வியாழன், 30 ஜூலை, 2009

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை - நேர்மையான தீர்வை நோக்கி நகரட்டும் தீவு நாடு கி. வரதராசன்
இலங்கையில் ராணுவத்திற்கும் எல்டிடிஇயினருக்கும் இடையே கடந்த 33 ஆண்டுகளாக நடைபெற்று வந்தமோதல் முடிவுக்கு வந்து விட்டது. இந்த ராணுவ மோதலில் எல்டிடிஇ தரப்பில் உயர்மட்டத் தலைவர்கள் உள்ளிட்டு பெரும் உயிர்ச்சேதத்தை எதிர் கொள்ள நேரிட்டுள்ளது; இலங்கை ராணுவத்திற்கும் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட் டுள்ளது.பல லட்சக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாறி, சொல்லொண்ணா துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.இலங்கையின் கடந்த கால வரலாற்றை உற்று நோக்குபவர் யாருக்கும், இந்த மோதலுக்கான விதைகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பேயே விதைக்கப்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தியா வைப் போலவே இலங்கையும் வெள்ளையர் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், இந்தியாவில் கடைப்பிடித்தது போன்றே அங்கேயும் வெள்ளையர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடித்தனர். மேற்கத்தியக் கல்வி பெறும் வாய்ப்பு பெற்றவுடன், அரசு உத்தியோகங்களுக்கான மோதல்களும் அங்கு சிங்களவர்கள் தமிழர்களிடையே எழுந்ததைக் காண முடியும். அதே போல இன ஆராய்ச்சி என்ற பெயரில் சிங்களவர்களை ஆரியர்கள் முன்னேறியவர்கள் என்றும், தமிழர்களைப் பின்தங்கியவர்கள் திராவிடர்கள் என்றும் பிரித்துக் காட்ட முயன்றதையும்காண முடியும். அங்கு இது மேற்கத்திய வரலாற்று வல்லுநர்களால் சிங்கள மக்களின் பெருமையைப் பேசுவது என்ற பெயரில் அழுத்தமாகச் செய்யப்பட்டது.விடுதலை பெற்ற இலங்கையில் ஆட்சிக்கு வந்தவர்கள், பிரிட்டிஷார் ஏற்படுத்திவிட்டுச் சென்ற ஏற்றத்தாழ்வான பாகுபாட்டைச் சரி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, தங்களுடைய சொந்த வர்க்க நலன்களையும், தங்கள் வாக்கு வங்கியையும் பாதுகாக்க அவை மேற்கொண்ட நடவடிக்கைகள், சிங்களம் மற்றும் தமிழ்மக்கள்மத்தியில் வேற்றுமையை வளர்த்தன. இன்றைய தினம் இலங்கையில், உள்ள மக்கள் தொகையில் 75 சதவிகிதத்தினர் சிங்கள மொழி பேசுபவர்கள். 69 சதவிகிதத்தினர் புத்தமதத்தைப் பின்பற்றுபவர்கள். இந்தப் பின்னணியில் ஆளும் கட்சியினர் தங்கள் மக்களை என்றென்றும் பிரித்து வைத்துக் குளிர் காய்ந்திட, சிங்கள மொழியையும், புத்த மதத்தையும் பயன்படுத்திக் கொண்டனர்.இத்தகைய ஏறுமாறான வளர்ச்சிப் போக்கில்,தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் எண்ணற்றப் போராட்டங்கள் வெடித்தன. 1956, 1958, 1978, 1981 மற்றும் 1983 களில் நடைபெற்ற இத்தகைய போராட்டங்கள் அனைத்தும் அக்காலங்களில் ஆட்சியிலிருந்தவர்களால் கடுமையான முறையில் நசுக்கப்பட்டன. இவற்றில் மிகவும் மோசமான நிகழ்வு, 1983 ஜூலையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகும். இந்த இனப்படுகொலையில் ஈடுபட்டக் கயவர்களில் ஒருவர் கூட இன்று வரை, சட்டத்தின் முன்கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடாகும். இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் இரண்டுமே ஆட்சி மொழிகளாக இருந்தன. அரசாங்கமும் மதச்சார்பற்ற அரசாக இருந்து வந்தது. ஆனால் 1972ஆம் ஆண்டைய அரசியல் சட்டத்திருத்தம் சிங்களத்தை இலங்கையின் ஆட்சிமொழியாகவும், புத்த மதத்தை நாட்டின் பிரதான மதமாகவும் பிரகடனம் செய்தது.ஆட்சியாளர்களின் இத்தகைய வெறித்தனமான நடவடிக்கைகள், தமிழ் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவானது. கம்யூனிச இயக்கங்களிலும் மற்றும் ஈழத்தில் சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக உருவாகியிருந்த இயக்கங்களிலும் இயங்கிவந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள்தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராட முன்வந்தனர். சோசலிசத் தமிழ் ஈழம் அமைப்பதே தங்கள் குறிக்கோள் என்று கூறினர். ஆனால் நாளடைவில் இதில் ஈடுபட்ட இளைஞர்கள் பல்வேறு சிறுசிறு குழுக்களாகச் சிதறுண்டனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, செல்வநாயகம் அவர்களால் அமைக்கப்பட்டது. இது பின்னர் எல்டிடிஇ, பிளாட், இபிஆர்எல்எப், ஈரோஸ், இபிடிபி, டெலோ என்று எண்ணற்றப் பிரிவுகளாக மாறிப் போயின. மேலும் அவை அனைத்தும் ஆயுதப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்தன. இவற்றில் எல்டிடிஇ தவிர மற்ற அனைத்து இயக்கங்களும் ஒரு கட்டத்திற்குப் பிறகு, பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு, தமிழர்கள் வாழும் பகுதிக்குக் கூடுதல் அதிகாரங்களுடன் புதிய அமைப்புச் சட்டம் உருவாக வேண்டும் என்று நிலை எடுத்தன.எல்டிடிஇஐப் பொறுத்தவரை இவர்கள் அனைவரும் துரோகிகள் என்றும், அரசின் ஏஜெண்டுகள் என்றும் குற்றம் சாட்டியது மட்டுமின்றி, இந்த இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களை, ஊழியர்களை ஆயுதத் தாக்குதல்கள் மூலம் கொன்றழிக்க முற்பட்டது. பல்வேறு குழுக்களைச் சேர்ந்த உமா மகேசுவரன், பத்மநாபா, அமிர்தலிங்கம், யோகேசுவரன், சட்டமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து முதலான தலைவர்கள் எல்டிடிஇயினரால் கொல்லப்பட்டவர்களில் ஒருசிலர். சரியாகச் சொல்வதென்றால், சிங்கள இன வெறியர்களால் கொல்லப்பட்டவர்களைவிட, எல்டிடிஇயினரால் கொல்லப்பட்ட தமிழர் தலைவர்களே அதிகம். இவர்களின் சர்வசாதாரணமான கொலை பாதக நடவடிக்கைகள், நம் நாட்டின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை மிகக் கொடுமையான முறையில் படுகொலை செய்யும் எல்லைக்கே சென்றன.இலங்கையை ஆண்ட ஜெயவர்த்தனே அரசாங்கம், சிங்கள வெறியுடன் ஆட்சியை நடத்தியது. தமிழர்களின் உரிமைகளையும் தமிழ் மொழியையும் புறக்கணித்தது. தமிழர் அமைப்புகளை ஆயுதப்போராட்டத்தை நோக்கி நகர்த்தியமைக்கு ஜெயவர்த்தனே அரசின் நடவடிக்கைகளே அடிப்படைக் காரணங்களாகும். அதே சமயத்தில், தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திட, இத்தகைய அர்த்தமற்ற யுத்தத்திற்கு ஒரு சுமூகமான தீர்வு கண்டிட எல்டிடிஇயினரும் தயாராக இல்லை. எல்டிடிஇயினரின் ஒரே குறிக்கோள் தங்கள் தலைமையின் கீழ் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதே. இத்தகைய போக்கானது அங்கு வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கவில்லை. மாறாக, சொல்லொண்ணா துன்பதுயரங்களையே கொண்டு வந்துள்ளது.எல்டிடிஇ தலைவர்பிரபாகரன்,ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனி ஈழத்தைஅமைக்கப் பலமுறை அறிவித்திருக் கிறார். இதற்கான போராட்டம் கடந்த 33 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஆனால், கடைசியாக, இலங்கை அரசாங் கம் எல்டிடிஇயினரின் கட்டுப்பாட்டி லிருந்த அனைத்துப் பகுதிகளையும் கைப் பற்றியிருக்கிறது. இவ்வாறு அங்கு நடைபெற்று வந்த யுத்தம், பல லட்சக்கணக்கான மக்களைக் காவு கொடுத்தபின், பல லட்சக்கணக்கான மக்களைத் தங்கள் சொந்த மண்ணிலேயே வீடற்றவர்களாக, அகதிகளாக, அடையாளமற்றவர்களாக ஆக்கியபின் துயரந்தோய்ந்த ஒரு முடிவுக்கு வந்துள்ளது. என்ன செய்ய வேண்டும்?இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்க ளர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த மோதலுக்கு ஓர் அரசியல் தீர்வு காண என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போதைய பிரதான கேள்வியாகும். இலங்கை வரலாற்றில்,1960ல் ஏற்பட்ட சாஸ்திரிசிரிமாவோ பண்டார நாயகா ஒப்பந்தம், 1987இல் ஏற்பட்ட ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனே ஒப்பந்தம் உள்ளிட்ட எண்ணற்ற முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வொப்பந்தங்கள் அனைத்திலுமே, தமிழர்களின் உரிமைகள் தொடர்பாகவும், தமிழர் வாழும் பகுதிகளில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது தொடர்பாகவும்எண் ணற்ற நல்ல சரத்துகள் இடம்பெற்றன. ஆனால்,அவை பெருமளவுக்கு அமல்படுத்தப்படவில்லை. இலங்கையில் ஆட்சியிலிருந்த இருக்கும், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியல் கட்சிகள் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் எவ்விதத் தீர்வும் காணப்படாமல், இனத் துவேஷம் தொடர்வதே தங்கள் அரசியல் எதிர்காலத் திற்குப் பாதுகாப்பு என்று கருதின. இந்திய அரசாங்கமும் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தேவகுண சேகரா இலங்கைப் பிரச்சனை பற்றி கூறிய கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. இடதுசாரிகளைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சனைக்கு விரைவாக தீர்வுகாணப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது ஒரு தேசியப் பிரச்சனை. ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சி இதற்குத் தீர்வு காண முடியாது என்பதுதான் வரலாறு நமக்கு அளித்துள்ள படிப்பினையாகும். கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கையின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். கூட்டு முயற்சி எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.இவை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்கள் மட்டுமல்ல; இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் சிங்கள மக்களில் ஜனநாயக உள்ளம் கொண்ட அனைவரின் சிந்தனையுமாகும். இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை, குறைபாடுகளை ஆட்சியாளர்கள் செவிமடுக்கத் தவறியதன் விளைவாகவே எல்டிடிஇ உருவானது என்பதை இலங்கை ஆட்சியாளர்கள் மறந்துவிடுவது மாபெரும் முட்டாள்தனமாகும். சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்களுக்கும் அனைத்து உரிமைகளும் நீட்டிப்பதை உத்தரவாப்படுத்த இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட இந்திய அரசு இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.யுத்தத்தில் துயருற்று வேதனைக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு ஐ.நா. ஸ்தாபனம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக உணவு மற்றும் மருந்துப் பொருள்களை அளிக்க இலங்கை அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.சொந்த மண்ணிலேயே வீடற்றவர்களாக மாறியிருக்கும் மக்களுக்கு இப்போது அளித்துள்ள வசதிகள் மிக மிகக் குறைவானவை. இவர்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு அவர்களை விரைவாக அவர்கள் சொந்த ஊரிலேயே வீடுகள் கட்டித் தந்து, புனரமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்.தற்போது வீடுகளை இழந்து, அகதிகள் போல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை நீண்ட காலத்திற்கு அவ்வாறே வைத்திருக்க, அரசு கருதியிருப்பதுபோல் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.மேலும், புதிதாகக் குடியமர்த்தப்படும் சமயத்தில் அங்கே சிங்களவர்களைக் குடியமர்த்திடவும் அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் விரைவாக அவர்களது பழைய இடங்களில் குடியமர்த்தப்படுவதே இத்தகைய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ள நிலைமையை மாற்றித் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற இலங்கை அரசு முயலவேண்டும். தமிழர் பகுதிகளில் உள்ள கெடுபிடி நடவடிக்கைகள் தளர்த்தப்பட வேண்டும். விசாரணையின்றி சிறையிலடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ள நிலையில், அங்கு வாழும் மக்களுக்கு சிறப்புப் பொருளாதாரத் திட்டங்களை அமல்படுத்திட வேண்டும்.இலங்கையின் ஆட்சிமொழியாக சிங் களம் இருந்தது. பின்னர் தமிழும் இலங்கையின் ஆட்சிமொழி என்று சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆயினும் இது இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.நாடு முழுவதும் இரு மொழிகளும் ஆட்சி மொழிகள் என்பது உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் கடைப்பிடிக் கப்பட வேண்டும். அரசாங்க வேலைகளில் போதிய அளவில் தமிழர்கள் அமர்த்தப்பட வேண்டும். இனியும் காலத்தை வீணடிக்காமல் நியாயமான மற்றும் நேர்மையான முறையில் அதிகாரப் பரவலாக்கும் திட்டத்தைஅரசு செயல்படுத்த வேண்டும்.இலங்கையில் இயல்பு வாழ்க்கைத் திரும்பிட சர்வதேச சமூகம், குறிப்பாக இந்தியா, முக்கிய பங்காற்றிட வேண்டும்.

நன்றி : முழக்கம்
ஊடகங்கள் - இழந்துபோன ஜனநாயகம் - பி. சாய்நாத் எஸ்.ஜி.ரமேஷ்பாபு
நமது நாட்டின் ஆன்மாக்கள் வாழுமிடம் என அழைக்கப்படும் இந்திய கிராமங்களின் அவல ரேகைகள் மீது பல ஆண்டுகளாக பயணம் செய்து அம்மக்களின் துயரங்களை பொதுத்தளத்தில் விவாதப் பொருளாக மாற்றி கவனத்தை ஈர்த்துவரும் பத்திரிகையாளர், மகசேசே விருதுபெற்ற சாய்நாத் அவர்கள் சென்னையில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நாளைய பத்திரிகையாளர் முன்பு ஆற்றிய உரையை இந்திய சமூக விஞ்ஞான கழகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. பத்திரிகைகள், தொலைகாட்சிகள், இணையம், வார,மாத இதழ்கள் என ஊடகங்கள் முன்னெப்போதையும் விட அதிகமாகவும், விரைவாகவும் செய்திகளை மக்களிடம் கொண்டு வருகின்றன. நடப்பில் உள்ள செய்தியை மக்களுக்கு கொடுப்பது என்ற ஊடக மரபைத் தாண்டி செய்தியை உற்பத்தி செய்யும் பணியை ஊடகங்கள் செய்து வருகின்றன. தாங்கள் நினைப்பதையே முக்கியத்துவம் நிறைந்த செய்தியாக மக்கள் மனதில் பதியவைக்க முடிகிறது. பிரம்மாண்டமான பன்னாட்டு நிறுவனங்கள் செய்தித்துறையில் எந்த செய்தியை பரபரப்பாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்பவையாக மாறிவருகின்றன. கேளிக்கைகளுக்கு முன்னுரிமைக் கொடுப்பதும், யதார்த்தத்தில் உள்ள மக்கள் பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளுவதும் சாதாரண நிகழ்வாக மாறிவருகிறது.தாங்கள் நினைப்பதுதான் உலகத்தின் முக்கிய செய்தி என்று செயல்படும் போக்கின் விளைவு என்னவென்றால் உலக அழகிப் போட்டிக்கு முதல் பக்கம் ஒதுக்குவதும், நமது நாட்டின் தலைநகரில் குளிரால் ஐந்து பேர் இறந்து போனது உள்பக்கத்தில் மிகச்சிறிய செய்தியாக வருவது என்றாகிவிட்டது. உலக அழகிப் போட்டியில் பங்கெடுத்த அழகிகளின் உணவு, உடை, அலங்காரம், அவர்களது உதட்டுச்சாயம், உள் ஆடைகளின் வண்ணம், முகத்தில் பூசும் கிரீம், பூனை நடையழகு போன்றவற்றை சிலாகித்து எழுதும் நமது ஊடகங்கள் குளிரில் மனிதன் எப்படி இறந்துபோவான் என்ற குறைந்தபடச விசாரணை கூட செய்வதில்லை. குளிரில் மனிதன் இறந்து போக சில காரணங்கள் உள்ளது. அவன் வீடற்றவனாக இருக்க வேண்டும். சாலை ஓரத்தில் வசிக்க வேண்டும். போர்த்திக்கொள்ள குறைந்தபட்ச போர்வை இல்லாமல் இருக்க வேண்டும். கடும் பட்டினியால் வாட வேண்டும் இவைகள் இணையும் போதுதான் மரணம் அவனைத் தழுவும். ஆக செய்தி நமது தேசத்தின் தலைநகரில் வீடற்ற, சாலைஓரத்தில் உடலை மறைக்க துணிகள் ஏதுமற்ற, பட்டினிகிடந்து மனிதர்கள் மரணிக்கின்றார்கள் என்பதுதான். ஆனால் இப்படிபட்ட செய்தியை நீங்கள் எதிர்பார்க்க முடியாது.பத்திரிகையாளர் சாய்நாத் இதுகுறித்து குறிப்பிடுகிறார், “நமது காலத்தின் நிகழ்வுகளை பிரதிபலிப்பதில் எவ்வுளவு பொருத்தமாக செயல்படுகிறோம் என்பதை அடிப்படையாக வைத்துக்கொண்டு பார்த்தால் நாம் எந்த அளவுக்கு தேறுவோம்? நமது நாட்டின் முக்கிய நிகழ்வுகள் என்பது ஷில்பா ஷெட்டியோ, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையோ அல்லது லக்மே இந்தியா பேஷன் வார கொண்டாட்டத்தையோ நான் குறிப்பிடவில்லை. இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூடத் தோன்றலாம். அப்படியென்றால் நமது காலத்தின் மகத்தான நிகழ்வுகள் என்பவை எவை? உதாரணமாக உலகளாவிய உணவு நெருக்கடி இப்போது நிலவுகிறது. நமது நாடு காலணி ஆதிக்கத்தில் இருந்தபோது சந்தித்ததைப் போன்ற நாடு முழுவதும் வேலை தேடி இடம் பெயரும் அவலநிலை பெருமளவிற்கு நிலவுகிறது....இல்லாத வேலையைத் தேடி லட்சக்கணக்கான மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். பசுமைப் புரட்சிக்கு பிறகு மிக மோசமானதொரு விவசாய நெருக்கடியை நாம் சந்தித்து வருகிறோம். பட்டினியும் அதிகரித்து வருகிறது. பத்தே ஆண்டுகளில் 1,66,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது 2002 ஆம் ஆண்டிலிருந்து அரைமணிநேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நமது காலத்தின் இத்தகைய நிகழ்வுகளுடன் நாம் எத்தகைய தொடர்பு வைத்திருக்கிறோம்? இந்த நிகழ்வுகளை நாம் எப்படி பிரதிபலித்திருக்கிறோம்?விவசாய தற்கொலைகள் அதிகம் நடந்த அல்லது நடக்கும் விதர்வபா பகுதிக்கு நமது நாட்டின் பிரதமர் பார்வையிடச் சென்ற போது அங்கு அவருடன் வெளியிலிருந்து சென்ற பத்திரிகையாளர்கள் வெறும் 6 பேர். ஆனால் அதேநேரத்தில் அங்கிருந்து ஒருமணி நேர விமானப் பயண தூரத்தில் உள்ள மும்பையில் நடந்த லக்மே இந்தியா பேஷன் வார நிகழ்ச்சியில், அதாவது பருத்தி ஆடைகள் அணிந்த மாடல்களின் அலங்கார அணிவகுப்பை காண, அதை செய்தியாக்க 512 அங்கிகாரம் பெற்ற செய்தியாளர்கள் வந்திருந்தனர். அதாவது பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயி நாளன்றுக்கு 8 பேர் சாவதைவிட, பருத்தி ஆடை அணித்த அழகிகள் நமது செய்தியாளர்களின் முக்கிய செய்தியாகின்றனர். இதற்கான காரணத்தை பின்வருமாறு சாய்நாத் விளக்குகிறார்.“அதிகமான ஏழை மக்களைக் கொண்ட இந்த நாட்டில் வறுமை பற்றிய செய்திகளைத் திரட்டுவதற்கு யாரும் கிடையாது. உலகத்திலேயே மிக அதிகமான அளவில் வீட்டுவசதி பிரச்சனையை சந்தித்து வரும் நமது நாட்டின் வீட்டு வசதி பற்றி எழுத செய்தியாளர்கள் இங்கில்லை. உண்மை என்னவென்றால் விவசாயத்திற்கான, தொழிலாளர்களுக்கென செய்தியாளர்கள் இல்லை என்றால், நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேரைப் பற்றி நாங்கள் பேசத் தயாராக இல்லை என்று கட்டமைப்பு ரீதியாக நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அவர்களைப் பற்றி உங்களுக்கு கவலையில்லை. நீங்கள் ஒரு வட்டத்திற்குள் அவர்களை அடைத்து வைக்கிறீர்கள். இது ஒரு விதத்தில் கட்டமைப்பிலிருந்து வெளியே நிறுத்தி வைப்பதைப் போலத்தான். இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல. விபத்தும் அல்ல. 70 சதவீதம் மக்களிடம் நாங்கள் பேச விரும்பவில்லை என்று சொல்கிற வகையில் ஓர் அமைப்பை நாம் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்’’லாபவெறியும் அதனால் எழுகிற பரபரப்பு செய்திகளும் உண்மையைப் பேச மறுக்கின்றன. ஊடகத்துறையில் ஏகபோகம் என்பது ஒரு தொழில் . தொலைகாட்சி சேனல்கள் என்பது ஒரு தொழில். செய்தித்தாள்கள் என்பது ஒரு தொழில். ஆனால் இதழியல் என்பது ஒரு தொழில் அல்ல. இதழியல் என்பது ஒரு சேவை. என்று குறிப்பிடும் சாய்நாத் சில கேள்விகளை எழுப்புகிறார்.“வறட்சியின் விளைவாக ஆஸ்திரேலியாவில் 10,000 குடும்பங்கள் விவசாயத்தை கைவிட்டுவிட்டு இடம் பெயர்ந்தன என்ற செய்தியை தொலைகாட்சியில் பார்த்தேன். ஒரு முக்கியமான செய்தி இது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் வறட்சி என்ற பேச்சே இல்லாமல் 80 லட்சம் இந்திய விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டிருக்கிறார்கள். அதாவது 10 வருட காலத்தில் 5 நாட்களுக்கு 10,000 குடும்பங்கள் விவசாயத்தை கைவிட்டிருக்கின்றன. இந்தச் செய்தியை நாம் எங்கே கொடுத்தோம்? சில விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் ஒட்டுமொத்தமாய் என்ன? 1991 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 11 கோடியே 10 லட்சம் விவசாயிகள் இருந்தனர். 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இது 10 கோடியே 30 லட்சமாக குறைந்துள்ளது. இந்த 80 லட்சம் பேர் எங்கே போனார்கள்? அவர்கள் எங்கே இடம் பெயர்ந்து போனார்கள்? இந்த பூமிக் கண்டத்திலேயே மிகப்பெரிய செய்திகளில் ஒன்று இது. இருந்தாலும் அந்த செய்தியை கொடுக்க நாம் தவறியிருக்கிறோம். ஆஸ்திரேலியாவில் 10,000 குடும்பங்கள் ஆனால் இந்தியாவில் 5 நாளுக்கு 10,000 குடும்பங்கள். உண்மையில் இந்தியாவில் இடப் பெயர்வு 2001 க்கு பிறகுதான் துவங்கியது என்பதையும் கவனத்தில் நிறுத்துங்கள். டில்லியில் மட்டுமே ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 2 லட்சம் பெண்கள் வீடுகளில் வேலை செய்து வருகின்றனர். அவர்களது வாழ்க்கை பற்றிய நமது கருத்து என்ன? ஜார்கண்டில் விவசாயத்தை கைவிட்டுவிட்டு அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். இந்தச் செய்தியையாவது நாம் சொன்னோமா? இல்லவே இல்லை!”இப்படியாக பத்திரிகைகளின் தார்மீகம் குறித்து கேள்விகளை எழுப்பிக்கொண்டே செல்கிறார். இன்னும் கூட நிறைய கேள்விகள் மிச்சமிருக்கிறது. நமது தேசத்தின் அடிப்படை மக்கள் பிரச்சனைகளில் மக்களுக்கு ஆதரவாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்காத ஊடகங்கள் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் இடதுசாரிகளின் தோல்வியை இந்த நாட்டின் கொண்டாட்டமாக சித்தரித்தன. ஒழிந்தார்கள் இடதுசாரிகள் இனி இந்தியா ஒளிரும் என்றெல்லாம் எழுதி மகிழ்ந்தனர். ஐந்தாண்டுக்காலம் பல “ஆக்கப்பூர்வமான” பணிகளுக்கு இடதுசாரிகள் தடையாக இருந்ததாக குற்றம் சாட்டினர். ஆனால் இடதுசாரிகள் எண்ணிக்கை குறைந்ததால் ஆளும் காங்கிரஸ் தனது “ஆக்கப்பூர்வமான” பணிகளை துவக்கிவிட்டது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பெருமளவு விற்பனை செய்யவேண்டும் நிதித்துறையில் சீர்திருத்தத்தை கொண்டு வரவேண்டும். இந்திய முதலாளிகளுக்கு கூடுதல் வரிகளையும், வரிகளுக்கான கூடுதல் கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும். உரம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலைக் “கட்டுப்பாட்டை” அகற்ற வேண்டும். ரயில்வே, சுரங்கம், அணுசக்தி போன்ற துறைகளில் அரசின் மேலாண்மை நீக்கப்பட வேண்டும். பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு துறைகளில் 49 சதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும், சில்லரை வணிகத்துறையில் அந்நிய பகாசூர கம்பெனிகள் முதலீட்டை அனுமதிக்க வேண்டும்என்றும் 2009 2010 க்கான ஆய்வறிக்கை கூறுகிறது.ஆக சாதாரண உழைப்பாளி மக்கள் வாழ்க்கை இன்னும் மோசமான நிலைக்கு கீழே செல்ல இருக்கிறது. கோடிக்கணக்கான சில்லரை வர்த்தகர்கள் அதன் தொழிலாளிகள் வீதிக்கு வர இருக்கின்றனர். ஒவ்வொரு பட்ஜெட்டுக்கும் 65 ஆயிரம் கோடியை அரசுக்கு வாரி வழங்கிய காப்பீட்டு துறை சீரழிய இருக்கிறது. இந்த ஆபத்தான பணிகளைத்தான் இடதுசாரிகள் கடத்த ஐந்தாண்டுகளாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இப்போது ஆட்சியாளர்களை நாடாளுமன்றத்திற்குள் தடுக்க பலம் பொருந்தியவர்கள் இல்லை. ஆனால் மக்கள் மன்றத்தில் வழக்கம் போல இடதுசாரிகள் போராடுவார்கள் ஆனாலும் நமது ஊடகங்கள் அவர்களது தியாகத்தையும் போராட்ட குணத்தையும் கொச்சைப்படுத்தியே தீரும். அதற்கு சிறந்த உதாரணம் மேற்குவங்கம் பற்றி தற்போது ஊடகங்கள் பரப்பிவரும் செய்திகள். ஆயுத பலத்துடன் அச்சத்தின் பிடியில் மக்களை மிரட்டி வைத்திருந்த மாவோயிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் செய்த அக்கிரமங்களை, அவர்கள் மக்களை கிராமம் கிராமமாக வெளியேற்றியதை ஒளிபரப்பாத, அச்சிடாத ஊடகங்கள் அவர்கள் இராணுவத்தால் தாக்கப்படுவதை மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்தி அங்கு கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளதை போல சித்தரிக்கின்றனர்.இந்தப் பின்னணியில் ஊடகங்களின் அரசியலை, அவைகளின் சமூகப் பார்வையை அறிந்துக்கொள்ள சாய்நாத்தின் இந்த நூல் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். வாசிக்க.. விவாதிக்க.. இன்னும் பலகேள்விகளை எழுப்ப வாசிப்போம்!