வெள்ளி, 17 ஏப்ரல், 2009

நீதியும் அமைதியும்

நீதியும் அமைதியும்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பிப்ரவரி 19 அன்று நிகழ்ந்த காட்சியை ஒருகணம் நம் மனத்திரையில் போட்டுப் பார்த்தால் வழக்கறிஞர்களின் மீதான காவல்துறையின் ஒரு படையெடுப்பாகவே தோன்றும்!கையில் இறுக்கிப் பிடித்த லத்திக் கம்புகளோடு அந்தக் காக்கிச் சட்டைக் காவலர்கள் ஓர் அசுரத்தன தாக்குதலையே அரங்கேற்றினர்.ஏராளமான வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்திற்கு வந்த பொதுமக்கள் என அனைவரும் ரத்தம் சிந்தும்படித் தாக்கப்பட்டனர். அந்த உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரே இத்தகைய கொடூரத் தாக்குதலுக்குள்ளானார் எனும் போது போலீசின் கட்டறுந்த அத்துமீறல் எந்தளவுக்குச் சென்றுள்ளது. என்பது தெரிகிறது. நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் கூட போலீஸின் குண்டாந்தடித் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களிடையே நிகழ்ந்த மோதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த போலீஸ் இங்கே நீதிமன்றத்தில் படுவேகமாய்ச் செயல்பட்டு ஒரு வன்முறையே நடத்தியது.நீதிமன்றம் எத்தனையோ வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால் தன் வளாகத்தினுள் இத்தகைய போர்க்களம் போன்ற சம்வத்தைச் சந்தித்ததில்லை.இந்துத்துவா - சனாதனக் காவலர் சுப்பிரமணியசாமியின் மீது முட்டை வீசித்தாக்கிய வழக்கில் - தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை என்பதன் பேரால் - நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு பதட்டச் சூழல் உருவாக்கும் விதமாக காவலர்படை குவிக்கப்பட்டதும், தொடர்ந்து காவல்துறையினர் நடந்து கொண்டவிதமும் ரொம்ப அருவருக்கத்தக்கதாகும்; ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். சுப்பிரமணியசாமி மீது நடத்திய முட்டை வீச்சுத் தாக்குதல் என்பது ஒரு வெறுக்கத்தக்க செயல்தான்.அண்மைக்காலமாகத் தமிழகத்தில், தேர்தல் களத்தின், கல்லூரி, நீதிமன்ற வளாகங்களின் சூழல்கள் கெட்டு வருகின்றன. அவற்றுக்குரிய அமைதியான- ஜனநாயக நெறியான சூழல்கள் நிலவவேண்டும் என்பது எல்லாரின் எதிர்பார்ப்பு.வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய - அதற்குப் பொறுப்பான காவல்துறையினர் மீது தமிழக அரசு சட்ட ரீதியான உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். ஆனால், இத்தாக்குதல் பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கக்கூட அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.இந்நிலையில் தமிழகமெங்கும் வழக்கறிஞர்களின் போராட்டம் தொடர்கிறது. தாக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதும், நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் அமைதியான சூழல் நிலவச் செய்வதும் தமிழக அரசின் உடனடிக் கடமையும் பொறுப்புமாகும். நன்றி : செம்மலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக