திங்கள், 20 ஏப்ரல், 2009


வரலாற்றுச்சுவடுகள் - 01: வெண்மணி

ஆர். நல்லகண்ணு
காலச்சக்கரத்தை திரும்பிப் பார்க்கிறேன் சரியாக 37 ஆண்டுகள். வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் 37 ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலம். நேற்று நடந்தது போல இருக்கிறது. தஞ்சாவூர் அருகே அன்று நடந்த கொடுமையை இன்று நினைத்தாலும் நெஞ்சில் குருதி வடிகிறது. இந்தியாவில் நடைபெற்ற உக்கிரமான கொடுமைகளை பட்டியலிட்டால் கீழ வெண்மணி கொடுமையும் ஒன்று. அன்று நடந்த கொடுமையை நான் வாசகர்களுக்கு பதிவு செய்கிறேன்.1968 டிசம்பர் 25கிறிஸ்துமஸ் பண்டிகைஏசுநாதர் பிறந்த நாள் விழாஉலகெங்கும் கொண்டாப்படும் திருவிழா. மக்கள் அனைவரும் திருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க தஞ்சை மாவட்ட கீழ்வெண்மணியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொடிய இரவாகவும், விடியாத இரவாகவும் அமைந்தது.ஆம் . அன்றிரவு தஞ்சை மாவட்டம், கீழ வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். கருகிச் சாம்பலாக்கப்பட்டனர். இவ்வாறு உயிரோடு தீக்கொழுத்தப்படும் அளவுக்கு அவர்கள் செய்த பாவம் வேறொன்றுமில்லை.தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு தங்களுக்குக் கிடைக்கும் வழக்கமான கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கேட்டது தான் அவர்கள் உயிரோடு கொளுத்தப்பட காரணம்.விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு கூலி உயர்வு கேட்டனர். தங்களுக்குக் கிடைக்கும் கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் பல மிராசுதாரர்கள் ஒத்துக் கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர். இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட வேண்டுமென்று நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை ஏற்படுத்தினர். அந்த சங்கத்திலிருந்து திட்டமிட்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவது, முக்கிய ஊழியர்களைக் கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இச் சதிகள் சம்பந்தமாக அவ்வப்போது தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்த சூழ்நிலையில் தான் அந்த உச்சக் கட்டக் கொடுமை நடந்தது.25.12.68 மாலை 5 மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத்தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் திரண்டு வந்து கட்டை அவிழ்த்து விட்டு சென்றனர். அதன் பின்பு பெரு மிராசுதாரர் கோபால கிருஷ்ண நாயுடு போன்றோர் ஆள் திரட்டி வெண்மணி கிராமத்துக்கு அடியாட்களுடன் சென்றிருக்கிறார்கள்.அவ்வாறு தாக்குவதற்கு சென்ற போது நடந்த கைகலப்பில் பக்கிரிசாமி என்பவர் இறந்து விட்டார். ஆனாலும் மிராசுதாரர்கள் துப்பாக்கிகள் சகிதம் அடியாட்களுடன் திரண்டு வந்து தாக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டது. துப்பாக்கித் தாக்குதலுக்குத் தாக்கு பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் ஓடி விட்டனர். தப்பித்து ஓட முடியாத தாழ்த்தப்பட்டவர்களின் தெருவில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உயிர் பிழைக்க கயவர்களிடம் மன்றாடியிருக்கிறார்கள். ஆனால் கொடுங்கோல் மிராசுதாரர்கள் மனம் இறங்கவில்லை. அனைவரையும் தெருக்கோடியிலுள்ள சிறு குடிசைக்குள் அடைத்திருக்கிறார்கள். தீ மூட்டி கதவை வெளியில் தாழ்பாளிட்ட அக்கிரமத்தைச் செய்தனர். தீயின் செந்நாக்குகள் அவர்களைப் பொசுக்க தொடங்கியது. அதன்பின்பும் அவர்கள் வெறி அடங்காமல் வெளியில் கதறிக் கொண்டிருந்த மூன்று சிறு குழந்தைகளையும் தூக்கி நெருப்பில் எறிந்த கொடுமையைச் செய்தனர். மேற்கண்ட கொடுமைகள் அனைத்தும் ஏக காலத்தில் நடந்துள்ளன.இரவு எட்டு மணிக்கு சம்பவம் தொடர்பாக கீவளுர் காவல் நிலையத்திற்கு தெரிந்தும் காவல் துறையினர் இரவு 12 மணிக்கு வந்தனர். இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. அதிகார வர்க்கத்தின் கண்களில் பாமர மக்களின் உயிர் துச்சமானதே இந்த தாமதமாகும். மறுநாள் காலை 10 மணிக்கு குடிசைக்குள் நுழைந்து கருகிய 44 சடலங்களை எடுத்துள்ளனர். மேற்கண்ட 44 பேரும் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டது அரை லிட்டர் நெல் கூலி உயர்வு கேட்ட காரணத்திற்காக மிராசுதாரர்கள் அளித்த பரிசாகும்.இத்தனை கொடுமையையும் செய்த அக்கிரமக்காரர்கள் அதன் பின் இதனை விவசாயத் தொழிலாளர்கள் மீதே பழி போட சூழ்ச்சி செய்தனர். இதற்கு உதவிகரமாக சில பத்திரிகைகள் இட்டுக் கட்டி செய்திகள் வெளியிட்டன. “விவசாயத் தொழிலாளர்களே தங்கள் பெண்டு பிள்ளைகளை இச் சிறு அறையில் தள்ளி வெளியில் தாழ்ப்பாளிட்டுக் கொன்றனர் என்று கற்பனைக்கும் எட்டாத பொய்யைக் கூறினர். நிலபிரபுக்கள் மீது ஆத்திரம் ஏற்படாமலிருக்க நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்ட பொய்யைச் செய்தி ஆக்கினர்.ஆனால் போலீஸ் ஐஜியோ கீவளுர் வட்டாரத்தில் வைசன்ஸ் பெற்ற துப்பாக்கிகள் 42 இருப்பதாகவும், 28 ஆம் தேதி முடிய 5 துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன என்ற கூறினார். இறந்தவர்களில் 19 பேர் பெண்கள், அதில் 12 பேர் திருமணமானவர்கள். 7 பேர் மணமாகாத இளம் பெண்கள், ஆண்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள். 22 வயது முதிர்ந்த ஆண்கள் 3. துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றோர் 11 பேர்.மிராசுதாரர்கள் வைத்த தீயில் மாதாம்பாள் என்ற பெண்மணி, தான் சாகும் பொழுதும் தான் வளர்த்த பிள்ளையை தீ தின்றுவிடக் கூடாது என்று அவ்வாறு அணைத்தபடியே தாயும் சேயும் இணைந்தே கரிக்கட்டியாய் கிடந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் விவரிக்க முடியாத மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.அதையொட்டி அப்பொழுது ‘உழவுச் செல்வம்’ பத்திரிகையில் வெளிவந்த கவிதையைத் தங்களுக்குத் தருகிறேன்.“பாவிகள் வைத்த நெருப்புஉடலைக் கருக்கிய போதும்பெற்றெடுத்த தங்கத்தைக் கைவிடவில்லை.பாசத்தால் பற்றிக் கொண்டாய்.வலது கை வெந்து விட்டது.பிள்ளையைத தாங்கியஇடது திருக்கரத்திலும்சதையெல்லாம் தீ தீய்த்துவிட்ட போதிலும் -எலும்புக் கரத்தால்பிள்ளையை ஏந்திக்கொண்டே பிணமாக கருகிவிட்டாயே.உன் பிறப்பு உறுப்பெல்லாம்நெருப்பு தின்று விட்டபோதும் தாயேபெற்றெடுத்த பிள்ளையைஅணைத்துக் கொண்டிருந்ததாய்ப் பாசத்தைதரணியெல்லாம் போற்றிப்புகழப் போகிறது.நீ உழைக்கும்பெண்ணினத்துக்கு பெருமைதேடித் தந்து விட்டாய்.தாய்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறாய்.நமது வர்க்கத்தின் சிறப்புச்சின்னமாய் - அழியாதஓவியமாய் - உயர்ந்துவிட்டாய்.உனது தியாகம் கவிஞர்களின்கருப் பொருளாய் -ஓவியர்களின் திரு உருவாய்விளங்கட்டும்உனது ஆசை நிறைவேற,வர்க்கம் வாழஎன்றென்றும் உழைப்போம்என உறுதி கூறுகிறோம்.(உழவுச் செல்வம் சனவரி 15, 1969)வெண்மணியில் நடைபெற்ற கோரக் கொடுமையை எதிர்த்து தமிழகம் வெகுண்டெழவில்லை. பண்பாடு, நாகரீகம், மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில், வெண்மணியில் வெந்து சாம்பலாக்கப்பட்ட நாற்பத்தி நான்கு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் மீது இரக்கம் கூடக் காட்டவில்லையே ஏன்? என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.அப்பொழுது கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும், வேலூர் பீடித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள் ஜனநாயக உணர்வு கொண்ட பாட்ரியாட், நியுஏஜ் போன்ற டெல்லிப் பத்திரிகைகள் நாட்டுக்கே அவமானம் என்று கவலையோடு கண்டித்து எழுதின.மக்களின் கொந்தளிப்பு வெளிப்படாத நிலையில் நீதி தேவனும் ஓரஞ் சாய்ந்து விட்டான். ஆம். வெண்மணிச் சம்பவத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்ட நிலப்பிரபு - கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றத் தீர்ப்பு“ Upon the consideration of the evidence on record the Judges felt constrained to hold that the prosecution had failed to bring home the guilt of any of them and consequently acquitted them. They said that the intrinsic infirmities in the prosecution evidence prevended them from convincting the persons who were probable innocene. -‘Hindu’“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்.‘இந்து பத்திரிகை’44 ஏழை உயிர்களின் மீது இதர மக்களுக்கு இரக்க குணம் ஏற்படாத நிலையில்- நீதிமன்றங்களிலும் - ஏழை மக்களுக்கு - தாழ்த்தப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காத போது - நிலப்பிரபுக்களும், பிற்போக்காளர்களும், சாதி வெறியர்களும் - சரடு போடப்படாத திமிர்க் காளைகளாக நாட்டில் இன்னமும் திரிந்து வருகிறார்கள்.விடுதலை விடுதலை விடுதலைபறையருக்கும் இங்கு தீயர்புலையருக்கும் விடுதலைபரவரோடு குறவருக்கும்மறவருக்கும் விடுதலை.என்ற பாரதி விடுதலைக் கனவு கண்டார். அக் கனவுகள் இன்னும் நனவாகவில்லை. பாரதியின் கனவை நனவாக்கக் கங்கணம் கட்டியாக வேண்டும்.தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் - இதரப் பகுதியினரை விட சாதி அமைப்பில் கொடிய ஓடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்ள். அவர்களின் உரிமையை நிலை நாட்டுவது ஜனநாயகத்தின் வலுவான அடித்தளமாகும்.கிராமங்களின் அடித்தட்டில் வாழும் விவசாயத் தொழிலாளர்களிடையே - சாதி வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். ஒன்றுபட்ட இயக்கமாக திரட்ட வேண்டும். வலியோர் இழைக்கும் கொடுமைகளை எதிர்த்து, எளியோர்களுக்குப் பாதுகாப்பாகவும் மக்களைத் திரட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.வலியோர் தம் ஆதிக்கமும், வன்முறையும் எந்த வழியில் வந்தாலும் அதனை எதிர்த்து குரல் கொடுக்கவும், மக்களை திரட்டவும் வேண்டும். அது உலகை மேலாண்மை செய்யத் துடிக்கும் அமெரிக்காவை எதிர்த்து என்றாலும் சரி. ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி கொடுமையை எதிர்த்து என்றாலும் சரி. நாம் எதிர்க்க வேண்டும்.வெங்கொடுமைக்கு பலியான வெண்மணித் தியாகிகள்1. சுந்தரம் (45)2. சரோஜா(12)3. மாதாம்பாள்(25)4. தங்கையன் (5)5. பாப்பா (35)6. சந்திரா (12)7. ஆசைத் தம்பி (10)8. வாசுகி (3)9. சின்னப்பிள்ளை (28)10. கருணாநிதி(12)11. வாசுகி (5)12. குஞ்சம்பாள் (35)13. பூமயில் (16)14. கருப்பாயி (35)15. ராஞ்சியம்மாள் (16)16. தாமோதரன் (1)17. ஜெயம் (10)18. கனகம்மாள் (25)19. ராஜேந்திரன் (7)20. சுப்பன் (70)21. குப்பம்மாள் (35)22. பாக்கியம் (35)23. ஜோதி (10)24. ரத்தினம் (35)25. குருசாமி (15)26. நடராசன் (5)27. வீரம்மாள் (25)28. பட்டு (46)29. சண்முகம் (13)30. முருகன் (40)31. ஆச்சியம்மாள் (30)32. நடராஜன் (10)33. ஜெயம் (6)34. செல்வி (3)35. கருப்பாயி (50)36. சேது (26)37. நடராசன் (6)38. அஞ்சலை (45)39. ஆண்டாள் (20)40. சீனிவாசன் (40)41. காவிரி (50)42. வேதவள்ளி (10)43. குணசேகரன் (1)44. ராணி (4) நன்றி : விழிப்புணர்வு

கொள்கை கோட்பாடற்ற கதாகாலட்சேபங்கள்
-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சி களுமே தங்களுடைய தேர்தல் பிரச்சாரத் தின்போது, நாடும் நாட்டு மக்களும் எதிர் நோக்கியுள்ள முக்கியமான பிரச்சனைகள் குறித்து எதுவுமே கூறாது, அற்ப விஷயங்கள் குறித்து கதாகாலட்சேபங்கள் செய்து வரு கின்றன. உலகப் பொருளாதார மந்தத்தின் விளைவாக, நாட்டில் ஏற்பட்டுள்ள பொரு ளாதார நெருக்கடி குறித்தோ, அதனால் பாதிக் கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் அளிப்பது குறித்தோ எதுவும் கூறாமல், இவ் வாறு அற்பவிஷயங்களை முன்வைப்பது தான் தங்களுக்கு நலம் பயக்கும் என்று உண்மையிலேயே அவை கருதுகின்றன. உலகப் பொருளாதார நெருக்கடியால் ஒரு கோடிக்கும் மேலான வேலைகள் பறிபோய் விட்டன. இதன் காரணமாக வேலையிழந்த தொழிலாளர்கள் தற்கொலைகள் செய்து கொள்வதும், தங்கள் குடும்பம் உயிர்வாழ வேண்டுமென்பதற்காகத் தங்களின் உடல் உறுப்புகளை விற்பதும் தொடர்கதையாகி விட்ட நிலையில், இதைப்பற்றியெல்லாம் எதுவும் கூறாது, மக்களின் நேரடி வாழ்க்கை யில் சம்பந்தப்படாத அற்ப விஷயங்களை இக்கட்சிகள் தூக்கிப் பிடித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன.பாஜக தன்னுடைய ‘இந்து வாக்கு வங்கியை’ ஒருமுகப்படுத்த வேண்டும் என் பதற்காக, மதவெறித் தீயை கூர்மைப்படுத்தும் வண்ணம் வெறிப் பேச்சுக்கள் மூலமாக பிரச்சாரத்தைத் துவக்கியுள்ளது. இவ்வாறு பிலிபித்தில் பேசிய வருண் காந்தியையும், ஒரிசா மாநிலத்தில் காந்தமால் தொகுதியில் பேசிய நபரையும் வேட்பாளர்களாக நிற்க வைத்து அவர்களைப் பாதுகாத்திட பாஜக முனைந்துள்ளது. காந்தமால் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கான காலக்கெடு முடிவடைந்த பின்னர், கிறிஸ்தவ சிறு பான்மையினர் தாக்குதலுக்கு இட்டுச் சென்ற அத்தகைய வெறிப் பேச்சைக் கக்கிய அவ் வேட்பாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெள்ளத்தெளிவாகத் தெரிவித்திருப்பதைப் போல மதவெறி நிகழ்ச்சிநிரலை நடைமுறைப் படுத்தும் வண்ணம் இத்தகைய வெறிப் பேச் சுக்களை விசிறிவிடத் தீர்மானித்திருக்கிறது. இப்போது பாஜக-வின் சார்பில் பிரதமராக அறிவிக்கப்பட்டிருப்பவரும், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய பிரதமரும், ஒருவரை ஒருவர் மிகவும் இழிவான முறையில் வசை பாடிக்கொண்டிருக்கின்றனர். அத்வானி, மன்மோகன்சிங்கை மிகவும் பலவீனமான பிரதமர் என்று கூற, மன்மோகன் சிங், அத் வானி மத்திய அமைச்சராக இருந்த சமயத் தில் மேற்கொண்ட மோசமான நடவடிக்கை களை எடுத்துரைத்திருக்கிறார். கந்தகாரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல் பட்டது, பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில், தான் கையறு நிலையிலிருந்ததாக அத்வானி கூறியது, கராச்சி சென்றிருந்தபோது ஜின்னா குறித்து கூறியது உட்பட இதில் அடங்கும். இதுவல்லாமல் காங்கிரஸ் கட்சியின் தலை வரான சோனியாவும், அவரது மகன் ராகுலும் கூட பிரதமருக்கு ஆதரவாக நின்று, அத்வானி மீது வசைமாரி பொழிந்து கொண்டிருக் கின்றனர்.உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக 75 கோடி வாக்காளர்களுடன் திகழும் இந்தியா வில் உள்ள பெரிய கட்சிகளாகச் சொல்லிக் கொள்ளும் இவைகள் நடத்திடும் கதாகாலட் சேபம் எவ்வளவு கேவலமாக இருக்கிறது? உலகப் பொருளாதார மந்தத்தால் விண்ணை யொட்டியுள்ள வேலையில்லாத் திண்டாட்டத் தைப்பற்றிக் கிஞ்சிற்றும் இவர்கள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அனைத்து அத் தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடு மையாக உயர்ந்துள்ள நிலையில், சாமானிய மக்கள் நாள்தோறும் சாப்பாட்டிற்கே வழி யின்றி திண்டாடும் நிலை குறித்து கொஞ்ச மாவது கவலைப்பட்டார்களா? மக்களைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச் சனைகள் குறித்தும் அவற்றிற்கு நிவாரணம் அளிப்பது குறித்தும் விவாதிக்கக்கூடாது என்பதில் காங்கிரசும், பாஜகவும் மிகவும் தெளிவாக இருக்கின்றன. எனவேதான், மக் களின் அடிப்படைப் பிரச்சனைகள் மீது மட் டும் கவனம் செலுத்திடும் வகையில், தங்க ளுக்கு ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண் டாட்டத்திலிருந்து விடிவும், நல்லதோர் வாழ்க்கையும் தரக்கூடிய விதத்தில் அதற் காகப் போராடும் ஓர் அரசியல் மாற்று தேவை என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். இந்தப் பின்னணியில்தான், பிரதமர் மன் மோகன்சிங், கேரளாவில் தேர்தல் பிரச்சாரப் பயணம் செய்கையில், கம்யூனிஸ்ட்டுகள் மீது வசைமாரி பொழிந்திருக்கிறார். கம்யூனிஸ்ட் டுகள் எப்போதுமே வரலாற்றில் தவறான பக் கத்திலேயே இருந்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். நாட்டைப் பற்றியும், நாட்டு மக்களைப் பற்றியும் இடதுசாரிக் கட்சிகள் முன் வைத்துள்ள கேள்விகள் எதற்கும் அவர் பதிலளிக்காமல் இவ்வாறு விலகிச் சென்றிருக்கிறார். 1942 வெள்ளையனே வெளி யேறு இயக்கத்தின்போது கம்யூனிஸ்ட்டுகள் சுதந்திரத்திற்கு எதிராக நின்றார்கள் என்று கடும் பிற்போக்கான கம்யூனிச எதிர்ப்புப் பிரச் சாரத்தை மேற்கொண்டிருக்கிறார். வெள்ளை யனே வெளியேறு இயக்கத்தின்போது கம்யூ னிஸ்ட்டுகளின் ‘பங்கு’ எவ்வாறானதாக இருந்தது என்பது குறித்து 1992 ஆகஸ்ட் 9 அன்று, நாடு தன்னுடைய 50ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடிய தருணத் தில், அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா இந்திய நாடாளுமன்றத் தின் நள்ளிரவு அமர்வின்போது ஆற்றிய உரையைக் கூறினாலே போதுமானது. அப் போது அவர், கான்பூர், ஜாம்ஷெட்பூர், அகம தாபாத் ஆகிய இடங்களில் உள்ள ஆலை களில் நடைபெற்ற வேலைநிறுத்தங்களை அடுத்து, அரசின் செயலாளர், 1942 செப்டம்பர் 5 அன்று லண்டனுக்கு ஓர் அறிக்கை அனுப் பினார். அதில் அவர், ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களில் பலரின் நடவடிக்கை களிலிருந்து இவர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சியாளர்கள் என்பது தெளிவாகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். இதைவிட வேறேதேனும் சான்று வேண் டுமா, என்ன? சுதந்திர இந்தியாவில் தேர்ந் தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரே, இந்திய நாடாளுமன்றத்தில், அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்ட விழாவில் பேசியபோது, ‘கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் “பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சியாளர்களாக” இருந்திருக் கிறார்கள்’ என்று கூறி பதிவாகியிருப்பதை விட வேறென்ன சான்று தேவை?ஆயினும், பிரதமர் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் பாஜகவுடன் இணைந்து கொண்டு, அதே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, ஆர்எஸ்எஸ்சின் பங்கு குறித்து (பாஜக இதன் அரசியல் அங்கம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று) எதுவும் கூறாமல் வாய்மூடி மவுனம் சாதிக்கிறார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, பம்பாய் உள் துறை, குறிப்பிட்டிருந்ததாவது: “ஆர்எஸ்எஸ் அமைப்பானது, 1942 ஆகஸ்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்து வாய்திறந்து எதுவுமே கூறவில்லை. பிரிட் டிஷ் ஆட்சியாளர்களின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அது முழுமையாக செயல்பட்டது.” இது தொடர்பாக நானாஜி தேஷ்முக் கூட ஒரு தடவை, ‘‘ஏன், ஆர்எஸ்எஸ் இயக்கமானது, ஓர் அமைப்பு என்ற முறையில், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை’’ என்று வினா எழுப்பினார்.மக்களின் துன்ப துயரங்களுக்கு நிவா ரணம் அளிப்பது குறித்து எதுவுமே கூறாது, வாக்களிக்கக்கோரும் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் அரசியல் நிலை குறித்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மக்க ளின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து எதுவுமே கூறாது ஒதுங்கியிருக்கும் இவ்விரு கட்சிகளும், எப்படியாவது ஆட்சியைப் பிடிப் பதற்கு, பணபலத்தை முக்கியமான ஒன்றாகக் கருதுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. மக்கள் மத்தியில் இவர்கள் முன்வைத்திருக் கும் கேள்வி, யாருடைய கொள்கை சிறந்த கொள்கை என்பதல்ல. மாறாக, யார் அதிக அளவில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முடியும் என்பதுதான். சமீபத்தில் கர்நாடகா வில் இரு வாகனங்களில் இருந்த சாக்குப் பைகளில் சுமார் 12 கோடி ரூபாய் அளவிற்கு ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 500 ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டது இதிலிருந்து எந்த அளவிற்கு, இந்த அரசியல் கட்சிகள், அரசியல் தரம் தாழ்ந்து சென்று கொண்டிருக் கின்றன என்பதைக் காட்டுகின்றன. இதில், மேலும் கொடுமை என்னவெனில், இந்தப் பணத்திற்கு இதுவரை எவரும் உரிமை கொண்டாடவில்லை என்பதும், இது எங்கே எடுத்துச் செல்லப்பட்டது என்பதை எவரும் கூறாததுமாகும். இத்தகைய சூழ்நிலைமையில், இத்த கைய கேடுகெட்ட அரசியல் கட்சிகளின் வலைகளுக்குள் மக்கள் சிக்கிக்கொள்ளாமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, நாட்டை யும் நாட்டு மக்களையும் வலுப்படுத்தக்கூடிய விதத்தில் மாற்றுக் கொள்கைகளை முன் வைத்திடுவோருக்கு தங்கள் ஆதரவினை அளித்திட வேண்டும். இதுநாள்வரை காங்கி ரசுடனும், பாஜகவுடனும் ஒட்டிக்கொண்டி ருந்த பல கட்சிகள் அவற்றைக் கழற்றிவிட்டு விட்டு- இத்தகைய மாற்று அரசியல் கொள் கையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய மாற்றால்தான் நாட்டையும் நாட்டு மக்களையும் எதிர்நோக்கியுள்ள பிரச்சனை களிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும். எனவேதான், நடைபெறவிருக்கும் தேர்தலில், காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைவதை மக்கள், உத்தரவாதப்படுத்திட வேண்டும். நன்றி : தீக்கதிர்

சனி, 18 ஏப்ரல், 2009

யுத்தம் நிற்கட்டும்

யுத்தம் நிற்கட்டும் மதுரை சொக்கன்
பூவுலகின் தொல் குடிகளில் தமிழ் குடியும் ஒன்று. மொழி என்பது வெறும் வார்த்தைகளும் வரிகளும் அன்று. ஒரு இனத்தின் முகவரி. தமிழ் மொழியின் தொன்மையையும், இலக்கிய வளமையையும் கண்டு உலகம் வியந்து நிற்கிறது. தமிழில் புழங்கப்படும் ஒவ்வொரு வார்த்தையிலும் தொன்மையான வாழ்க்கையின் சாரமும், அனுபவப் பிழிவும் புதைந்து கிடக்கிறது."கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி" என்ற சொற்றொடரில் அறிவியலுக்கு புறம்பான பெருமிதம் தொனித்தாலும், தமிழர்தம் பண்பாடு உலகின் தொல் பண்பாடுகளில் ஒன்று என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.ஆனால் இன்றைக்கு இலங்கையில் தமிழ் மக்கள் படும் துயரமும், பல ஆண்டுகளாக நீடித்து வரும் மோதலால் முடிவின்றி தொடரும் அவலமும் ஒவ்வொரு தமிழனையும் வேதனையின் விளிம்புக்கு தள்ளுகிறது.1980களில் இலங்கையில் துவங்கிய இன மோதல் இன்றளவும் தொடர்கிறது. இலங்கை மக்கள் தொகையில் 74 சதவீதம் சிங்களர்கள், 18 சதவீதம் தமிழர்கள், 7 சதவீதம் முஸ்லிம்கள் மற்றும் இதர பிரிவினர் ஒரு சதவீதம் என்று அந்நாட்டு மக்கள் தொகைக்கணக்கெடுப்பு கூறுகிறது.தமிழர்கள் என்று கூறும்போது அவர்கள் மூன்று வகைப்பட்டவர்கள். காலங்காலமாக அந்த மண்ணிலேயே வாழ்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்தவர்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின்போது இலங்கையில் தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைகள் போல வேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள்.இந்தியப் பிரதமராக இருந்த சாஸ்திரி இலங்கைப் பிரதமராக இருந்த சிரிமாவோ ஆகியோருக்கிடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி இந்தியாவுக்கு ஒரு பகுதியினர் திருப்பி அனுப்பப்பட்டனர். மீதமுள்ளவர்கள் பூரண குடியுரிமையின்றி இன்னமும் இலங்கையில் இருப்பவர்கள். மூன்றாவது வகையினர் தமிழ் பேசும் முஸ்லிம்கள். கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதியிலுள்ள தமிழர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று துல்லியமாக கூற முடியவில்லை என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.அடுத்து எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த பகுதியில் தமிழர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை சென்றுவிடுமோ என்று இதயம் நடுங்குகிறது.எல்டிடிஇ- பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ராஜபக்ஷே அரசு சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் எனப்படும் தீ குண்டுகளை மக்கள் மீது வீசுகிறது. கைகால்களை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் கூட இந்த குண்டு வீச்சில் இருந்து தப்பமுடியவில்லை. அந்த பகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட செஞ்சிலுவை சங்கத்தினரைக் கூட அரசு வெளியேற்றுகிறது. இந்த மாதம் இந்த பகுதிக்கு கூடுதலாக சவப்பைகள் தேவைப்படும் என்று ஐ.நா. தலைமையகத்திற்கு தகவல் அனுப்பியதைக் கூட தவறென்று ராஜபக்ஷே அரசு குற்றம்சாட்டியுள்ளது. சர்வதேச அளவில் இலங்கைக்கு உள்ள நற்பெயரை செஞ்சிலுவை சங்கம் கெடுப்பதாக ராஜபக்ஷே பொருமியுள்ளார். சொந்த நாட்டு மக்களையே கொத்து குண்டுகள் வீசி கொல்லும் ஒரு அரசின் மீது சர்வதேச சமூகம் எத்தகைய மதிப்பு கொண்டிருக்கும் என்று ராஜபக்ஷேவுக்கு தெரியவில்லை.எல்டிடிஇ-க்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில் சொந்த நாட்டு மக்களையே கொல்லும் ராஜபக்ஷே அரசின் அநியாயத்தை அம்பலப்படுத்தி எழுதும் சிங்கள மொழி பத்திரிகையாளர்கள் கூட தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர்.போர் நடக்கும் பகுதிகளிலிருந்து சர்வதேச ஊடகங்களும் கூட வெளியேற்றப்பட்டுள்ளன. அப்பாவி மக்களை கொன்று குவிக்கவில்லை என்றால், ராஜபக்ஷே நிர்வாகத்திற்கு இந்த அளவுக்கு பதட்டமும் பயமும் ஏற்படவேண்டிய அவசியமில்லை.மறுபுறத்தில் அப்பாவி மக்களை மனிதக் கேடயமாக விடுதலைப்புலிகள் பயன்படுத்துகின்றனர் என்று ஐ.நா. பார்வையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்களது பிடியிலிருந்து தப்பிக்க முயல்பவர்களை எல்டிடிஇ அனுமதிப்பதில்லை என்பது, உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பி வந்த சிலரது நேர்காணலிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்த கடைசி நகரமான புதுக்குடியிருப்பையும் கைப்பற்றிவிட்டோம் என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. பெருமளவு தங்களது பிடிமானத்தை இழந்துவிட்ட நிலையில் இலங்கை அரசு போர்நிறுத்தம் அறிவிக்க சர்வதேச சமுகம் வற்புறுத்த வேண்டும் என்று புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் வேண்டுகோள் விடுக்கிறார். மறுபுறத்தில் கடைசி புலியை கொல்லும் வரை போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இடையில் சிக்கி எத்தனை ஆயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்தாலும் எங்களுக்கு கவலையில்லை என்ற கண்ணோட்டத்துடனேயே ராஜபக்ஷே அரசு செயல்பட்டு வருகிறது.1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுதலைபெற்றது. 1956ம் ஆண்டு பண்டார நாயகா தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிங்கள இன தேசியவாதத்தை தூண்டிவிட்டார். அப்போதிருந்தே தாங்கள் ஒதுக்கப்படுவதாக பூர்வகுடியான தமிழர்களிடையே மனக்குறை எழுந்தது. கல்வி மற்றும் விவசாயக் கொள்கைகள் தங்களுக்கு எதிராக இருப்பதாக தமிழர்கள் ஜனநாயக ரீதியில் குரல் எழுப்பினர். தமிழர்கள் பெரும்பகுதியாக இருந்த வளமையான பகுதிகளில் சிங்கள மக்கள் திட்டமிட்டு குடியேற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. துவக்கத்தில் ஜனநாயக ரீதியில் எழுந்த இயக்கங்களை தொடர்ந்து வந்த இலங்கை அரசுகள் புறக்கணித்தே வந்தன.1972ம் ஆண்டு பண்டாரா நாயகா அரசு புதிய அரசியல் சாசனத்தை கொண்டு வந்தது. புத்தமதம்தான் அரசியல் சாசனப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மதம் என்றும் சிங்கள மொழிக்கே முன்னுரிமை என்றும் இந்த புதிய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டிருந்தது.1980களில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தின்போது கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். உலகத்தரத்திலான யாழ்ப்பாணநூலகம் தீவைத்து கொளுத்தப்பட்டது. இது தமிழர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த அறிவுலகத்திற்கும் பேரிழப்பாகும்.ஒரு செடியை எடுத்து வேறு இடத்தில் நடும்போது கூட வேரடி மண்ணையும் கொஞ்சம் சேர்த்து எடுத்து வைப்பது மரபு. ஆனால் இன்றைக்கு இலங்கை தமிழர்கள் உலகத்தின் பல்வேறு நாடுகளில் முகமற்று முகவரியற்று சிதறிக்கிடக்கின்றனர். தங்கள் சொந்த மண்ணுக்கு என்றைக்கு திரும்புவோம் என்ற ஏக்கம் கவிதையாக, கண்ணீராக வடிந்து கொண்டே இருக்கிறது.சொந்த நாட்டில் வாழ வழியின்றி உயிரைகையில் பிடித்துக் கொண்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கையையும் நம்பிக்கையையும் தொலைத்துவிட்டு சொந்த உடலையே சுமையாக நினைத்து இருந்து கொண்டிருக்கின்றனர்.தமிழர்களின் நியாயமான ஜனநாயகப் பூர்வ உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்தான்போராளிக்குழுக்கள் உருவாகின. தனி ஈழம் என்ற குரலும் எழுந்தது. துவக்கத்தில் இபிஆர்எல்எப் பிளாட், இபிடிபி டெலோ, ஈராஸ் உள்ளிட்ட அமைப்புகள் மட்டுமின்றி விடுதலைப்புலிகளும் கூட சோசலிச தமிழ் ஈழம் என்ற முழக்கத்தை எழுப்பின. ஆனால் எல்டிடிஇ சோசலிசம் என்ற லட்சியத்தை கைவிட்டது மட்டுமின்றி அதை கைவிடாத குழுக்களை சேர்ந்த தலைவர்களையும் கூட கொன்று குவித்தனர் என்பதும் உறுத்தும் நிஜமாகும்.விடுதலைப்புலிகளின் செயல்பாட்டில் பாசிச குணமே மேலோங்கியது. எதிர்கருத்து கொண்ட யாரோடும் பேசித் தீர்ப்பது என்பதற்கு பதிலாக தீர்த்துக் கட்டுவது என்பதே அவர்களின் அணுகுமுறையாக இருந்தது. அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை சீர்குலைத்ததில் தொடர்ந்து வந்த இலங்கை அரசுகளுக்கு மட்டுமின்றி எல்டிடிஇ அமைப்புக்கும் பங்கு உண்டு.இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஷோபா சக்தியின் வார்த்தைகளில் கூறுவதானால், "பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் மட்டுமல்ல புலிகளும் நேர்மையாகவும் உண்மையாகவும் இல்லை. அதனால்தான் பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தன. இருவருமே யுத்தத்தின் மூலமாகவே தமது அதிகாரத்தையும் செல்வாக்கையும் நிலைநிறுத்திக் கொள்கின்றனர்" என்று கூறும் அவர், "இத்தனைக்கு பின்னும் கூட யுத்தத்தில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அவலம் குறித்தோ, நிரந்தரமான சமாதான தீர்வை நோக்கி போக வேண்டிய அவசியம் குறித்தோ எந்த கரிசனையும் இல்லாமல் தங்கள் இயக்கத்திற்கு அதிகாரங்களை பெற்றெடுப்பதிலேயே பேச்சுவார்த்தையை பயன்படுத்தி மாற்றுஅரசியல் இயக்கங்களை ஒழித்துக்கட்டுவதில் மட்டுமே புலிகள் குறியாக இருந்தன. போர்நிறுத்த காலங்களில் மட்டும் 400க்கும் மேற்பட்ட மாற்று இயக்கங்களின் முக்கியஸ்தர்களை புலிகள் கொன்றழித்தனர்" என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.தனி ஈழம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்பதே அனுபவம் உணர்த்துகிறது. தனி ஈழக் கோரிக்கைய ஆதரித்த திமுக போன்ற பெரிய கட்சிகள் கூட ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு தங்களது நிலையை மாற்றிக்கொண்டுள்ளன.1980களில் தமிழகத்தில் பெரும் இனவாத கூச்சல் எழுப்பப்பட்ட நிலையிலும் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சனைக்கு தெளிவான தீர்வை முன்வைத்தது. ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள் தமிழர்கள் வாழும் வடக்க, கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். தமிழர்களுக்கும் தமிழுக்கும் சமஉரிமையும் சம வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்பின் முரணின்றி முன்வைத்தது மார்க்சிஸ்ட் கட்சி. மேலும் இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண ராஜீய ரீதியில் இந்தியா தலையிட வேண்டும். ஐ.நா. சபை போன்ற சர்வதேச அமைப்புகளின் கவனத்தை ஈர்த்து இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்ற குரலையும் தொடர்ந்து ஒலித்து வருகிறது.இப்போது முன்வந்துள்ள முக்கியப் பிரச்சனை இருதரப்புமோதலில் சிக்கி அன்றாடம் உயிரிழந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழ் மக்களை பாதுகாக்க ராஜீய ரீதியில் இந்தியாவும் ஐக்கியநாடுகள் சபையும் தலையிட வேண்டும் என்பதுதான்.இலங்கை இனப்பிரச்னையை சுமுகமாக தீர்க்க ராஜபக்ஷே அரசு பின்பற்றும் கொடூரமான அணுகுமுறையோ விடுதலைப்புலிகளின் நம்பகமற்ற அணுகுமுறையோ எந்தவகையிலும் பயன்படாது.கிழக்கு மாகாணத்தின் அரசு ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக ராஜபக்ஷே அரசு கூறுகிறது. ஆனால் ஒரு நகராட்சிக்கு உள்ள அதிகாரம் கூட அந்த மாகாண அரசுக்கு இல்லை என்று முதல்வர் பிள்ளையான் கூறுகிறார். இத்தகைய ஒரு அரசை வடக்கமாகாணத்திலும அமைத்து பிரச்சனையை முடித்துவிட்டதாக ராஜ்பக்ஷே அரசு கருதுமானால் அது முட்டாள்தனமாகவே இருக்கும். தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் உண்மையாக சுயாட்சி அதிகாரம் உள்ள மாகாணங்கள் அமைக்கப்பட வேண்டும்.முடிவின்றி தொடரும் உள்நாட்டுப்போர் தமிழ் மக்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் வளர்ச்சியும் பெருமளவு பின்னுக்கு தள்ளியுள்ளது. இதை பயன்படுத்தி அமெரிக்கா போனற் வல்லரசுகள் இலங்கையை தங்களது சதுரங்க களத்தல் பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் அமெரிக்க தூதரகத்திற்கு சென்று இலங்கை பிரச்னையில் தலையிடுமாறு மனு கொடுக்கின்றன. ஒரு கட்சியின் தலைவரோ அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு எஸ்எம்எஸ் கொடுக்குமாறு தனது கட்சி தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவை சர்வதேச போலீஸ்காரனாக நினைக்கும் அடிமை மனோபாவமே இது. இப்போது தேவை அமெரிக்க தலையீடு அல்ல. ஐநாவின் தலையீடு.இலங்கை தமிழர் பிரச்சனை தமிழகத்திலும் பிரதிபலிப்பை ஏற்படுத்துவது இயல்பு ஆனால் சிலர் இந்திய இறையாண்மைக்கே சவால் விடுவதும், உணர்ச்சிக் கொந்தளிப்பில் தங்களைத் தாங்களே தீயிட்டு கொளுத்திக்கொண்டு மாள்வதை உற்சாகப்படுத்துவதும் பெரும்கேடாகவே முடியும்.தமிழ் மக்களின் குரல் ஒன்றுபட்டு ஒலிக்கவேண்டிய நேரம் இது. எதிர்கால அரசியல் கணக்கை மனதில் வைத்துக் கொண்டு பிரிந்துநின்று பேதம் வளர்ப்பது இலங்கை தமிழர்களுக்கு எந்த வகையிலும் உதவாது.  நன்றி : செம்மலர்

தோழர் என்.வரதராஜன் வாழ்வும் வரலாறும்

தோழர் என்.வரதராஜன் வாழ்வும் வரலாறும் -

எஸ்.ஏ.பி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயலாளர் தோழர் என்.வி. அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் கவிஞர் பாலபாரதியால் எழுதப்பட்டு வெளிவந்துள்ளது.வரலாறு என்பது எல்லாக் காலங்களிலும் வெகு மக்களால் உருவாக்கப்படுவதுதான். அந்த வெகு மக்கள்தான் தங்களது தலைவர்களையும் உருவாக்குகிறார்கள். வெகு மக்களிடமிருந்து கற்றுக் கொண்டு அவர்களுக்கே வழிகாட்டி வரலாற்றின் பாதை நெடுகிலும் அவர்களை அழைத்துச் செல்கிறவர்களே தலைவர்கள். வரலாற்றில் தனிநபர் பங்கு இந்த வகையில் மகத்தானதாகிறது. கம்யூனிஸ்ட் கட்சியில் தலைவர்களாக வருவது எளிதான காரியமல்ல. நேர்மை, ஒழுக்கம், வீரம், தியாகம் ஆகிய பண்புகளோடு பல ஆண்டுகள் உழைத்து மக்களுக்குச் சேவை செய்வதன் மூலமே தலைவராக முடியும். எண்ணற்ற போராட்ட களங்களில் தலைமையேற்று சிறைகளையும், சித்ரவதைகளையும் சந்தித்தவர்களே கம்யூனிஸ்ட்டுத் தலைவர்கள்.இத்தகைய ஒரு மகத்தான தலைவரின் - தோழர் என்.வி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிக் கொணர்ந்த கவிஞர் பாலபாரதியை மனமாரப் பாராட்டத் தோன்றுகிறது. ஏனெனில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெரும்பாலும் சுயசரிதை எழுதுவதில்லை. தன்னடக்கம் காரணமாகத் தங்களின் வீர தீரத் தியாக வரலாற்றை எழுதுவதில்லை. இது ஒரு குறையே. எனினும் வர்க்கப் போராட்டங்களின் வரலாற்றோடு கம்யூனிஸ்ட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளும் இணைந்தது தான் என்பது இந்நூலைப் படித்தாலே அறிய முடியும்.இந்நூலை ஒரு எளிய மனிதரின், எளிமையான தலைவரின் வாழ்வும் பணியும் என்று குறிப்பிடலாம். ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் பெரிய விவசாயக் குடும்பத்தில், அதுவும் ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்திலே வளர்ந்து வாலிபராகி மில் தொழிலாளியாகிறார். தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டதால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதன்பின் கொஞ்ச காலம் தையல் தொழிலாளியாய் பணிபுரிந்தார். விடுதலைப் போராட்ட வீராங்கனை தோழர் கே.பி. ஜானகியம்மாவின் பேச்சைக் கேட்டு விடுதலைப் போராட்ட ஈர்ப்பு ஏற்பட்டது.என்.வி., பாரதியின் பெயரால் வாலிபர் சங்கம் துவக்கியதும், ஜனசக்தி வாசிக்கத் துவங்கியதும்தான் அவரை அரசியலாக்கி கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் இணைய வைத்தது. 1959ஆம் ஆண்டு தன்னைக் காதலித்த ஜெகதாம்மாவை குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி கலப்புத் திருமணம் செய்தார். என்.வி. தமது மகன்களுக்கு கல்யாணசுந்தரம், பாரதி என்று பெயரிட்டார். கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கம்யூனிஸ்ட்டுத் தலைவர் எம்.கல்யாணசுந்தரம் ஆகியோரின் நினைவாக மூத்த மகனுக்கும், தனது நேசத்துக்குரிய கவிஞர் பாரதியின் பெயரை இளைய மகனுக்கும் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.நீதிமன்றத்தில் நீதிபதி "வேலை நிறுத்தம் செய்யும்படி மில் தொழிலாளர்களைத் தூண்டினாயா?" என்று கேட்டதற்கு "ஆம். தூண்டினேன். என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்" என்று என்.வி. கம்யூனிஸ்ட்டுகளுக்கே உரிய கம்பீரத்தோடு பேசியுள்ளார். திண்டுக்கல்லில் தோழர்கள் ஏ.பாலசுப்பிரமணியம், வி.மதனகோபால், எஸ்.ஏ.தங்கராஜன் ஆகியோருடன் இணைந்து தோல், சுருட்டு, பூட்டு, துப்புரவு ஆகிய தொழில்களில் பணிபுரிந்த தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் சங்கங்களை அமைத்ததில் என்.வி.பெரும் பங்காற்றினார். பல போராட்டங்களில் பங்கேற்றுக் கட்சித் தலைவராய் உயர்ந்தார். இயக்கத்தின் வளர்ச்சியோடு என்.வி.யின் வளர்ச்சியும் நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.தலைமறைவு வாழ்வில் அவர் பசி பட்டினியாய் போலீசாருக்குத் தப்பி வாழ்வதில் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தார். மார்க்சிய இலக்கியங்கள், சோவியத் இலக்கியங்கள் மற்றும் தமிழில் வந்த முற்போக்கு இலக்கியங்களைப் படித்தார். ஜூலியஸ் பூசிக் போன்ற வீரர்களைப் பற்றியும் படித்தவர். இன்று வரை அவரது பையில் புத்தகம் ஏதாவது இருந்து கொண்டேயிருக்கும். பஸ் பயணங்களிலும், தங்குமிடங்களிலும் அவர் அமைதியாய் புத்தங்களை வாசிப்பதையும், வாசித்ததை உள்வாங்கி கட்சியின் அணிகளுக்குப் பிரயோகிப்பதையும் காணலாம். கடந்த 42 ஆண்டுகளாய் நான் அறிந்தவரை கட்சி முடிவுகளைக் கட்சிப் பேரவைகளில் ரிப்போர்ட் செய்வதில் நிகரற்றவர். அவர் எப்போதும் கட்சி ஸ்தாபனம் குறித்தே அழுத்தம் கொடுத்துப் பேசுவார்.. அவர் எதிரிகளை விமர்சிக்கும் போது கூட ஒரு பண்பட்ட நடைமுறையையே பின்பற்றுவார். சாமானியர்களிடம் உள்ள பழிக்குப் பழி போன்ற உணர்வுகள் கட்சியையும், தனிப்பட்ட தோழர்களையும் சேதப்படுத்தி முடமாக்கி விடும் என்பதைக் கூறித் தடுத்த வரலாறு அவருக்கு நிறைய உண்டு. ஆத்திரமூட்டலும், ஆத்திரமூட்டலுக்கு இரையாவதும் அவருக்குப் பிடிக்காது.கொந்தளிப்பான நிலைமைகளில் கூட கட்சிப் பேரவைகளில் அவர் பேசினால் அடங்கிவிடும். பாரதி முதல் ஜூலியஸ் பூசிக் வரை கூறியவற்றை எடுத்துக் கூறிப்பொருத்தமான முறையில் உணர்வூட்டுவார். கட்சி முடிவுகளை செயல்படுத்துவதில் கவனமாக இல்லை என்றால் முடிவுகள் காகிதத்திலேயே நிற்கும் என்பார். தோழர்கள் செயலுக்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்று கூறுவார். நுகர்வுக் கலாச்சாரம் போன்ற முதலாளித்துவக் கருத்துக்களுக்கு தோழர்கள் இரையாகிவிடக் கூடாது என்று எச்சரிப்பார். இன்று வரை அவர் எளிய வாழ்க்கையை மேற்கொண்டு ஓய்வறியா உழைப்பாளியாய்த் திகழ்ந்து முன்மாதிரியாய் விளங்குகிறார்.1964ல் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி பிளவுபட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் என்.வி. முக்கியமானவர். 1967 தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். அந்தத் தேர்தலில் அவருக்காகக் கட்சியின் சார்பில் செலவிட்ட பணம் ரூ.4500 தான் என்றால் ஆச்சரியமில்லையா? ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சி பெரும் பண முதலைகளை எதிர்த்துக் குறைந்த செலவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.1973ஆம் ஆண்டு திமுக பிளவுபட்டு எம்.ஜி.ஆர். தனிக்கட்சி துவங்கி அதிமுக திண்டுக்கல்லில் நாடாளுமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆர். தோழர் என்.வி.க்கு ஐந்து பவுன் தங்கச் சங்கிலி பரிசளிக்க விரும்பினார். ஆனால் அதை என்.வி. மறுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் பெருமையை நிலைநாட்டினார்.சோசலிச நாடுகளான சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகளுக்கு அவர் கட்சியின் பிரதிநிதியாய் சென்ற சிறந்த அனுபவங்களை நூலில் கூறியுள்ளார்.வாலிபர் சங்கம், தொழிற்சங்கம், பல ஆண்டுகள் விவசாயிகள் சங்கம், கட்சி மையம் என்று அறுபதாண்டுகள் மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்தவர். எங்கு பிரச்சனைகள் எழுந்தாலும் உடனே தலையிடுவதில் தீவிரமாக இருப்பார். மதுரையோடு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 30 ஆண்டுகளாய்ப் பொறுப்பாளராக இருந்தார். நான் மாவட்டச் செயலாளராய் அவரது வழிகாட்டுதலில் செயல்பட்டேன். மூன்று முறை நடந்த சாதிக் கலவரங்களின் போது தெளிவான வழிகாட்டலைக் கொடுத்ததோடு எம்.ஜி.ஆருடன் பேசி நேரடியாய் அவரைக் கலவர பூமிக்கு அனுப்பி வைப்பதில் முக்கியப் பங்காற்றினார். இரு தரப்புத் தோழர்கள் அனுதாபிகளின் பேரவைக் கூட்டங்களை நடத்தி மக்கள் ஒற்றுமைக்கு வழிகாட்டியதை என்னால் மறக்க முடியாது.பெண் சிசுக் கொலை, வரதட்சணைக் கொடுமை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை, தலித்துக்கள் மீதான தீண்டாமை ஒடுக்குமுறைகளை எதிர்த்து கட்சியும் வெகுஜன அமைப்புகளும் தொடர்ந்த போராட்டங்கள் நடத்த அவர் ஊக்கப்படுத்தி வருகிறார். அண்மை ஆண்டுகளாய் அருந்ததியர் இட ஒதுக்கீடு, அவர்களை மலம் அள்ளச் செய்யும் கொடுமைகளை எதிர்த்து முன்னணியில் நின்று போராடி வருவதும் குறிப்பிடத்தக்க அவரது நடவடிக்கையாகும். உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை இடிக்க தமிழக முதல்வரின் உதவியைப் பெறுவதிலும், அதற்குக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ்காரத்தை அழைத்து வருவதிலும் தீவிர கவனம் செலுத்தினார்.அவர் தனது வாழ்வின் பெரும் பகுதியை தென்மாவட்டங்களில் கட்சியைக் கட்டுவதில் செலவிட்டார். அவர் சிறந்த பேச்சாளர், கட்சி அணிகளுக்கு அற்புதமான முறையில் போதிக்கும் ஆசிரியர் போன்ற பல்திறம் பெற்றவர். தமிழ்நாடு கட்சியின் மாநிலச் செயலாளராக தோழர் என்.சங்கரய்யாவுக்குப் பிறகு பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு மீண்டும் மூன்றாவது முறையாகவும் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டு அவரது பயணம் தொடர்கிறது.தோழர் என்.வி. பத்திரிகை பிரசுரங்களை வெளியிடுவதில் மிகுந்த அக்கறை காட்டுவார். நீண்ட காலமாக தீக்கதிரைக் கட்டிக் காத்ததிலும், மூன்று பதிப்புகளாக்கியதிலும் அவருக்குப் பெரும் பங்குண்டு. அடுத்த மாநாட்டிற்குள் திருச்சி, நெல்லைப் பதிப்புகளையும் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாய் உள்ளார். மதுரைக்குக் கட்சிப் பணிக்காக அவர் வரும் போதெல்லாம் தீக்கதிரில் தங்கியிருப்பார். தோழர்களுடன் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் விவாதிப்பார். மதுரை தீக்கதிரில் நவீன அச்சு எந்திரங்களைப் பொருத்துவதிலும், பணிகளை விஸ்தரிப்பதிலும் அக்கறை செலுத்தினார். அவர் கலந்து கொள்ளும் அனைத்துக் கூட்டங்களிலும் தீக்கதிர், செம்மலர், மார்க்சிஸ்ட் பத்திரிகைகளின் விற்பனை பற்றிப் பேசாமல் விட மாட்டார். அதே போல் கட்சியின் கலைக் குழுக்களின் தோழர்களை மிகவும் நேசிப்பார். அவர்களது கூட்டங்களிலும், பயிற்சிப்பட்டறைகளிலும் இருந்து நேரத்தைச் செலவிட்டு வழிகாட்டுவார். இதற்கு கலை இலக்கியங்களின் மீது அவருக்குள்ள இயல்பான ஈடுபாடே காரணமாகும்.பல ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், பதவிகள் பல பெற்றும் தனது துணைவியார் ஆசிரியையாகப் பணியாற்றியும் கூட இன்று வரை சொந்த வீடு கட்டிக் கொள்ளாமல் வாடகை வீடுகளிலேயே வாழ்ந்து வருபவர். அவரது துணைவியார் ஒரு சொந்த வீடு கட்டிக் கொள்ள நீண்ட காலம் ஆசைப்பட்டார். அது நிறைவேறவேயில்லை. ஒருமுறை அந்தத் தாய் "முதிய வயதில் நான் நோய்வாய்ப்பட்டுச் சாகிற போது எந்த வீட்டில் சாவேன்" என்று என்.வியிடம் கேட்டார். அதற்கு அவர் "கவலைப்படாதே. சொந்த வீடு இல்லாவிட்டால் என்ன? என் மடி மீது உன் உடலைத் தாங்கி ஆயிரமாயிரம் செங்கொடிப் புதல்வர்கள் அணி வகுத்து வர இம்மண்ணில் புதைப்பேன்" என்று கூறிய செய்தியைப் படிக்கும் போது நம் கண்ணீல் நீர் மல்குகிறது. அவரது வாழ்வின் அனைத்து விசயங்களும் நூலில் கொண்டு வர முடியாவிட்டாலும் பெரும்பகுதி விசயங்களை நூலில் கொண்டு வருவதில் பாலபாரதி வெற்றி பெற்றுள்ளார்.புரட்சியாளர்களின் பயணம் மிக நீண்டது. தோழர் என்.வி.! நீங்கள் எங்களுக்கு முன்னால் வழிகாட்டிப் பயணிக்கிறீர்கள். நாங்கள் உங்கள் பின்னால் அணிவகுக்கிறோம். அணியணியாய், அளவற்ற நம்பிக்கையோடு... படித்து முடித்ததும் வாய் முணுமுணுக்கிறது.தவறாது படியுங்கள்; இந்தப் புரட்சியாளனின் வாழ்க்கை வரலாற்றை. ஒரு எளிய மனிதன் தலைவராய் உயர்ந்த கதையை.வெளியீடு : பாரதி புத்தகாலயம்421, அண்ணாசாலை,தேனாம்பேட்டை,சென்னை - 600 018விலை ரூ. 60

எதற்காக இந்தத் தேவையற்ற ஒப்பந்தம் பிரதமர் அவர்களே! - வி.ஆர். கிருஷ்ணய்யர்
பிரதமர் அவர்கள் எனக்கு அண்மையில் எழுதியுள்ள பதில் கடிதத்தில், ‘தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கம் கிஞ்சிற்றும் இல்லை' என்று குறிப்பிடுகிறார். மகத்தான மனிதர்களே இடறி விழுந்திருப்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன்... நமது ஒற்றைத் துருவ உலகில், அமெரிக்கா தனது ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. இதர தேசங்கள் தமது சுயேச்சையான வெளியுறவுக் கொள்கையைக் கடைபிடிப்பதை நிராகரிக்கிறது.சர்வதேச ஒப்பந்தங்களை முன்னிறுத்தி நிர்ப்பந்திக்கும் வாஷிங்டன் ஒவ்வொரு நாடாய் தன் பிடிக்குள் கொண்டுவருகிறது. அமெரிக்க - இந்திய வேளாண் ஒப்பந்தம் இந்திய வேளாண்மையை காவு கொண்டுவிட்டது என்கிறார் டாக்டர் வந்தனா சிவா. "இந்தியா கோதுமையை ஏற்றுமதி செய்தாலும் சரி, இறக்குமதி செய்தாலும் சரி ‘கார்கில்' நிறுவனம் லாபம் அடைகிறது. அதே வேளையில் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். குழந்தைகள் பட்டினியால் பரிதவிக்கின்றனர். கார்கிலின் சந்தைப் பங்கும், லாபமும் வளர்வதென்பது இந்தியாவில் பட்டினியும், வறுமையும் வளர்வதோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது", என்கிறார் வந்தனா. கப்பற்படை பணியாளர் துறையின் முன்னாள் தலைவர் அட்மிரல் விஷ்ணு பகவத், மன்மோகன்சிங் மீது பணிவார்ந்த விமர்சனத்தை வைத்து இப்படி வினவுகிறார்:"முன் தாக்குதல் போர்களைத் தொடுப்பது, சர்வதேச சட்டங்களையும், ஐ.நா. சாசனத்தையும் மீறுவது, இன்னொரு தேசத்தின் மீது படையெடுக்கக்கூடாதென்ற ‘நூரம்பெர்க் விதிமுறை'களையே மீறிய பெருங்குற்றம் புரிந்திருப்பது.... என்று மீண்டும் மீண்டும் மேலாதிக்கம் காட்டிவரும் நாடு அமெரிக்கா. இரானில் அணு ஆயுதத் திட்டம் எதுவும் இல்லையென்று சர்வதேச அணு சக்திக் கழகமே சான்றிதழ் அளித்த பிறகும், 72 மணி நேரத்திற்குள் இரானில் 1200 இலக்குகள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவேன் என்று மிரட்டுகிற நாடு அது. இரண்டாவது உலகப் போருக்குப் பின், அடுத்தடுத்த அமெரிக்கா ஆட்சியாளர்கள் 66 நாடுகளில் குண்டு வீசுவது, தாக்குவது, படையெடுப்பது ஆகிய கைவரிசைகளைக் காட்டி வந்துள்ளனர். இத்தகைய ஒரு நாட்டோடு எப்படி ‘கேந்திரமான உறவு' (Strategic partnership) பூண முடியும்."அமெரிக்க யுரேனியம், அணு உலை இவற்றை வாங்கினால் மட்டும்தான் எரிசக்தி தேவையை நிறைவேற்ற முடியுமென்று பிரதமர் வாதம் செய்கிறார். நமது ஆற்றல்களின் ஊற்றுக்கண்கள் ஏராளம். காற்றாலை மூலம் மின்சக்தி பெறும் வலுவை நாம் முழுமையாகக் கணக்கில் கொள்ளவேண்டும். எரிவாயுவிலிருந்து மின்னாற்றல் பெறும் ஏற்பாடு என்னவாயிற்று? சின்னஞ்சிறு நாடான நேபாளம் கூட பயன்படுத்தும் சூரிய ஆற்றல் மற்றும் உயிரியல் ஆற்றல்கள் போன்றவற்றை ஏன் புறம் தள்ள வேண்டும்? நமது நீர்மின் ஆற்றல் வசதி அளப்பரியது. பிறகு எதற்கு அணுசக்தி?அணுசக்தி கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் டாக்டர் ஏ. கோபாலகிருஷ்ணன் கூறுவதிலிருந்து சில துளிகள் இதோ!."கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் நிலக்கரி வளம், இன்னும் போதுமளவு பயன்படுத்தப்படாத நீர் மின் ஆற்றல், இலகுவாகத் தோண்டக் கிடைக்கும் தோரியம் ஆகிய மூன்று ஆற்றல் ஆதாரங்கள் நமது நாட்டில் நிறைந்துள்ளன. சக்தி பாதுகாப்பு பற்றி உண்மையிலேயே இந்த அரசுக்கு அக்கறை இருக்குமானால் இந்த மூன்று ஆற்றல்களைப் பயன்படுத்த முனைப்பான, முன்னுரிமை மிக்க நடவடிக்கைகள் ஏன் எடுக்கப் படவில்லை?"இறக்குமதி செய்ய வேண்டிய அணு உலைகளுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை. அதற்கான தொழில் நுட்பம் இங்கில்லை. அதை இறக்குமதி செய்வதை 123 ஒப்பந்தம் அணுமதிக்கவில்லை."இப்படியான உலைகளைப் பெற பிரதமர் விழுந்தடித்துக் கொண்டு ஓடுவது, அந்நிய அணு சக்தி கம்பெனிகள் அவர்களது சரக்குகளை நமது தலையில் கட்டுவதற்கு ராஜ கம்பளம் விரிக்கத்தான்!"சொந்த ஆற்றல் ஆதாரங்களைப் புறந்தள்ளிவிட்டு, கெடுபிடி நிறைந்த - வரைமுறைக்கு உட்பட்ட - சந்தேகத்திற்குரிய ஒரு ஒப்பந்தத்திற்குப் போவது ஏற்கத் தக்கதே அல்ல".இன்றைய ஆளும் வர்க்கம் இழைக்கும் இத்தகைய பெரும்பிழைக்கு இந்திய மக்கள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வரும்.நன்றி : டெக்கான் கிரானிக்கல் (28/09/07)தமிழில் : எஸ்.வி.வி.அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம்என்ன தான் பிரச்சனை?இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையில் ‘123' ஒப்பந்தம் இருக்கும் போது ஏன் ‘ஹைட்' சட்டம் பற்றி பேசப்படுகிறது?123 ஒப்பந்தத்தின் இரண்டாவது பத்தியில், அவரவர் நாட்டின் சொந்த சட்டங்கள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகள் போன்றவற்றுக்கு உடன்பட்டுத்தான் இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள அத்துணை நடவடிக்கைளையும் முழுமூச்சாக நின்று நாம் முடித்து விட்டாலும் கூட, அமெரிக்க நாடாளுமன்றம் பச்சைக் கொடி காட்டினால் தான் ஒப்பந்தம் அமலுக்கு வரும்.அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் (Nuclear Non - Proliferation Treaty) கையொப்பமிடாத இந்தியாவுடன், அணுசக்தி சம்மந்தமான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஒத்துழைப்பதை முறைப்படுத்துவதற்காகவென்றே அமெரிக்க செனட்டில் இயற்றப்பட்டுள்ளதுதான் "ஹைட்" சட்டம். இந்த ஹைட் சட்டத்தின் நிபந்னைகளுக்கு உட்பட்டுத்தான் - அந்த நிபந்தனைகள் சரிவர பின்பற்றப்பட்டுள்ளதாக அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே தான், 123 ஒப்பந்தம் அமலுக்கு வரும். எனவே தான், அமெரிக்காவின் ஹைட் சட்டம் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதாகி விட்டது.ஹைட் சட்டத்தின் நிபந்தனைகள் தான் என்ன?அமெரிக்காவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து நமது நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டு, பிரச்சினை பூதாகரமாக வெடித்த போது, எல்லாம் கட்டுக்குள்தான், இருக்கிறது என்று உறுதியளித்த பிரதமர் மன்மோகன் சிங் அதனை நிரூபிக்க ஒன்பது உறுதிமாழிகளை வழங்கி எதிர்க்கேள்வி கேட்டவர்களையெல்லாம் வாயடைக்கச் செய்தார். இது நடந்தது 2006 செப்டம்பரில், ஆனால் சென்ற ஆண்டின் இறுதியில் இயற்றப்பட்ட ஹைட் சட்டம், மன்மோகனின் "பாயிண்ட்டுகளை" தவிடு பொடியாக்கிவிட்டது.உடனேயே ஹைட் சட்டம் குறித்து எதிர்ப்புகள் வெடிக்க, அரசு தரப்பில், 123 ஒப்பந்தத்தில் அனைத்தும் சரி செய்யப்பட்டு விடும் என்று உறுதி கூறப்பட்டது. ஆனால்...ஹைட் சட்டப்படி அமெரிக்க அதிபர் 123 ஒப்பந்தம் ஏற்பட்ட ஆறு மாதத்திற்குள் - அதாவது 2008 ஜனவரி மாதத்திற்குள் - இந்தியா அனைத்து நிபந்தனைகளையும் ஏற்று, சரிவர செயல்படுத்திய பாங்கை, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு எடுத்துரைக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் இத்தகைய நற்சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். அமெரிக்க அதிபரின் நன்மதிப்பினை ஈட்டும் விதத்தில் நம் நாட்டின் செயல்பாடுகள் இருத்தல் வேண்டும். நெடுங்கால நட்பு நாடான ஈரானை எதிர்த்து இருமுறை வாக்களித்தது போன்ற நன்னடத்தைகள் தொடர்ந்து தேவைப்படும்!நாட்டின் பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ள ஒப்பந்தத்தைச் சாடுவது முறையாகுமா?அரசு செய்து கொள்ளும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் தரக்கூடிய அல்லது மறுக்கக் கூடிய அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லையென்கிறது நமது அரசியல் சாசனம். உலகின் 85 நாடுகளில், நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் எந்தச் சர்வதேச ஒப்பந்தமும் செல்லாது என்பது தான் நிலை. நமது நாட்டில் நிலவும் ஜனநாயக விரோத அம்சம் விரைந்து நீக்கப்பட வேண்டும்.நாடாளுமன்றத்தில் விவாதிக்கவே கூடாது அல்லது விவாதத்தை அனுமதிக்கவே முடியாது என்று கூறுவது எந்த வகை நியாயம்? அதிலும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அதாவது காங்கிரஸ் கட்சிக்குத் தனி மெஜாரிட்டி கூட கிடையாது. இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு இருப்பதனால் மட்டுமே பிரதமர் நாற்காலியை அழகு படுத்திக்கொண்டிருக்கும். ஒருவருக்கு, நாற்பதாண்டுக் காலம் நாட்டையே கட்டுண்டு விடும்படி செய்ய என்ன தார்மீக உரிமை உள்ளது?தமக்கு உறுதியான ஆதரவினை நல்கி வரும் இடதுசாரிகளைப் பார்த்து "வேண்டாமென்றால் விலகிக் கொள்ளட்டும்", என்று `நன்றி' பாராட்டும் பிரதமருக்கு மீடியாக்களின் விசில் பறக்கிறது! என்னே இவர்களின் ஜனநாயக மாண்புகள்?!மின்தேவையைப் பூர்த்தி செய்ய வல்ல அணுமின் உற்பத்தியை ஏன் குறை கூறவேண்டும்?நாட்டின் மொத்த மின் உற்பத்தியில், அணு மின் உற்பத்தியின் இன்றைய பங்கானது சுமார் மூன்று சதம் தான். அரசு உத்தேசித்துள்ள பிரம்மாண்ட முயற்சிகளனைத்தும் வெற்றி பெற்றால் கூட 2020 ஆம் ஆண்டில் அணுமின் உற்பத்தியின் பங்கு மொத்த மின் உற்பத்தியில் ஏழு சதத்தைத் தொடும். எனவே, மொத்த மின் தேவை பூர்த்தி என்பதெல்லாம் கலப்படமற்ற பொய்யே. இதற்கு நாட்டின் சுயாதிபத்திய உரிமையையும், வெளியுறவுக் கொள்கையையும் ஈடாக வைப்பது மதிகெட்ட பகடை உருட்டலாகும்.இறக்குமதி செய்யப்போகும் செலவுக் கணக்கு என்று பார்த்தால், அணு மின் உற்பத்திக்கு ஆகக் கூடிய செலவு, இதரவகையிலான மின் உற்பத்தி செலவைப் போல் இரு மடங்குக்கும் கூடுதலானது.. எதற்கு இத்தகைய அதீத விலை கொடுக்க வேண்டும்?உண்மையில், ஈனுலைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க தனியார் கம்பெனிகளுக்குத்தான் அணு ஒப்பந்தம் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். 1986-ஆம் ஆண்டின் செர்னோபில் (ரஷ்யா) விபத்துக்குப் பிறகு ஈனுலைகளை வாங்குவாரின்றி தவித்துக் கொண்டிருந்த அமெரிக்கக் கம்பெனிகள் மூடுவிழாவை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தன. ஜெர்மனி நாடு இருக்கிற அணு சக்தி நிலையங்களையே மெது மெதுவாக மூடி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் இறையாண்மையைவிட்டுக் கொடுத்தும், இந்தியச் சமானியனின் தலையில் மிளகாய் அரைத்தும், அமெரிக்கக் கம்பெனிகளுக்கு சூடான வியாபாரம்!இப்போது சொல்லுங்கள், உண்மையான தேசபக்தி உள்ளவர்கள் ஏற்கக் கூடியதா இந்த உடன்பாடு?

இட்லர்களும் சார்லி சாப்ளினும்

இட்லர்களும் சார்லி சாப்ளினும்
எஸ்.வி. வேணுகோபாலன்
எதிரிகளால் ஆபத்தை எதிர்நோக்கும் இட்லர்புறப்படுவானாம்ஒரே நேரத்தில் ஒன்பது கார்களில்.........ஒருவர் போல் மற்றவரிருக்கஉண்மை முகம் இது தான் என்று தெரியாதிருக்க!உலகம் அப்படியேபயணப்பட்டுக் கொண்டிருக்கவில்லைஉலகைக் குலுக்கிய புரட்சியின் புத்திரர்கள்புறப்பட்டு வந்தார்கள்பாசிசத்தின் முகமூடி கிழிக்கஇரவுகளையும் உறவுகளையும்தொலைத்தமனிதகுல எதிரியின்ஆதிக்கச் சிந்தனைகள்குவிமையப்பட்டிருந்தஅதே நெற்றிப் பொட்டில்தான்பின்னொரு வீழ்ச்சிகண்ட நாளில்அவனது துப்பாக்கி முனையைஅவனே பொருத்திச் சுட்டு கொண்டது.இட்லரின் ஸ்வஸ்திகாஇட்லரின் நமஸ்தேஇட்லரின் வன்மம்பழக்கிக் கொண்டவர்கள்ஒரே நேரத்தில் புறப்படுகிறார்கள்குஜராத்தில் - ஒரிஸ்ஸாவில்.... கர்நாடகத்தில்.....பண்பாட்டுக் களத்தில்நிறுத்தப் பட்டிருக்கிறதுஅவர்களது கொடிக்கம்பம் சோமேஸ்வரரை முன்வைத்தும்கிறிஸ்துவனாக சித்தரித்தும்தனது சிலை நிறுவலைத் தடுத்து நிறுத்தியஅவர்களதுஅற்ப கொண்டாட்டங்களால்சற்றும் பாழ்பட்டுவிடாதகுழந்தைமைக் குறும்போடுகைத்தடி சுழற்றி நடக்கிறார் இட்லரையே எதிர்கொண்டசார்லி சாப்ளின்உலக மானுடத்தை நேசிக்கும்பரந்த புன்னகையோடும்ஆதிக்க வெறியர்களைச் சாடும்அதே தீர்மானத்தோடும்........ நன்றி : தீக்கதிர் - இலக்கிய சோலை

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

அறிவாயுதம் ஏந்துவோம்

நூல் விமர்சனம் அறிவாயுதம் ஏந்துவோம் பால்ராஜ்
சமூக களத்தில் சுரண்டல், ஒடுக்குமுறை இரண்டையும் ஒருசேர எதிர்த்து போரிடும் ஒவ்வொருவரும் ஆய்ந்து கற்றுத்தேர வேண்டிய அற்புத நூல் மார்க்ஸிய மெய்ஞ்ஞானம். தத்துவம், அரசியல், பொருளாதாரம் என்ற மூன்று துறைகளிலும் ஒரு மார்க்ஸியவாதி தன்னை தொடர்ந்து செழுமைப்படுத்தவேண்டிய அவசியத்தை இந்நூலின் அசிரியர் ஆரம்பத்திலேயே குறிப்பிடுகிறார். இந்நூலாசிரியர் சரளமான எளிய மொழி நடையில் மார்க்ஸிய மெய்ஞ்ஞான தத்துவத்தை விளக்குகிறார். எடுத்துக்காட்டாக தத்துவம் என்றால் என்ன? என்ற கேள்வியை எழுப்பி, எவற்றையெல்லாம் நடைமுறையில் மெய்பித்து சாதிக்க விரும்புகிறோமோ அவற்றைப் பற்றி நாம் பெற்றிருக்கும் அறிவுதான் தத்துவம் என்கிறார். மேலும் அவரே ஒரு செயல் துணிவுள்ள ஊழியனோ, தொழிலாளியோ பிசகில்லாமல் புரட்சிக்குரிய காரியங்களை செய்துகொண்டு போக வேண்டுமானால் அவனுக்கு விஷயங்களை சரிவர ஆய்ந்தறிந்து அதனடிப்படையில் தர்க்கம் செய்து முடிவுக்கு வருவதற்கான ஆய்வுமுறை அவனுக்கு இருக்கவேண்டும் என்றும் என்றைக்கும் ஒரே மாதிரி இல்லாமல் மாறிக் கொண்டே இருக்கின்ற நிலைமைகளை அலசி ஆராயும் ஆய்வு முறை தேவை என்றும் கூறுகிறார். அந்த ஆய்வு முறை இயக்கயியல் பொருள் முதல் வாதம் என்ற மெய்ஞ்ஞானத்தில் காணக்கிடக்கிறது என்கிறார்.இயக்கவியல் லோகாயதவாதம் அல்லது இயக்கவியல் பொருள் முதல் வாதம் குறித்த தெளிந்த விளக்கமே இந்நூலாகும். மேலும் உலகம் சம்பந்தப்பட்ட அகண்ட இந்த பிரபஞ்சம் இயற்கை, மனிதன் ஆகியவற்றின் இருப்பும் மூன்றிக்குமான தொடர்பையும் விஞ்ஞானரீதியாக விளக்குவதே இம்மெய்ஞ்ஞானத்தின் அடிப்படை நோக்கம். ஐம்புலன்களான கண், காது, மூக்கு,வாய்,மெய் (தோல்) இதன்மூலமாகக் கிடைக்கின்ற காட்சி அறிவு, ஒலி அறிவு, மணம் குறித்த அறிவு, ருசி குறித்த அறிவு, தொடு அறிவு என புலனறிவுகளையும் இதன் மூலமாக சேகரித்தவற்றைக் கொண்டு மனிதனின் கருத்துத்துறை செயல்பாடுகள் குறித்தும் தெளிவுபட விளக்குகிறார். மூளையின்மீது விழும் பொருட்களை பிரதி பிம்பங்கள்தான் சிந்தனை என்றும் பொருட்கள் இன்றி சிந்தனை இல்லை என்றும் பொருள் முதல் வாதத்தை சிறப்பாக விளக்குகிறார். பொருள்தான் சிந்தனையை சிருஷ்டிக்கிறது. சிந்தனைப் பொருட்களை சிருஷ்டிப்ப தில்லை என்று விளக்கி, இவ்விவாதத்தை மீட்டிச்சென்று கடவுள் தன் சிந்தனையால்தான் இந்த உலகைப் படைத் தாரா என்ற கேள்வியையும் எழுப்புகிறார். சாதாரணமாக இப்பிரபஞ்சத்தில் இருக்கின்ற கோடிக்கணக்கான பொருட் களையும் உயிர்களையும் கடவுள் படைத்திருக்கவே முடியாது என்ற முடிவுக்கு வாசகனை தத்துவார்த்த துறையில் வளர்த்தெடுக்கிறது இந்நூல். வறட்டுத்தனமாக நாத்திகக் கருத்துகளை பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு விஞ்ஞான ரீதியாக நாத்திகம் விளக்கப்படுகிறது.இந்த நூலை படித்து தத்துவத்தை அறிந்து கொள்வதன்மூலம் அது ஒரு ஊழியனுக்கு எவ்வாறு உதவ முடியும் என்றால், நம்மில் பலர் மனிதனுடைய இன்றைய பிரச்சனைகளுக்கு கடவுள்களை, விதியை, முற்பிறவியை, பேய் பிசாசுகளை, பில்லி சூனியத்தையும் சிலர் தன்னம்பிக்கை,, சுயமுன்னேற்றம், சுயதொழில், கடின உழைப்பு இவைகளில்லாததும் பிரச்னைகளுக்கு காரணம் என அறிவியல் ஆதாரமற்ற காரணங்களை முன்வைக்கின்றனர். இந்நூல் மனிதனுக் குள்ள சூழலே வாழ்நிலையை தீர்மானிக்கின்றது என விஞ்ஞானப் பூர்வமாக நிறுவி மனிதனுடைய இன்றைய பிரச்னை களுக்கு அவன் சார்ந்திருக்கும் சமூக அமைப்பே காரணம் என விளக்குகிறது. எனவே, சமூக அமைப்பை மாற்றப்போராடும் ஒரு ஊழியனுக்கு இந்நூல் ஒரு கலங்கரை விளக்கம்.புத்தகத்தின் பெயர் : மார்க்ஸிய மெய்ஞ்ஞானம்ஆசிரியர் : ஜார்ஜ் பொலிட்ஸர்,வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவ பிரச்சாரகர் நாஜிக்களால் கொலை செய்யப்பட்டவர். நன்றி : முழக்கம்

நீதியும் அமைதியும்

நீதியும் அமைதியும்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பிப்ரவரி 19 அன்று நிகழ்ந்த காட்சியை ஒருகணம் நம் மனத்திரையில் போட்டுப் பார்த்தால் வழக்கறிஞர்களின் மீதான காவல்துறையின் ஒரு படையெடுப்பாகவே தோன்றும்!கையில் இறுக்கிப் பிடித்த லத்திக் கம்புகளோடு அந்தக் காக்கிச் சட்டைக் காவலர்கள் ஓர் அசுரத்தன தாக்குதலையே அரங்கேற்றினர்.ஏராளமான வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்திற்கு வந்த பொதுமக்கள் என அனைவரும் ரத்தம் சிந்தும்படித் தாக்கப்பட்டனர். அந்த உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரே இத்தகைய கொடூரத் தாக்குதலுக்குள்ளானார் எனும் போது போலீசின் கட்டறுந்த அத்துமீறல் எந்தளவுக்குச் சென்றுள்ளது. என்பது தெரிகிறது. நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் கூட போலீஸின் குண்டாந்தடித் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களிடையே நிகழ்ந்த மோதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த போலீஸ் இங்கே நீதிமன்றத்தில் படுவேகமாய்ச் செயல்பட்டு ஒரு வன்முறையே நடத்தியது.நீதிமன்றம் எத்தனையோ வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால் தன் வளாகத்தினுள் இத்தகைய போர்க்களம் போன்ற சம்வத்தைச் சந்தித்ததில்லை.இந்துத்துவா - சனாதனக் காவலர் சுப்பிரமணியசாமியின் மீது முட்டை வீசித்தாக்கிய வழக்கில் - தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை என்பதன் பேரால் - நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு பதட்டச் சூழல் உருவாக்கும் விதமாக காவலர்படை குவிக்கப்பட்டதும், தொடர்ந்து காவல்துறையினர் நடந்து கொண்டவிதமும் ரொம்ப அருவருக்கத்தக்கதாகும்; ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். சுப்பிரமணியசாமி மீது நடத்திய முட்டை வீச்சுத் தாக்குதல் என்பது ஒரு வெறுக்கத்தக்க செயல்தான்.அண்மைக்காலமாகத் தமிழகத்தில், தேர்தல் களத்தின், கல்லூரி, நீதிமன்ற வளாகங்களின் சூழல்கள் கெட்டு வருகின்றன. அவற்றுக்குரிய அமைதியான- ஜனநாயக நெறியான சூழல்கள் நிலவவேண்டும் என்பது எல்லாரின் எதிர்பார்ப்பு.வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய - அதற்குப் பொறுப்பான காவல்துறையினர் மீது தமிழக அரசு சட்ட ரீதியான உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். ஆனால், இத்தாக்குதல் பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கக்கூட அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.இந்நிலையில் தமிழகமெங்கும் வழக்கறிஞர்களின் போராட்டம் தொடர்கிறது. தாக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதும், நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் அமைதியான சூழல் நிலவச் செய்வதும் தமிழக அரசின் உடனடிக் கடமையும் பொறுப்புமாகும். நன்றி : செம்மலர்
சுப்பிரமணியசுவாமி மீது முட்டை எறிந்தது தவறுதானே?தவறுதான். அதேபோல இந்துத்துவாவைக் காக்க சு.சாமி எடுக்கும் அவதாரங்களும் தவறுதான். காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்ட சாமியார்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் இந்துத்துவாவை வளர்ப்பது சம்பந்தமாக ஓர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார் சாமி. சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்றதை எதிர்த்துத்தான் உயர்நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கினார் சாமி. இவர் மீது முட்டை வீசி இவரைத் தியாகியாக்கக்கூடாது. இவரது மடிசஞ்சித்தனத்தை எதிர்த்து, விடாது இயக்கம் நடத்த வேண்டும். நன்றி : இளமதி பதில்கள் - செம்மலர்

ஒரு மகாகவியைப் பற்றி ஒரு மாமேதை


ஒரு மகாகவியைப் பற்றி ஒரு மாமேதை... இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்
ரவீந்திரநாத் தாகூர் பற்றி இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி இங்கே...மகாகவி ரவீந்திரநாத் தாகூர் வெறும் கலைஞனாக மட்டும் இருக்கவில்லை. கவிதை, பாடல், நாடக ஆக்கம், நாட்டியம், ஓவியம் தீட்டுதல் முதலான பல்வேறு கலைகளில் ஈடுபாடு கொண்டிருந்ததுபோல் மக்கள் சேவையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தாகூர் 1884ஆம் ஆண்டு இறுதியில் பிரம்மசமாஜத்தின் செயலாளராகி பொதுச்சேவையில் இறங்கினார். நவீன இந்துமதத்தை -அதாவது, பங்கிம் சந்திரர் இந்துமதப் பழமையைப் புதுப்பிக்க முனைந்து நடத்திய பிரச்சாரத்தை அவர் பகிரங்கமாக எதிர்த்தது இந்தக்கட்டத்தில்தான்.தாகூர் மிக விரைவிலேயே அரசியல் நடவடிக்கையில் அக்கறை காட்டினார். 1886ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றார். அது மட்டுமல்ல; 'மாதாவின் வேண்டுகோளைக் கேட்டபிறகே நாமெல்லாம் இங்கே கூடியிருக்கிறோம்' என்று சொல்லும் ஒரு பாடலை தாகூர் பாடினார். அவரது பாடல், மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு உத்வேகமூட்டியது.பிரிட்டிஷ் இந்தியாவில் வைஸ்ராய் லிட்டன் பிரபு 1877-இல் டில்லியில் பெரும் ஆடம்பர அமர்க்களத்துடன் ஒருகோலாகல தர்பார் நடத்தியதைக் கடுமையாக நையாண்டி செய்து தாம் எழுதிய மனத்தை ஈர்க்கும் கவிதையொன்றை அவ்வாண்டு நடைபெற்ற இந்து விழாவில் பாடினார் தாகூர். அந்தக் கவிதையை மக்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். பிரபல கவிஞர் நவீன் சந்த்ரன் அக்கவிதையை வாழ்த்தி அன்றே ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார்.1898இல் பிரிட்டிஷ் இந்திய அரசு தேசவிரோத நடவடிக்கைத் தடுப்புச்சட்டம் என்றொரு சட்டம் கொண்டு வந்தது. திலகர் கைது செய்யப்பட்டது இந்தச்சமயத்தில்தான். தாகூர் இந்தச் சட்டத்தை எதிர்த்து கல்கத்தாவில் கண்டனக்கூட்டம் நடத்தினார். தொடர்ந்து, இது கண்டனத்திற்குரிய தடைச்சட்டம் என்று விமர்சனக் கட்டுரையொன்றும் எழுதிப் பிரபலப்படுத்தினார். இந்தச் சமயங்களிலெல்லாம் தாகூரின் நடவடிக்கைகளை போலீஸ் கண்காணித்ததுடன், அவரை பிரிவு பி-12 என்பதன் பேரில் ஒரு கவனிக்கத்தக்கப் புள்ளியாக அறிவிக்கவும் செய்தது. திலகருக்கு எதிரான வழக்கை எதிர்கொள்ள கல்கத்தாவில் நிதி திரட்டுவதில் முன்னின்று செயல்பட்டவர் தாகூர்.வங்காளத்தில் உருவான புரட்சி அமைப்புகள் மீது அவருக்கு அனுதாபம் உண்டு. அந்த அமைப்புகளில் ஒன்றில் அவர் சிறிதுகாலம் அங்கம் வகிக்கவும் செய்தார். அவர் தமது நூல்கள் பலவற்றிலும் புரட்சியாளர்களைப் பாராட்டியும் வாழ்த்தியுமிருந்தார். 1898-99ல் தாகூர் தாம் எழுதிய ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறியிருந்தார்: "மக்களின் இதயங்களில் காங்கிரஸ் முழுமையாக இடம்பெற வேண்டுமென்றால் அது தேசத்திற்கு முழு சேவை செய்ய வேண்டும். அதல்லாமல் சட்டரீதியான காரியங்களுக்காக வேண்டி எஜமானர்களின் முன்னால் நின்று காங்கிரஸ் வாலாட்டுமேயானால் அதற்கு ஏதேனும் கொஞ்சம் ரொட்டித்துண்டு கிடைக்கும்; சில வேளைகளில் அவமானமும் கிடைக்கும்."அறிவாளிகளாகிய எழுத்தாளர்களுக்கு அரசியல் தேவையில்லையென்று மார்க்சிஸ்ட் அல்லாத இலக்கியவாதிகள் கூறும் வாதத்தை தாகூரின் வாழ்க்கையும் பணிகளும் முழுமையாக நிராகரிக்கின்றன. 1905ல் தொடங்கிய வங்கப் பிரிவினை எதிர்ப்பு இயக்கத்தில் தாகூர் தீவிரமாகப் பங்கேற்றார். சுதேசி இயக்கமொன்றும் பிரிட்டனுக்குப் பதிலாக இருக்கப்போவதில்லை என்றும், இணையான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே தேவையானது" என்றும் அவர் வாதிட்டார்... 1919ல் காந்திஜியைக் கைது செய்த சமயத்திலும், ஜாலியன் வாலாபாக் படுகொலை சமயத்திலும் தாகூர் மிகக் கோபங்கொண்டார். ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து, தமக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கிய அனைத்து கௌரவப் பதவிகளையும் தூக்கியெறிந்துவிட்டார். அதற்குப் பின்னர் அவர் எழுதிய பல நூல்களிலும் அந்த எதிர்ப்பின் அடையாளங்களைக் காணலாம்.1917ஆம் ஆண்டு ரஷ்யப்புரட்சி நிகழ்ந்தபோது தாகூர் அதுகுறித்து தமது உள்ளத்துப் பிரதிபலிப்பை 'மாடர்ன் ரிவ்யூ' எனும் ஆங்கில மாதப் பத்திரிகையின் 1918 ஜூலை இதழில் வெளியிட்டார். இதோ அது- "ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியைக் குறித்து நாம் குறைந்த அளவே அறிந்துள்ளோம். நமக்குக் கிடைத்திருக்கும் உண்மைகளை வைத்துப் பார்க்கும்போது, மிகப் பெரிதாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள கொடுங்கோன்மையினால் அந்நாடு சந்திக்கிற கடுந்துயர்களுக்குக்கிடையே மனித ஆன்மாவின் வெல்லற்கரிய ஆற்றல் வெளிப்படுவதுதான் அங்கே நடக்கிறதா? நம்மால் முழுமையாகச் சொல்ல முடியவில்லை. குழப்பங்களிலிருந்து உருவெடுக்கிற நிராசையினால்அந்நாடு ஒருபோதும் வழிதவறிப் போய்விடாது. ஒருநாடு என்ற நிலையில் அந்நாடு ஒருவேளை தோற்றுப்போகலாம். ஆனாலும் மகத்தான அந்தத் தரிசனங்களின் பதாகையைக் கையில் ஏந்தியுள்ள தோல்வியானது ஒரு மங்கல்மட்டுமே- ஒரு புது யுகத்தின் சூரிய உதயத்திற்கு முன்னிருக்கும் நட்சத்திரத்தின் மங்கல் அது!"1991-இல் சோவியத் யூனியனில் நடந்த நிகழ்ச்சிப்போக்குகளைப் பார்த்து இது உலக சோசலிசத்தின் முடிவை குறிப்பதாக உள்ளதென மதிப்பீடு செய்தது எவ்வளவு அர்த்தமற்றது என்பதை அழுத்தம் தரப்பட்டுள்ள அவரது வாசகங்கள் தெளிவாக்குகின்றன. உலக சோசலிசத்தின் தற்காலிகத் தோல்விகூட அடுத்து நிகழும் நிரந்தர வெற்றிக்கு ஒரு வழிகாட்டி என்பதுதான் சோவியத் ரஷ்யா உருவாகி அரையாண்டு ஆவதற்கு முன்பே தாகூர் சொன்ன தீர்க்க தரிசனத்தின் பொருள்."கலை கலைக்காக' என்பதை தாகூர் முற்றிலும் நிராகரித்தார். இலக்கியப் படைப்புக்கு இலட்சியங்கள் அவசியம் என்கிற தமது கருத்தை தாகூர் இவ்வாறு விளக்கிக் கூறினார்: "கலை கலைக்காக, என்று வாதிடுகிறவர்கள் உண்மையைக் காண மாட்டார்கள். இலக்கியத்திற்கு வாழ்க்கையின் உண்மைகளுடன் இருக்கிற உறவை நிராகரித்தால் காவியம் முழுமை பெறுவதில்லை. வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டே எல்லாமும் நிலைபெற்றுள்ளன. இந்தக் கண்ணோட்டத்தை ஒரு கலைஞன் நிராகரித்துவிட முடியாது"இதன் பொருள், கலையின் அழகியல் அம்சத்தைத் தாகூர் புறக்கணிக்கிறார் என்பதல்ல. மாறாக, அழகியல் அம்சங்களுடன் மனித வாழ்க்கையைக் காண வேண்டுமென அவர் வலியுறுத்துகிறார். அதனால்தான் உலக மகாகவியாகிய அவரால் ரஷ்யப் புரட்சியை வரவேற்கவும், அந்தப் புரட்சி தோல்வியுற்றால்கூட எதிர்காலத்தில் ஒரு முன்னோடியாக அந்தத்தோல்வி இருக்கும் என்று சொல்ல முடிந்தது.-(தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அவர்களின் கட்டுரைகளும் உரைகளும் கொண்ட "காலத்தின்றெ நேர்க்குப் பிடிச்ச கண்ணாடி" எனும் மலையாளத் தொகுப்பு நூலிலிருந்து.உரை நிகழ்த்தியது 1992 நவம்பர் 29) நன்றி ; செம்மலர்

புத்தகங்களை நேசிப்போம்

புத்தகங்களை நேசிப்போம்
ஒரு வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட அழகான பொருள் ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.’’ஹென்றி வார்ட் பீச்சர் (Decoration of the heart)தனிமைத் தீவில் ஒரு வருடம் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்’ என்று பதிலளித்தார் ஜவஹர்லால் நேரு. ‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’ என்றார் பெட்ரண்ட் ரஸல். மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ‘கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’ என்றாராம் தந்தை பெரியார். பெண் விடுதலைக்கான ஒற்றைவரி தீர்வாக ‘என் மவுனம் நான் வாசித்த புத்தகங்களின் சாரத்தால் ஆனது’ என்ற ஹெலன் கெல்லர் தனது வாய் பேச முடியாத மவுனத்தை வர்ணித்தார். ‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்று கோரி ஏழு நாள் உண்ணாநோன்பிருந்து வென்றார் 29 வருடங்களாக சிறையிலிருந்த நெல்சன் மண்டேலா.பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே பெரியது. ஒரு கோடியே நாற்பது லட்சம் நூல்கள்! 150 மொழிகளில் புத்தகங்களை லெனின் பிறந்தநாள் பரிசாகப் பெற்றாராம்! குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்ட போது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம். ஊரை விட்டும் இனத்தை விட்டும் முப்பதாண்டு தள்ளி வைக்கப்பட்டு வேறு பெயரில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டபோது பார்த்த வேலை நூலக உதவியாளர் வேலை! ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின். ‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில். ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன்’ என்று பதிலளித்தாராம் மகாத்மா. விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது என பதிலளித்தாராம் அப்போதைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா. துப்பாக்கிகளைவிட பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர் கிங். எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் சில முகவரிகளைக் கொடுத்தபோது... எது நூலகத்திற்கு அருகில் உள்ளது என கேட்டாராம் டாக்டர் அம்பேத்கர். தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங். புத்தகங்களை நேசிப்போம்... வாசிப்போம். உலகப் புத்தக தின வாழ்த்துக்கள்.

இன்றைய இந்திய நிலை

  • உண்ண உணவு இல்லாதவர் 100 க்கு 77 பேர்
  • பட்டினி பட்டியலில் 66வது இடம்

17 மாநிலங்களில் பஞ்ச அபாயம்

மாற்றம் ஒன்றே தீர்வு சிந்திபீர்