனம் செலுத்தினார்.அவர் தனது வாழ்வின் பெரும் பகுதியை தென்மாவட்டங்களில் கட்சியைக் கட்டுவதில் செலவிட்டார். அவர் சிறந்த பேச்சாளர், கட்சி அணிகளுக்கு அற்புதமான முறையில் போதிக்கும் ஆசிரியர் போன்ற பல்திறம் பெற்றவர். தமிழ்நாடு கட்சியின் மாநிலச் செயலாளராக தோழர் என்.சங்கரய்யாவுக்குப் பிறகு பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு மீண்டும் மூன்றாவது முறையாகவும் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டு அவரது பயணம் தொடர்கிறது.தோழர் என்.வி. பத்திரிகை பிரசுரங்களை வெளியிடுவதில் மிகுந்த அக்கறை காட்டுவார். நீண்ட காலமாக தீக்கதிரைக் கட்டிக் காத்ததிலும், மூன்று பதிப்புகளாக்கியதிலும் அவருக்குப் பெரும் பங்குண்டு. அடுத்த மாநாட்டிற்குள் திருச்சி, நெல்லைப் பதிப்புகளையும் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாய் உள்ளார். மதுரைக்குக் கட்சிப் பணிக்காக அவர் வரும் போதெல்லாம் தீக்கதிரில் தங்கியிருப்பார். தோழர்களுடன் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் விவாதிப்பார். மதுரை தீக்கதிரில் நவீன அச்சு எந்திரங்களைப் பொருத்துவதிலும், பணிகளை விஸ்தரிப்பதிலும் அக்கறை செலுத்தினார். அவர் கலந்து கொள்ளும் அனைத்துக் கூட்டங்களிலும் தீக்கதிர், செம்மலர், மார்க்சிஸ்ட் பத்திரிகைகளின் விற்பனை பற்றிப் பேசாமல் விட மாட்டார். அதே போல் கட்சியின் கலைக் குழுக்களின் தோழர்களை மிகவும் நேசிப்பார். அவர்களது கூட்டங்களிலும், பயிற்சிப்பட்டறைகளிலும் இருந்து நேரத்தைச் செலவிட்டு வழிகாட்டுவார். இதற்கு கலை இலக்கியங்களின் மீது அவருக்குள்ள இயல்பான ஈடுபாடே காரணமாகும்.பல ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், பதவிகள் பல பெற்றும் தனது துணைவியார் ஆசிரியையாகப் பணியாற்றியும் கூட இன்று வரை சொந்த வீடு கட்டிக் கொள்ளாமல் வாடகை வீடுகளிலேயே வாழ்ந்து வருபவர். அவரது துணைவியார் ஒரு சொந்த வீடு கட்டிக் கொள்ள நீண்ட காலம் ஆசைப்பட்டார். அது நிறைவேறவேயில்லை. ஒருமுறை அந்தத் தாய் "முதிய வயதில் நான் நோய்வாய்ப்பட்டுச் சாகிற போது எந்த வீட்டில் சாவேன்" என்று என்.வியிடம் கேட்டார். அதற்கு அவர் "கவலைப்படாதே. சொந்த வீடு இல்லாவிட்டால் என்ன? என் மடி மீது உன் உடலைத் தாங்கி ஆயிரமாயிரம் செங்கொடிப் புதல்வர்கள் அணி வகுத்து வர இம்மண்ணில் புதைப்பேன்" என்று கூறிய செய்தியைப் படிக்கும் போது நம் கண்ணீல் நீர் மல்குகிறது. அவரது வாழ்வின் அனைத்து விசயங்களும் நூலில் கொண்டு வர முடியாவிட்டாலும் பெரும்பகுதி விசயங்களை நூலில் கொண்டு வருவதில் பாலபாரதி வெற்றி பெற்றுள்ளார்.புரட்சியாளர்களின் பயணம் மிக நீண்டது. தோழர் என்.வி.! நீங்கள் எங்களுக்கு முன்னால் வழிகாட்டிப் பயணிக்கிறீர்கள். நாங்கள் உங்கள் பின்னால் அணிவகுக்கிறோம். அணியணியாய், அளவற்ற நம்பிக்கையோடு... படித்து முடித்ததும் வாய் முணுமுணுக்கிறது.தவறாது படியுங்கள்; இந்தப் புரட்சியாளனின் வாழ்க்கை வரலாற்றை. ஒரு எளிய மனிதன் தலைவராய் உயர்ந்த கதையை.வெளியீடு : பாரதி புத்தகாலயம்421, அண்ணாசாலை,தேனாம்பேட்டை,சென்னை - 600 018விலை ரூ. 60