வெள்ளி, 17 ஏப்ரல், 2009

அறிவாயுதம் ஏந்துவோம்

நூல் விமர்சனம் அறிவாயுதம் ஏந்துவோம் பால்ராஜ்
சமூக களத்தில் சுரண்டல், ஒடுக்குமுறை இரண்டையும் ஒருசேர எதிர்த்து போரிடும் ஒவ்வொருவரும் ஆய்ந்து கற்றுத்தேர வேண்டிய அற்புத நூல் மார்க்ஸிய மெய்ஞ்ஞானம். தத்துவம், அரசியல், பொருளாதாரம் என்ற மூன்று துறைகளிலும் ஒரு மார்க்ஸியவாதி தன்னை தொடர்ந்து செழுமைப்படுத்தவேண்டிய அவசியத்தை இந்நூலின் அசிரியர் ஆரம்பத்திலேயே குறிப்பிடுகிறார். இந்நூலாசிரியர் சரளமான எளிய மொழி நடையில் மார்க்ஸிய மெய்ஞ்ஞான தத்துவத்தை விளக்குகிறார். எடுத்துக்காட்டாக தத்துவம் என்றால் என்ன? என்ற கேள்வியை எழுப்பி, எவற்றையெல்லாம் நடைமுறையில் மெய்பித்து சாதிக்க விரும்புகிறோமோ அவற்றைப் பற்றி நாம் பெற்றிருக்கும் அறிவுதான் தத்துவம் என்கிறார். மேலும் அவரே ஒரு செயல் துணிவுள்ள ஊழியனோ, தொழிலாளியோ பிசகில்லாமல் புரட்சிக்குரிய காரியங்களை செய்துகொண்டு போக வேண்டுமானால் அவனுக்கு விஷயங்களை சரிவர ஆய்ந்தறிந்து அதனடிப்படையில் தர்க்கம் செய்து முடிவுக்கு வருவதற்கான ஆய்வுமுறை அவனுக்கு இருக்கவேண்டும் என்றும் என்றைக்கும் ஒரே மாதிரி இல்லாமல் மாறிக் கொண்டே இருக்கின்ற நிலைமைகளை அலசி ஆராயும் ஆய்வு முறை தேவை என்றும் கூறுகிறார். அந்த ஆய்வு முறை இயக்கயியல் பொருள் முதல் வாதம் என்ற மெய்ஞ்ஞானத்தில் காணக்கிடக்கிறது என்கிறார்.இயக்கவியல் லோகாயதவாதம் அல்லது இயக்கவியல் பொருள் முதல் வாதம் குறித்த தெளிந்த விளக்கமே இந்நூலாகும். மேலும் உலகம் சம்பந்தப்பட்ட அகண்ட இந்த பிரபஞ்சம் இயற்கை, மனிதன் ஆகியவற்றின் இருப்பும் மூன்றிக்குமான தொடர்பையும் விஞ்ஞானரீதியாக விளக்குவதே இம்மெய்ஞ்ஞானத்தின் அடிப்படை நோக்கம். ஐம்புலன்களான கண், காது, மூக்கு,வாய்,மெய் (தோல்) இதன்மூலமாகக் கிடைக்கின்ற காட்சி அறிவு, ஒலி அறிவு, மணம் குறித்த அறிவு, ருசி குறித்த அறிவு, தொடு அறிவு என புலனறிவுகளையும் இதன் மூலமாக சேகரித்தவற்றைக் கொண்டு மனிதனின் கருத்துத்துறை செயல்பாடுகள் குறித்தும் தெளிவுபட விளக்குகிறார். மூளையின்மீது விழும் பொருட்களை பிரதி பிம்பங்கள்தான் சிந்தனை என்றும் பொருட்கள் இன்றி சிந்தனை இல்லை என்றும் பொருள் முதல் வாதத்தை சிறப்பாக விளக்குகிறார். பொருள்தான் சிந்தனையை சிருஷ்டிக்கிறது. சிந்தனைப் பொருட்களை சிருஷ்டிப்ப தில்லை என்று விளக்கி, இவ்விவாதத்தை மீட்டிச்சென்று கடவுள் தன் சிந்தனையால்தான் இந்த உலகைப் படைத் தாரா என்ற கேள்வியையும் எழுப்புகிறார். சாதாரணமாக இப்பிரபஞ்சத்தில் இருக்கின்ற கோடிக்கணக்கான பொருட் களையும் உயிர்களையும் கடவுள் படைத்திருக்கவே முடியாது என்ற முடிவுக்கு வாசகனை தத்துவார்த்த துறையில் வளர்த்தெடுக்கிறது இந்நூல். வறட்டுத்தனமாக நாத்திகக் கருத்துகளை பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு விஞ்ஞான ரீதியாக நாத்திகம் விளக்கப்படுகிறது.இந்த நூலை படித்து தத்துவத்தை அறிந்து கொள்வதன்மூலம் அது ஒரு ஊழியனுக்கு எவ்வாறு உதவ முடியும் என்றால், நம்மில் பலர் மனிதனுடைய இன்றைய பிரச்சனைகளுக்கு கடவுள்களை, விதியை, முற்பிறவியை, பேய் பிசாசுகளை, பில்லி சூனியத்தையும் சிலர் தன்னம்பிக்கை,, சுயமுன்னேற்றம், சுயதொழில், கடின உழைப்பு இவைகளில்லாததும் பிரச்னைகளுக்கு காரணம் என அறிவியல் ஆதாரமற்ற காரணங்களை முன்வைக்கின்றனர். இந்நூல் மனிதனுக் குள்ள சூழலே வாழ்நிலையை தீர்மானிக்கின்றது என விஞ்ஞானப் பூர்வமாக நிறுவி மனிதனுடைய இன்றைய பிரச்னை களுக்கு அவன் சார்ந்திருக்கும் சமூக அமைப்பே காரணம் என விளக்குகிறது. எனவே, சமூக அமைப்பை மாற்றப்போராடும் ஒரு ஊழியனுக்கு இந்நூல் ஒரு கலங்கரை விளக்கம்.புத்தகத்தின் பெயர் : மார்க்ஸிய மெய்ஞ்ஞானம்ஆசிரியர் : ஜார்ஜ் பொலிட்ஸர்,வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவ பிரச்சாரகர் நாஜிக்களால் கொலை செய்யப்பட்டவர். நன்றி : முழக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக